வான்கோழி பிரியாணி
டர்க்கி பிரியாணி என்பது தமிழகத்தில் வான்கோழி பிரியாணி என்றழைக்கப்படுகிறது. இது புகழ் பெற்ற உணவகங்களில் அடிக்கடி செய்யப்படும் உணவுகளில் இடம்பெறுகிறது. வான்கோழி கறி இந்தியாவில் விலை மிகவும் அதிகமாக விற்கப்படுகிறது. எனது சொந்த ஊரில் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் சமயங்களில் கடைகளில் வான்கோழி கறி விற்பார்கள். வாங்ககூடியவர்கள் வான்கோழி கறி வாங்கி வான்கோழி பிரியாணி அல்லது வான்கோழி குழம்பு செய்வார்கள்.
நான் அமெரிக்கா சென்ற பின்னர் அங்கு வான்கோழி கறி விலை மலிவாக கிடைப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரச்சனை என்னவென்றால் முழு வான்கோழியாகத்தான் கிடைக்கும். அதுவும் பெரியதாக இருக்கும். அதனால் வழக்கமாக நாங்கள் முழு வான்கோழியாக வாங்கி வந்து துண்டுகளாக நறுக்கி பாக்கெட்டில் போட்டு பிரீஸரில் வைத்து தேவைப்படும்போது உபயோகித்து கொள்வோம். சில நேரங்களில் வான்கோழி நெஞ்சு, இறக்கை போன்ற பகுதிகள் மட்டும் கிடைக்கும். ஆனால் இந்தியாவில் இந்த பிரச்னை இல்லை ஏனெனில் இங்கு எடைக்கு வாங்குவதால் தேவைப்பட்டதை வாங்கி கொள்ளலாம்.
நான் ஓரளவு எல்லா வகையான உணவு வகைகளையும் வான்கோழி கறியில் தயாரிப்பேன் (பாரம்பரியமாக கோழிகறியில் தயாரிக்கப்படும்). பட்டர் வான்கோழி, வான்கோழி 65, தந்தூரி வான்கோழி, வான்கோழி குழம்பு தயாரிப்பேன். சிக்கன் போன்ற இருந்தாலும், சுவையில் வான்கோழி சிக்கனைவிட சுவை கூடுதலாக இருக்கும். இதை சமைப்பது சற்று அதிக நேரம் எடுக்கும் எனவே திட்டமிட்டு பின் சமைப்பது நல்லது. நாட்டு வான்கோழி கறி வேக சற்று அதிக நேரம் ஆகும்.
இன்று நான் உங்களுடன் வான்கோழி பிரியாணி தயாரிப்பு முறையை பகிர்ந்து கொள்கிறேன். இது எனது குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். எனது வீட்டில் கிறிஸ்துமஸ் அன்று காலை சிற்றுண்டிக்கு ஆப்பம்/ இட்லி / தோசை யுடன் மட்டன் குழம்பு சேர்த்து உண்போம். மதியம் வான்கோழி பிரியாணி மற்றும் சிக்கன் வறுவல், பாயசத்துடன் உண்போம். எனவே நீங்கள் வான்கோழி தயாரித்தது இல்லை எனில் நிச்சயம் இதை முயற்சித்து பாருங்கள். இதன் சுவைக்கு நீங்கள் மயங்குவது நிச்சயம்.
வான்கோழி பிரியாணி தயாரிப்புமுறை
வான்கோழி பிரியாணி
Ingredients
- வான்கோழி கறி – 1/2 கிலோ
- பாஸ்மதி அரிசி (அல்லது சீரகசம்பா அரிசி) – 1/2 கிலோ (2.5 கிண்ணம்)
- வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 2 (பொடியாக நறிக்கியது)
- பச்சை மிளகாய் – 6 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி – பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி
- தயிர் – 2 மேசைக்கரண்டி
- கொத்தமல்லி தழை – ¼ கிண்ணம் (நறுக்கியது)
- புதினா – ¼ கிண்ணம் (நறுக்கியது)
- எண்ணெய் / நெய் – 4 மேசைக்கரண்டி
- மசாலா பொருட்கள் – 2 பட்டை, 2 ஏலக்காய், 3 கிராம்பு, 1 பிரியாணி இலை
- சோம்பு தூள் – 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- வர மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
- மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
- தண்ணீர் (அல்லது தேங்காய் பால்) – 4 கிண்ணம்
- உப்பு – தேவையான அளவு
Instructions
- வான்கோழி கறியை நன்றாக கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, எலுமிச்சை சாறு, உப்பு, கருப்பு மிளகு தூள் சேர்த்து கலந்து வைக்கவும். குளிர்சாதன பெட்டியில் 2 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் வைக்கவும். இது கறி நன்றாக வேகவும், கூடுதல் சுவையையும் கொடுக்கும்.
- பாஸ்மதி அரிசியை கழுவி குறைந்தது 30 நிமிடங்கள் ஊற விடவும்.
- குக்கர் அல்லது அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும். மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும்.
- நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் தக்காளி சேர்க்கவும். தக்காளி நன்றாக குழையும் வரை வதக்கவும்.
- ஊற வைத்த வான்கோழி கறியை சேர்த்து 3-4 நிமிடங்கள் அதில் உள்ள தண்ணீர் வற்றி துண்டுகள் நிறம் மாறும் வரை வதக்கவும்.
- தயிர் சேர்த்து மசாலா பொருட்கள் சேர்க்கவும் (மஞ்சள் தூள், வர மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சோம்பு தூள்). நன்றாக கலந்து விடவும்.
- 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். 5-6 விசில்கள் விடவும். அடி கனமான பாத்திரத்தில் தயாரித்தால் மூடிவைத்து கறியை நன்றாக வேகவிடவும். இதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் ஆகும்.
- குக்கர் ஆறிய பின்னர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து மீதமுள்ள தண்ணீரை சேர்க்கவும். நான் கிறிஸ்துமஸ் அல்லது விருந்தினர் வருகையின் போது தண்ணீருக்கு பதில் தேங்காய் பால் சேர்த்து செய்வேன். இது அதிகமான சுவையை கொடுக்கும்.
- நன்றாக கொதிக்கவிடவும். உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும். ஊறவைத்த அரிசி சேர்த்து கிளறிவிடவும்.
- அடுப்பை குறைத்து குக்கரை மூடி 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைக்கவும்.
- அடுப்பை அனைத்து 10 நிமிடங்கள் ஆற விடவும். மரக்கரண்டியால் அரிசி உடையாமல் மெதுவாக கிளறி பரிமாறவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- பிரியாணி எனது ஊர்களில் பொதுவாக வேகவைத்த முட்டை, தயிர் பச்சடி, சிக்கன் வறுவலுடன் பரிமாறுவார்கள்.
- சில இடங்களில் எண்ணெய் கத்திரிக்காய், புதினா சட்னி, சால்னாவுடன் பரிமாறப்படுகிறது.