கோபி பரோட்டா
இன்று வெள்ளிக்கிழமை சாயங்காலம். ஒவ்வொரு வாரமும் நான் ஆவலுடன் எதிர்நோக்கும் நாள் இது. ஒவ்வொரு வாரமும் புது சமையல் திட்டங்கள், ஆர்வங்கள் என்னை எட்டிப்பிடிக்கும். வெள்ளிக்கிழமை இரவு உணவிற்கு ஏதேனும் விஷேசமாக நான் சமைத்து அசத்துவது வழக்கம். இன்று என்ன சமைக்கலாம் என்று நான் யோசித்து கொண்டிருக்கும் வேளையில், என் தோழி ஒரு அவசர காரியமாக சொந்த ஊருக்கு செல்லுவதாக கூறி வீட்டில் இருந்த காய்களை என்னிடம் பகிர்ந்து சென்றுவிட்டாள். கேரட், பீன்ஸ், வெண்டைக்காய், மஷ்ரூம், காலிப்ளவர் ஆகியவை இப்பொழுது அவளிடம் இருந்து வந்துள்ளது. அவள் காய்களை என்னிடம் பகிர்ந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனேனில் நான் வீட்டில் காய் தீர்ந்து விட்ட நிலையில் எதை வைத்து சமைக்கலாம் என்று முழித்துக் கொண்டிருந்தேன். என் கண்கள் ஏனோ காலிப்ளவரையே பார்த்துக் கொண்டிருந்தது. சில வினாடிகளில் என் வெள்ளிக்கிழமை இரவு சமையல் முடிவானது.கோபி பரோட்டா, வெண்டைக்காய் ராய்தா, கேரட் சாலட் இது தான் என் முடிவு.
கோபி பரோட்டா என்பது பரோட்டா வகைகளில் மிக பிரபலமானது. பஞ்சாபி சமையலில் இது மிக அதிகமாக பரிமாறபடுகிறது. காலிப்ளவரில் உள்ள முறுமுறுப்பு, மசாலா, பரோட்டாவின் அளவில்லா சுவை இவை யாவும் ஒன்றாக இணைவது தான் கோபி பரோட்டா. கோபி என்று வடநாட்டில் அழைக்கப்படும் காலிப்ளவரில் ஆண்டி ஆகிஸ்டண்ஸ், பைட்டொ கெமிக்கல்ஸ் அதிகம் உள்ளது. அத்தோடு காலிப்ளவர் உடல் பருமன் குறைக்கும், கேன்சர் தவிர்க்கும், செரிமானம் அதிகரிக்கும். இதில் காலரிகள் குறைவு, சக்கரை குறைவு, நார் சத்து அதிகம். அதனால் மலச்சிக்கல் தவிர்க்கும்.உடலில் கழிவுகளை அகற்றும், உடல் எடையை குறைக்கும். இவ்வளவு சத்தான காயில் சமைப்பது எனக்கு கொள்ளை ஆனந்தம். இதயவடிவில் என்னவருக்கும், முக்கோணவடிவில் என் குழந்தைகளுக்கும் செய்து அசத்தினேன். வார இறுதி இனிதாக துவங்கியது. தங்களுக்கு எப்படி?
கோபி பரோட்டா செய்ய விரிவான வீடியோ வழிமுறைகள்
தயாரிப்புமுறை
கோபி பரோட்டா
Ingredients
மாவு பிசைய
- கோதுமை மாவு – 2 கப் ஆட்டா
- உப்பு – ½ தேக்கரண்டி
- தண்ணீர் – மிருதுவான மாவு பிசைய தேவையான அளவு
- எண்ணெய் – பரோட்டா செய்ய
பரோட்டாவிற்குள் நிரப்ப
- பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் – 4 கப்
- இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- ஓமம் – 1/4 தேக்கரண்டி
- சீரகம் – 1/4 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை – 1/4 கப் பொடியாக நறுக்கியது
- பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி விரும்பினால்
- கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
- உலர் மாங்காய் தூள் – ½ தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 1 தேக்கரண்டி
Instructions
மாவு பிசைய
- மாவில் உப்பு சேர்க்கவும்.
- தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக மாவில் சேர்த்து பிசையவும்.
- மாவு மிருதுவாக சிறிது எண்ணெய் சேர்த்து பிசையவும்.
- காலிஃப்ளவர் சமைக்கும் வரை, பிசைந்த மாவை ஒரு மெல்லிய துணியால் மூடி வைக்கவும். சிறிது நேரம் மாவு ஊறினால் பரோட்டா மிருதுவாக வரும்.
காலிஃப்ளவர் வறுவல் (நிரப்புவதற்கு)
- காலிஃப்ளவரை மிக பொடியாக துருவிக் கொள்ள வேண்டும்.
- வாணலில் எண்ணெய் 1 தேக்கரண்டி ஊற்றி, சீரகம், ஓமம் சேர்த்து தாளிக்கவும்.
- இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசம் போகும் வரை வதக்கி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.
- துருவிய காலிஃப்ளவர், தேவையான அளவு உப்பு, கரம் மசாலா தூள்,மாங்காய் தூள் சேர்க்கவும்.
- நன்றாக வதக்கி, மெல்லிய தனலில் அடுப்பை குறைத்து 2 நிமிடங்கள் விடவும். தண்ணீர் வற்றி மசாலா காலிஃப்ளவரில் இறங்க இந்த நேரம் போதுமானது ஆகும்.
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
பரோட்டா செய்முறை
- பிசைந்த மாவை எலுமிச்சை அளவில் உருட்டவும்.
- சப்பாத்தி 3-4 அங்குலம் வருமளவு வட்டமாக தேய்க்கவும்.
- 2 தேக்கரண்டி காலிஃப்ளவர் வறுவலை நடுவில் வைக்கவும்.
- ஓரங்களை சேர்த்து நடுவில் குவித்து மூடவும்.
- இதே போல் எல்லா சப்பாத்தி மாவையும் உருட்டி வைக்கவும்.
- நிரப்ப பட்ட ஒரு உருண்டையை எடுத்து கொள்ளவும். குவித்த தடிமான பகுதியை மேலே வருமாறு வைத்துக் கொள்ளவும்.
- வரண்ட மாவில் தொய்த்து சப்பாத்தி போல் 6-7 அங்குலம் வருமளவு மெதுவாக தேய்க்கவும்.
- அதே நேரத்தில் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். கல்லில் எண்ணெய் ஊற்றி தேய்த்து வைத்த சப்பாத்தியை அதில் போடவும்.
- சப்பாத்தி நன்றாக உப்பி வரும் வரை இரு பக்கம் திருப்பி வேகவிடவும். இரு பக்கமும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும்.
- பழுப்பு நிறத்தில் வட்டங்கள் ஆங்காங்கே தோன்றும் போது சப்பாத்தியை கல்லில் இருந்து எடுத்துவிடவும்.சூடாக கோபி பரோட்டாவை பரிமாறவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- குளிர்ந்த தயிர், ஊறுகாய் உடன் காலிஃபிளவர் பரோட்டாவை பரிமாறுவது பாரம்பரியம்.
- வெண்டைக்காய் தயிர் பச்சடி, கத்திரிக்காய் தயிர் பச்சடி, வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி ஆகியவற்றுடன் காலிஃபிளவர் பரோட்டா நன்றாக இருக்கும்.
- தயிர் ஆலு(உருளை கிழங்கு), தம் ஆலு, சன்னா மசாலா ஆகியவற்றுடனும் கோபி பரோட்டா பரிமாறலாம்.
குறிப்புகள்
காலிஃபிளவர் பரோட்டா மீந்து போனால் காற்று புகாத சிப்லாக் பையில் அடைத்து ப்ரீசரில் பதப்படுத்தலாம். இதை ஒரு வாரம் முதல் 3 மாதம் வரை ப்ரீசரில் வைத்து உபயோகப்படுத்தலாம்.
வேறுபாடாக பரிந்துரைப்பது
காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் புதினா, காலிஃப்ளவர் பன்னீர், காலிஃப்ளவர் கேரட் என்று சேர்த்து வேவ்வேறு விதமாக பரோட்டாவை நிரப்பி சுவை மாற்றலாம்.