தேங்காய் சட்னி
தென்னிந்திய சிற்றுண்டியில் எதுவாக இருந்தாலும் அதனுடன் வெண்ணிற தேங்காய் சட்னி இல்லாமல் போகாது. கருவேப்பிலை, கடுகு, வரமிளகாய் தாளித்த வாசனை தலை தூக்க இந்த சட்னியை விரும்பாத யாரும் இருக்கமாட்டார்கள். இட்லி, தோசை நாம் சாப்பிட ஒரு முக்கியமான காரணம் இந்த சட்னி தான். இதை செய்வது மிக மிக சுலபமான ஒன்று. இட்லியை வேக வைத்து எடுப்பதற்கு முன், தோசை சுடுவதற்கு முன் இதை செய்துவிடலாம்.
தேங்காய் சட்னியை பல விதமாக செய்யலாம். சிற்றுண்டியை பொருத்து நாம் இதை மெருகு கூட்டலாம். இட்லி, தோசைக்கு இந்த சட்னியில் கொஞ்சம் அதிகம் சேர்த்தால் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும். பஜ்ஜி, பூரி, வடை, போண்டாவிற்கு கெட்டி சட்னி தான் சரி.
இதில் ஒரு நூறு வகைகள் கூட செய்யலாம் என்றால் மிகையாகாது. கீழே சில குறிப்புகள் தந்துள்ளேன். வசிக்கும் இடம் பொருத்தோ, சிற்றுண்டி பொருத்தோ சிலவற்றை சேர்த்து சுவை மாற்றலாம். கீழே நான் பொங்கல், இட்லி, தோசைக்கு தகுந்த தேங்காய் சட்னி செய்முறையை பகிர்ந்துள்ளேன்.
தேங்காய் சட்னி செய்ய வீடியோ வழிமுறைகள்
செய்முறை
தேங்காய் சட்னி
Ingredients
- துருவிய தேங்காய் : 1 கப் புதிதாக உடைத்து துருவியது
- பொட்டு கடலை : ¼ கப் வறுத்த கடலை பருப்பு
- பச்சை மிளகாய் : 3 தேவைகேற்ப
- இஞ்சி : சிறு துண்டு கோலிகுண்டு அளவு
- உப்பு : தேவைகேற்ப
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் : 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்தால் சுவை அதிகம்
- கடுகு : ¼ தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு : 1 தேக்கரண்டி விரும்பினால்
- கருவேப்பிலை : 1 கீற்று
- வரமிளகாய் : 2 உடைத்தது
Instructions
- செய்ய தேவையான பொருட்கள் பகுதியில் உள்ளவற்றை மிதமான சூட்டில் உள்ள குடிநீரில் அரைத்துக் கொள்ளவும். சட்னி கெட்டியாக வேண்டுமானால் குறைவாக தண்ணீர் சேர்க்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி,கடுகு,உளுத்தம்பருப்பு, வரமிளகாய் ,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அரைத்து வைத்துள்ள சட்னியை கிண்ணத்திற்கு மாற்றவும்.அதில் தாளித்து வைத்ததை சேர்த்து கலக்கவும்.
குறிப்புகள்
- புதிதாக உடைத்து துருவிய தேங்காயை வைத்து சட்னி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
- முற்றாத பிஞ்சு தேங்காய் என்றால் உத்தமம். வெளிநாட்டில் வாழ்பவர்கள் இந்திய கடைகளில் தேங்காய் கிடைக்காத பட்சத்தில் துருவிய தேங்காயை அல்லது ப்ரிஞ்சில் உறைந்த தேங்காயை உபயோகிக்கலாம்.
- மிதமான சூட்டில் உள்ள குடிநீரில் தேங்காய் சட்னி அரைப்பதால் நன்றாக அரைப்படும். குடிநீரில் தான் அரைக்க வேண்டும்.எனெனில் நாம் சட்னியை கொதிக்க வைக்க போவதில்லை.
- சிலர் சட்னி வெள்ளையாக இருக்க விரும்புவார்கள். அவர்கள் 2 ஸ்பூன் பால் சட்னி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- தேங்காய் எண்ணெய் சேர்த்தால் தாளித்தால் சுவை அதிகமாக இருக்கும்.
பரிமாற பரிந்துரைப்பது
- இட்லி, தோசை, வடை, பொங்கல் , உப்புமா, பூரி, சப்பாத்தி, பஜ்ஜி உடன் தேங்காய் சட்னியை பரிமாறலாம்.
- தென்னிந்திய சமையலில் இந்த சட்னி நிறைய பததார்த்தங்களுடன் சேரும்.
மாறுபாடாக பரிந்துரைப்பது
ஏற்கனவே சொன்னது போல தேங்காய் சட்னியை பல விதமாக செய்யலாம்.
- மிக சிறிய அளவு புளி சேர்த்து அரைக்கலாம். அது ரவா உப்புமாவிற்கு நன்றாக இருக்கும்.
- 2-3 பற்கள் பூண்டுகள் சேர்த்து அரைத்தால் அது ஒரு வித்தியாசமான சுவை அளிக்கும். அடை பெசரட்டு உடன் அது பொருந்தும்.
- சிகப்பு தேங்காய் சட்னி: பச்சை மிளகாயிற்கு பதில் வரமிளகாய் சேர்த்து அரைத்தால் வேறு சுவை வரும். அல்சர் அதிகம் இருந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து வரமிளகாய் சேர்க்கலாம். வரமிளகாய் ஊற வைத்தும் அரைக்கலாம். தாளிக்கும் போது கொஞ்சம் பெருங்காயம் சேர்க்கவும்.
- கொத்தமல்லி தேங்காய் சட்னி (பச்சை தேங்காய் சட்னி அல்லத் கொத்தமல்லி சட்னி): ¼ கப் பச்சை கொத்தமல்லி நன்றாக கழுவிய பின் சேர்த்து அரைக்கலாம். இதை சாண்ட்விச் மற்றும் சப்பாத்தியில் சாஸ் போல் தடவி சாப்பிடலாம்.