காலிஃபிளவர் பக்கோடா
பஜ்ஜி, பக்கோடா போன்ற எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் உலகம் முழுவதும் உள்ள சமையல் அறைகளில் பலவிதங்களில் தயாரிக்கப்படுகிறது. இந்திய முறையில் தயாரிக்கபடுபவை பக்கோடா அல்லது பக்கோரா அல்லது பக்கோடி அல்லது பஜ்ஜி என்று அழைக்கப்படுகிறது.
காலிஃபிளவர் பக்கோடா எனது குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். காலிஃபிளவர் அதிகமாக கிடைக்கும் சமயங்களில் அடிக்கடி செய்து மாலை நேரத்தில் டீயுடன் உண்டு மகிழ்வோம். இங்கு நான் தயாரிக்கும் காலிஃபிளவர் பக்கோடா செய்முறையை பகிர்ந்துள்ளேன்.
இது பாரம்பரிய முறையில் பக்கோடா மாவு கலக்கும் விதத்தில் இருந்து சற்று மாறுபாடாக மாவு கலந்து செய்யும் முறையாகும். காலிஃபிளவர் துண்டுகளுடன் மாவை கலந்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கலந்தால் போதுமானதாக இருக்கும். நான் கார்ன் பிளவர் மாவு, அரிசி மாவுடன் கடலை மாவு கலந்து செய்வதை விரும்புவேன். இந்த முறையில் தயாரிப்பதால் மொறுமொறுப்பாகவும் அதிக சுவையுடனும் இருக்கும்.
காலிஃபிளவர் பக்கோடா தயாரிப்புமுறை
காலிஃபிளவர் பக்கோடா
Ingredients
- காலிஃபிளவர் – 1
- கடலை மாவு – 1 கிண்ணம்
- அரிசி மாவு – 3/4 கிண்ணம்
- கார்ன் பிளவர் – 3/4 கிண்ணம்
- உப்பு – ருசிக்கேற்ப
- வர மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
- சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
Instructions
- காலிஃப்ளவரை நடுத்தர துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
- நறுக்கிய துண்டுகளை உப்பு கலந்த தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் வேகவிடவும். தண்ணீரை வடிகட்டவும். இதை செய்வது மிகவும் முக்கியம். ஏனெனில் காலிஃப்ளவரில் உள்ள புழுக்கள் நீக்கவும், உப்பு காலிஃபிளவர் துண்டுகளில் சேரவும் இது உதவும்.
- மாவுகளை கலந்து அதில் உப்பு, மசாலா பொடிகள் சேர்த்து கலக்கவும். கலந்த மாவை காலிஃபிளவர் துண்டுகள் மேல் தூவி நன்றாக கலந்துவிடவும்.
- காலிஃப்ளவரில் உள்ள ஈரப்பதம் போதுமானதாக இருக்கும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. தேவைப்பட்டால் சிறிதளவு தெளித்து கலந்துகொள்ளவும்.
- பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சூடாக்கவும். ஓரு கரண்டியில் காலிஃபிளவர் கலவையை எடுத்து எண்ணெயில் போடவும்.
- பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். அதிகப்படியான எண்ணெயை பேப்பர் டவளில் போட்டு எண்ணெய் வடியவிடவும். ஏதேனும் ஒரு கெட்சப்புடன் பரிமாறவும்.
குறிப்பு
- உங்களுக்கு தெருவோரங்களில் கிடைக்கும் பக்கோடா போன்ற சுவையில் வேண்டுமென்றால் எண்ணெயில் இருந்து எடுத்தவுடன் சூடாக இருக்கும்போது சாட் மசாலா தூவவும்.
- பொரித்த பக்கோடா வயிற்றுக்கு தொந்தரவாக இருக்கும் என்றால், ஓமம் சிறிதளவு மாவு கலக்கும்போது சேர்த்து கொள்ளலாம்.