பூரி
பூரி எனப்படுவது எண்ணெயில் பொரித்தெடுக்கபடும் ஒரு உணவு வகையாகும். இது இந்தியா முழுவதும் மிக பிரபலமான ஒன்றாகும். இதை பொதுவாக உருளைகிழங்கு மசாலுடன் பரிமாறுவர். பூரி கிழங்கு அல்லது ஆலு பூரி அல்லது பூரி பாஜி என்று கூறுவார்கள். ரவை அல்வா (அல்வா பூரி), குருமா, சென்னா மசாலா, ஸ்ரீகண்ட், பாசந்தி, மற்றும் ஆம்ராஸ் (மாம்பழ கூழ்) ஆகியவற்றுடன் பரிமாறுவார்கள்.
எனது வீட்டில் வார விடுமுறை நாட்களில் குழந்தைகள் பூரி உண்பதை விரும்புவார்கள். முக்கிய நாட்கள், விழாக்கள், பண்டிகை நாட்கள் சமயங்களில் தயாரிப்பர். பொதுவாக பூரி முழு கோதுமையில் அரைத்த மாவில் தயாரிக்கப்படுவதாகும். மைதா மற்றும் ரவை சேர்த்தும் செய்வர். முதலில் தயாரிக்கப்படுவது பட்டூரா என்றும், இரண்டாவதாக உள்ளது கோல்கப்பா பூரி அல்லது பாணி பூரி என்பர். இவற்றை நான் தனிதனியாக உங்களுடன் பகிர்கிறேன்.
பூரி தயாரிப்பு முறை
பூரி
Ingredients
- கோதுமை மாவு / ஆட்டா – 2 கிண்ணம்
- உப்பு – 1 தேக்கரண்டி
- வெள்ளை ரவை – 2 மேசைக்கரண்டி
- தண்ணீர் – 1 கிண்ணம்
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
Instructions
- கோதுமை மாவு, உப்பு , ரவையை தண்ணீர் சேர்த்து பிசையவும். சப்பாத்திக்கு பிசையும் மாவை விட சற்று தண்ணீர் குறைவாக சேர்த்து கெட்டியாக பிசையவும்.
- நன்றாக பிசைந்து 15-20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- ஓரே அளவில் உருண்டைகளாக்கி கொள்ளவும்.
- வட்ட வடிவமாக சப்பாத்தியை விட சிறிதாக தேய்த்து கொள்ளவும். சற்று தடிமனாக தேய்க்க வேண்டும்.
- ஓரு வாணலியில் எண்ணெய் சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடான பின்னர் தேய்த்து வைத்த பூரியை எண்ணெயில் போடவும்.
- ஒரு கரண்டியால் நடுவில் அழுத்தி விடவும். இது பூரி உப்பலாக வர உதவும்.
- நன்றாக இருபுறமும் வெந்து உப்பி வந்தவுடன் எண்ணெயில் இருந்து எடுத்து பேப்பர் டவளில் போட்டு அதிகப்படியான எண்ணெயை வடியவிடவும்.
- உருளைகிழங்கு மசாலா அல்லது சோலே மசாலாவுடன் பரிமாறவும்.
குறிப்பு
- ரவை சேர்ப்பதால் பூரி நீண்ட நேரம் உப்பலாக இருக்க உதவும். இது அவரவர் விருப்பம். விருப்பபட்டால் சேர்த்து கொள்ளலாம்.
- இதே முறையில் பட்டூரா, பாணி பூரி தயாரிக்கலாம். பட்டூரா தயாரிக்க மைதா மாவில் பெரிய உருண்டைகளாக எடுத்து தேய்த்து பெரிய பூரிகளாக பொரிக்க வேண்டும். பாணி பூரி தயாரிக்க மைதா, ரவை சேர்த்து பிசைந்த மாவில் மிக சிறிய உருண்டைகளாக எடுத்து தேய்த்து பொரிக்கவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- தென்னிந்தியாவில் பூரி பொதுவாக உருளை கிழங்கு மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. (பூரி உருளைகிழங்கு மசாலா). ஆனால் வட இந்தியாவிலும் இது மிகவும் பிரபலமானது ஆகும். (ஆலு பூரி)
- மைதா மாவில் தயாரிக்கப்படும் பெரிய பூரிகளான பட்டூரா சென்னா மசாலாவுடன் பரிமாறப்படுகிறது.(சோலே பட்டூரே)
- மஹாராஷ்ட்ராவில் பூரி மாம்பழ கூழில் தயாரித்த ஒரு இனிப்பு உணவாக பரிமாறப்படுகிறது. இது ஆம்ராஸ் பூரி எனப்படுகிறது.
- பூரி பல வகை அல்வா வகைகளுடன் பரிமாறப்படுகிறது. இதில் மிகவும் பிரசித்தமான அல்வா, பூரி வகை பூரியும், ரவா கேசரியும் ஆகும்.
- குஜராத்தில் ஸ்ரீகண்ட் பூரி மிகவும் பிரபலமானதாகும். பூரி ஸ்ரீகண்ட் (தயிர் சேர்த்து தயாரிக்கப்பட்டது)