சப்பாத்தி
சப்பாத்தி வட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய இடங்களில் பிரதான உணவாக உள்ளது. இது மிகவும் சத்துள்ள உணவாகும். சத்து நிறைந்த முழு கோதுமையில் அரைத்த மாவில் தயாரிக்கப்படுகிறது. பாரம்பரியமாக கோதுமை அரவை கல்லில் அரைப்பார்கள். ஆனால் தற்போது கோதுமை மாவு பெரிய அளவில் மாவு மில்களில் அரைக்கப்படுகிறது. அதிகமான பிராண்ட்களில் தற்போது கோதுமை மாவு கடைகளில் கிடைக்கிறது. இது ஆட்டா என்று கூறப்படுகிறது.
சப்பாத்தி கோதுமை மாவு, தண்ணீர் சேர்த்து மாவாக பிசைந்து தயாரிக்கப்படிகிறது. பிசைந்த மாவை சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் சிறிய உருண்டைகளாக்கி சப்பாத்தி கட்டையில் தேய்த்து தயாரிப்பார்கள். ஆனால் நமது மூதாதையர்கள் உள்ளங்கையில் வைத்து தட்டி தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள். பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து சுட்டு எடுப்பார்கள். சில இடங்களில் பாதி வெந்த சப்பாத்தியை நேரடியாக நெருப்பில் காட்டி சுடுவார்கள். இந்த சப்பாத்தி பலூன் போன்று உப்பி மிகவும் மிருதுவாக இருக்கும்.
சப்பாத்தி தயாரிப்பது சமையல் புதிதாக செய்பவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். சிறிதளவு பழகிவிட்டால் சுலபமாக தயாரிக்க முடியும். இங்கு நான் மிகவும் எளிய முறையில் சுவையாக தயாரிப்பதை விளக்கி உள்ளேன். இம்முறையில் தயாரித்தால் உங்களுக்கு விருப்பமான வகையில் இருக்கும்.
சப்பாத்தி தயாரிப்பு முறை
சப்பாத்தி
Ingredients
- கோதுமை மாவு – 2 கிண்ணம்
- உப்பு – 1 தேக்கரண்டி
- எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
- வெதுவெதுப்பான தண்ணீர் – 1/2 கிண்ணம்
Instructions
- அகலமான ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
- வெதுவெதுப்பான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பிசையவும். முழுவதும் தண்ணீர் சேர்ப்பதற்கு பதில் தண்ணீருடன் வெதுவெதுப்பான பால்/ அல்லது தயிர் சேர்த்து கொள்ளலாம்.
- சிறிதளவு எண்ணெய் சேர்த்து மாவை மிருதுவாக பிசைந்து கொள்ளவும். இவ்வாறு செய்வது சப்பாத்தி மிருதுவாக இருக்க உதவும்.
- ஈரமான துணியால் மூடி 15 நிமிடங்கள் வைக்கவும். இதுவும் முக்கியமான ஒன்றாகும்.
- எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- ஒவ்வொரு உருண்டையையும் கோதுமை மாவில் பிரட்டி படத்தில் காட்டியுள்ளபடி கட்டையால் வட்டமாக தேய்த்து கொள்ளவும்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் தேய்த்து வைத்த சப்பாத்தியை போடவும்.
- பிரவுன் நிற புள்ளிகள் தெரிந்தவுடன் (30 நொடிகளில் ) சப்பாத்தியை திருப்பி விடவும்.
- சில துளிகள் எண்ணெய் மேலே ஊற்றவும். அடிபாகத்தில் பிரவுன் நிற புள்ளிகள் தெரிந்தவுடன் மீண்டும் சப்பாத்தியை திருப்பி விடவும். மேலும் சிறிது எண்ணெய் சேர்க்கவும்.
- சப்பாத்தியின் ஓரங்களை பேப்பர் டவல் அல்லது ஒரு துணி அல்லது தோசை கரண்டி இதில் ஏதாவது ஒன்றால் அழுத்தி விடவும். இதனால் சப்பாத்தி நன்றாக உப்பி வரும்.
- இரண்டு பக்கமும் பிரவுன் நிற புள்ளிகள் தெரிந்தவுடன் சப்பாத்தியை எடுத்துவிடவும். அதிக நேரம் வைத்தால் மிருதுவாக இருக்காது.
- தயாரித்த சப்பாத்திகளை ஹாட் பாக்ஸில் பரிமாறும் வரை வைக்கவும். இதில் வைப்பதால் சப்பாத்தி மிருதுவாக இருக்க உதவும்.
வேறுபாடாக பரிந்துரைப்பது
- அதிகமான இடங்களில் சப்பாத்தி கல்லில் பாதி அளவு வேகவைத்து உடனே நேரடியாக அடுப்பில் காட்டி எடுப்பார்கள். இம்முறையில் செய்வது சப்பாத்தி நன்றாக உப்பி வரும். இவ்வாறு தயாரிக்கப்படுவது புல்கா எனப்படுகிறது.
பரிமாற பரிந்துரைப்பது
- பொதுவாக சப்பாத்தி எல்லா வகை சைவம், அசைவம் வகை குழம்பு வகைகளுடன் பரிமாறப்படுகிறது. இந்தியர்களின் தினசரி உணவு வகைகளில் ஒன்றாகும்.
- ஊறுகாய் மற்றும் தயிர் பச்சடியுடனும் உண்ணலாம்.
- தென்னிந்தியாவில் குருமா வகைகளுடன் பரிமாறுவர்.
- குழந்தைகள் ஜாம் அல்லது சர்க்கரை சப்பாத்தியின் மேல் பரத்தி சுருட்டி உண்பதை விரும்புவார்கள்.
2 kinnam chapathi mavil ethanai chapathi varum
10ல் இரூந்தது 12 சப்பாத்திகள் வரும்.