அடை
சில சமயங்களில் நீங்கள் சப்பாத்தி மாவு இல்லாமல், அல்லது இட்லி, தோசை மாவும் இல்லையென்றால் என்ன மாற்றாக செய்வது என்பது கடினமான காரியம். அதற்கு தமிழர்களின் மாற்று யோசனையாக பாரம்பரியமான உணவு ஒன்றுள்ளது. நான் அடை பற்றி பேசுகிறேன்.
இந்தியர்களின் சைவ உணவு வகைகள் பெரும்பாலும் அரிசி மற்றும் பருப்பு வகைகளை கொண்டு செய்வதால் சரி விகிதத்தில் சத்துக்கள் நிறைந்திருக்கும். அடை என்பது அரிசி மற்றும் பருப்பு வகைகள் சேர்த்து மாறுபட்ட விதத்தில் செய்யப்படுவதாகும். அடை புரதச்சத்து நிறைந்தது. ஒரு மணி நேரம் அரிசி, பருப்பை ஊறவைத்து அரைத்து உடனே செய்யலாம். ஆரஞ்சு வண்ணத்தில் ஓரங்களில் மொறுமொறுப்பாக, காரமாக இன்னும் வேண்டும் என்று கேட்டு உண்ணும் வகையில் சுவையாக இருக்கும். அடை துவரம் பருப்பு, கடலை பருப்பு சம அளவிலும், அரிசி அதே அளவிலும் சேர்த்து செய்வதால் சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது. நாம் பருப்பு வகைகளில் அதிக அளவு புரத சத்துகள் நிறைந்துள்ளதை அறிவோம். சைவ உணவு உண்பவர்களுக்கு புரதம் அதிக அளவில் கிடைக்க இது உதவும். அரிசியுடன் பருப்புகள் சேர்வதால் ஆரோக்கியமானதல்லாமல் கிலைசெமிக் அளவை அரிசியில் குறைக்கிறது. நீரழிவு நோயுக்கும், உடல் எடை குறைவதற்கும் இதை உண்பது கேடு விளைவிப்பதில்லை. அடையில் காய்கறிகள் சேர்ப்பதால் சுவையும், நார் சத்தும் கிடைக்கிறது.
அடை குறிப்பாக கார்த்திகை தீபத்தின் போது பிரசாதமாக செய்யப்படுகிறது. நாக்கை சப்புகொட்ட வைக்கும் இந்த அடையை நீங்கள் காலை அல்லது இரவு உணவிற்கு செய்து உண்ணலாம்.
அடை தயாரிப்பு முறை
அடை
Ingredients
- அரிசி – 1 கிண்ணம் (இட்லி அரிசி 1/2 கிண்ணம் / பச்சரிசி 1/2 கிண்ணம்)
- துவரம் பருப்பு – 1/2 கிண்ணம்
- கடலை பருப்பு – 1/2 கிண்ணம்
- பாசி பருப்பு – 2 மேசைக்கரண்டி (விருப்பபட்டால்)
- உளுத்தம் பருப்பு – 2 மேசைக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- வர மிளகாய் – 4
- பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
- இஞ்சி – 1 அங்குல துண்டு
- பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை – சிறிதளவு
- எண்ணெய் – அடை சுடுவதற்கு தேவையான அளவு
விருப்பபட்டால் சேர்க்க தேவையான பொருட்கள்
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
- கொத்தமல்லி தழை – ஒரு கையளவு (பொடியாக நறுக்கியது)
Instructions
- அரிசி, பருப்புகளை இரண்டு முறை தண்ணீரில் கழுவி தேவையான அளவு தண்ணீர், வரமிளகாய் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊற வைத்ததை சிறிதளவு தண்ணீர், இஞ்சி, பெருஞ்சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
- கொரகொரப்பாக கெட்டியாக அரைக்கவும். நீங்கள் விரும்பினால் நீர்க்க அரைத்துகொள்ளலாம். ஆனால் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் அடை மாவு கெட்டியாக இருக்கும். உங்களுக்கு விருப்பமானால் நறுக்கிய வெங்காயம் அல்லது நறுக்கிய கொத்தமல்லி தழை அல்லது துருவிய தேங்காய் சேர்க்கலாம். எதுவும் சேர்க்காமல் அடை தயாரிக்கலாம்.
- இரும்பு தோசை கல் அல்லது நான்ஸ்டிக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். ஒரு கரண்டி மாவை கல்லின் நடுவில் ஊற்றி வட்டமாக தேய்த்துவிடவும். பாரம்பரிய முறையில் தயாரிப்பது கெட்டியான மாவை கல்லில் வைத்து கையால் வட்டமாக தட்டுவார்கள்.
- அடையின் நடுவிலும், சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும். மூடிவைத்து 2 நிமிடங்கள் வேகவிடவும்.
- திருப்பிவிட்டு இரண்டு பக்கமும் வேகவிடவும். ஒரு பக்கம் வேக 2 நிமிடங்கள் ஆகும். அடையை இன்னும் சற்று நேரம் மூடாமல் கல்லில் வேகவிட்டால் மொறுமொறுப்பாக இருக்கும்.
அடை பரிமாறுவது
- பாரம்பரியமாக அடையை அவியலுடன் உணவகங்களிலும், வீடுகளிலும் பரிமாறுவர். இந்த காரமான அடையை புளிப்பு மற்றும் அனைத்து சுவைகளும் கலந்த அவியலுடன் உண்பது நன்றாக இருக்கும். காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அடையில் உள்ள புரோட்டீன் சத்துக்கள் சேர்ந்து நமக்கு சரி விகிதமான அளவில் உணவு கிடைக்கிறது.
- அடையை மோர் குழம்பு அல்லது மோர் கூட்டு மற்றும் தேங்காய் சட்னியுடன் உண்ணலாம்.
- அடையின் மேல் வெண்ணெய் வைத்து உண்பதற்கு ஈடு இணை எதுவும் இல்லை எனலாம்.
- குழந்தைகள் அடையை சர்க்கரையுடன் உண்பதை விரும்புவார்கள். நாட்டு சர்க்கரையுடனும், வெல்லத்துடனும் உண்ண சுவையாக இருக்கும்.
வேறுபாடாக பரிந்துரைப்பது
- சத்துள்ள எல்லா தானியங்களும் சேர்த்த அடை: நாம் எல்லா தானியங்களையும் சேர்த்து சத்துள்ள அடை தயாரிக்கலாம். இதே முறையில் தானியங்கள் காய்கறிகள் சேர்த்து செய்யும்முறையை பகிர்கிறேன்.
- காய்கறிகள் அடை: நீங்கள் காய்களை மாவில் சேர்த்து செய்யும்போது கூடுதல் சத்து கிடைக்கிறது. ஒரு முறை காய்களை பொடியாக நறுக்கி அடை மாவுடன் கலந்து செய்வது. (வெங்காயம், துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், சுச்சினி, கீரை, சுரைக்காய் போன்றவை). இன்னொரு முறை காய்களை மாவு அரைக்கும் போது சேர்த்து அரைத்து செய்வதாகும். நீங்கள் நிறைய வகைகளில் அடை செய்யலாம். அவற்றில் சில வெங்காய அடை, கீரை அடை, கேரட் அடை, தக்காளி அடை, சுச்சுனி அடை, சுரைக்காய் அடை, பூசணிக்காய் அடை என்பவையாகும்.