செட்டிநாடு குழி பணியாரம்

செட்டிநாடு குழி பணியாரம்

குழி பணியாரம் (மசாலா பணியாரம் என்றும் சொல்லப்படும்) தென்னிந்தியர்களால் செய்யபடும் மிகவும் சுவையான சிற்றுண்டி ஆகும். கொங்கனியில் ஆப்பி என்றும், பட்டு என்று கன்னடத்திலும், பொங்கனலு என்று தெலுங்கிலும் அழைக்கப்படுகிறது. பணியாரம் இனிப்பு சேர்த்து செய்தால் இனிப்பு பணியாரம் என்பர். இதை மலையாளத்தில் உண்ணியப்பம் என்பர்.

இன்று நான் உங்களுடன் காரமான மசாலா பணியாரம் செய்யும் முறையை பகிர்ந்துகொள்கிறேன். இதற்கு பணியாரக்கல் தேவையாகும். இந்த கல் வெளிநாட்டில் ப்ஃப்டு பான்கேக் செய்ய பயன்படுத்துவார்கள். நான் இரும்பு கல்லுக்கு பதில் நான்ஸ்டிக்கில் இருக்கும் பணியாரக்கல்லை பயன்படுத்துவேன். செய்ய சுலபமாகவும் எண்ணெய் குறைவாகவும் உபயோகிக்கலாம். இந்த கல் குழிகள் வைத்து செய்துள்ளதால் குழி பணியாரம் என்பார்கள். மாலை நேர டிபனுக்கு டீயுடனும், காலை அல்லது இரவு சிற்றுண்டியாகவும் பரிமாறலாம்.

பாரம்பரிய முறையில் இதற்கு மாவு தனியாக தயாரித்து செய்வார்கள். அம்முறையை கீழே கொடுத்துள்ளேன். ஆனால் தற்போது இட்லி அல்லது தோசை மாவில் தயாரிக்கிறார்கள். புளித்தமாவில் தாளித்த பொருட்களுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி பணியாரக்கல்லில் ஊற்றுகிறார்கள். இது மொறுமொறுப்பான உள்ளே மிருதுவான சுவையுடன் இருக்கும்.

செட்டிநாடு குழி பணியாரம்

Prep Time10 minutes
Cook Time30 minutes
Total Time40 minutes
Course: Snack
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • புழுங்கல் அரிசி/ இட்லி அரிசி – ½ கிண்ணம்
  • அவல் - ½ கிண்ணம்
  • உளுத்தம் பருப்பு - ¼ கிண்ணம்
  • வெந்தயம் – ½ தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

  • சிறிய வெங்காயம் -15 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
  • கருவேப்பிலை – 1 கொத்து (நறுக்கியது)
  • துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி
  • கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

Instructions

மாவு தயாரிக்க

  • பணியாரம் செய்ய தனியாக மாவு அரைக்க தேவையில்லை என்றால் இட்லி அல்லது தோசை மாவை உபயோகித்து கொள்ளலாம்.
  • அரிசியை கழுவி உளுந்து, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊற விடவும்.
  • நைஸாக அரைத்து உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.
  • அரைத்த மாவை 10 மணி நேரம் (அல்லது இரவு முழுவதும் ) இரண்டு மடங்கு ஆகும் வரை புளிக்கவிடவும். இப்பொழுது பணியாரம் செய்ய மாவு தயார். அரைத்த மாவை குளிர் சாதன பெட்டியில் வைத்து எப்போது வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம்.

பணியாரம் தயாரிக்க

  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு வெடிக்கவிடவும்.
  • நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் நன்றாக வதங்கும் வரை வதக்கவும். விருப்பபட்டால் காய்கறிகள் சேர்க்கலாம். சேர்ப்பதாக இருந்தால் இதனுடன் சேர்த்து வதக்கி கொள்ளலாம்.
  • தாளித்த பொருட்களையும், துருவிய தேங்காயையும் மாவுடன் நன்றாக கலக்கவும்.
  • பணியாரக்கல்லை சூடாக்கி ஒவ்வொரு குழியிலும் ½ தேக்கரண்டி அளவிற்கு எண்ணெய் ஊற்றவும்.
    செட்டிநாடு குழி பணியாரம் செய்முறை
  • ஒரு மேசைக்கரண்டி அளவு மாவை ஊற்றி 1 நிமிடம் விடவும். 
    செட்டிநாடு குழி பணியாரம் செய்முறை
  • மரக்குச்சி அல்லது ஃபோர்க்கால் திருப்பிவிடவும். அடுத்த பக்கமும் வெந்துவிடும். உருண்டையான வடிவத்தில் இருக்கும். மூடிவைத்து வேக வைத்தால் விரைவாக வெந்துவிடும்.
    செட்டிநாடு குழி பணியாரம் செய்முறை
  • இரண்டு பக்கமும் நன்றாக வெந்தபின்னர் பிரவுன் கலர் புள்ளிகள் இருக்கும். குறைந்ததீயில் செய்தால் நன்றாக இருக்கும். சுவையான குழி பணியாரம் பரிமாறத்தயார்.
    செட்டிநாடு குழி பணியாரம் செய்முறை

பரிமாற பரிந்துரைப்பது

  • குழி பணியாரத்தை சட்னியுடன் சுட சுட பரிமாறலாம். பொதுவாக தேங்காய் சட்னி, கடலை சட்னி, கார சட்னி, புதினா சட்னி அல்லது இட்லி பொடியுடன் பரிமாறலாம்.

குறிப்பு

  • குழந்தைகளுக்கு தயாரிப்பதாக இருந்தால் பச்சை மிளகாய் துண்டுகளை வதக்கிய பின்னர் எடுத்துவிட்டு செய்யவும்.
  • கேரட், குடமிளகாய், முட்டை கோஸ், தக்காளி இவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்தால் கலராகவும் சத்துள்ளதாகவும் இருக்கும். நான் இவ்விதம் செய்வதை விரும்புவேன். மீதமான பொரியல் இருந்தால் அதையும் மாவில் கலந்து செய்யலாம். குழந்தைகள் இந்த வெஜிடபிள் குழி பணியாரத்தை விரும்புவார்கள்.

செட்டிநாடு குழி பணியாரம்



உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.