மாங்காய் சாதம்
மாங்காய் சாதம் கலவை சாதத்தில் ஒரு வகையாகும். மற்ற கலவை சாதம் போன்று அடிக்கடி தயாரிக்க முடியாது. அதிகமாக கிடைக்கும் நேரங்களில் மட்டுமே தயாரிக்கலாம். மாங்காய் சீசன் இருக்கும் காலங்களான மார்ச் முதல் ஜூன் வரை மட்டுமே அதிகமாக கிடைக்கும். இதில் சாதம் தயாரிக்க நீளவாக்கில் உள்ள (கிளிமூக்கு) மாங்காய் சுவையாக இருக்கும். புளிப்பு சுவை அளவாக இருக்கும். மற்ற வகை மாங்காய்களில் புளிப்பு சுவை கூடுதலாக இருக்கும். அவை ஊறுகாய் தயாரிக்க ஏற்றவை.
குறிப்பாக தென்னகத்தில் கருவுற்ற பெண்களுக்கு வளைகாப்பு செய்யும் நேரம் அவசியம் மற்ற கலவை சாதங்களுடன் மாங்காய் சாதம் கட்டாயம் இடம்பெறும். ஏழு வகை சாதங்களில் எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், மாங்காய் சாதம் மூன்றும் புளிப்பு சுவை கொண்டவைகளாக தயாரிப்பார்கள். மாங்காய் குறைவாக சேர்த்தாலே போதுமானதாக இருக்கும். சுவையும் நன்றாக இருக்கும். மாங்காய் உள்ள நேரத்தில் உடனடியாக தயாரித்து சுவைத்து பாருங்கள்.
மாங்காய் சாதம் தயாரிப்புமுறை
மாங்காய் சாதம்
Ingredients
- பாஸ்மதி அரிசி – 1 கிண்ணம் (வேகவைத்தது)
- மாங்காய் – 1 கிண்ணம் (துருவியது)
- கடுகு – 1 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
- கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
- இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
- வர மிளகாய் – 2
- பச்சை மிளகாய் – 2
- கருவேப்பிலை – சிறிதளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- உப்பு – ருசிக்கேற்ப
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
Instructions
- ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்க்கவும்.
- நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வர மிளகாய், கருவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- துருவிய மாங்காய், உப்பு சேர்த்து மாங்காய் வேகும் வரை வதக்கவும்.
- வடித்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும்.
- கொத்தமல்லி தழை போட்டு அலங்கரிக்கவும். மாங்காய் சாதம் பரிமாற தயார்.
வேறுபாடாக பரிந்துரைப்பது
- துருவிய தேங்காயை மாங்காயுடன் சேர்த்து கிளறினால் இன்னொரு வகையான கலந்த சாதம் தயார். தேங்கா-மாங்கா சாதம்.