வெங்காய ஊத்தப்பம்
ஊத்தப்பம் என்பது தோசை வகைகளில் ஒன்றாகும். வழக்கமான தோசை போல மெல்லியதாக இல்லாமல் சற்று தடிமனாக இருக்கும். மேலே தூவுவது வெங்காயம், தேங்காய், தக்காளி, பீட்ரூட், முட்டைகோஸ், குடமிளகாய், சீஸ், முட்டை என வேறுபாடாக உபயோகித்து பல விதமாக தயாரிக்கலாம். காய்கறிகள் கலந்தும் செய்யலாம். இனிப்பு ஊத்தப்பம் தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து செய்வதாகும்.
ஊத்தப்பம் வழக்கமாக இட்லி, தோசை மாவிலேயே தயாரிக்கப்படுகிறது. நான்எப்பொழுதும் இட்லி மாவை வீட்டில் அரைத்து உபயோகிக்கும் போது முதல் 3-4 நாட்கள் இட்லி , தோசை தயாரிப்பேன். 4 நாட்களுக்கு பின்னர் மாவு புளித்துவிடும் அதனால் இட்லி, தோசை சரியாக வராது. அந்த மாவு ஊத்தப்பம் தயாரிக்க ஏற்றது. எனக்கு ஊத்தப்பம் மிகவும் பிடித்தமானது, அதனால் நான் அரைத்த புதிய மாவிலும் ஊத்தப்பம் அடிக்கடி தயாரிப்பேன் . நீங்கள் கடையில் இட்லி/தோசை மாவு வாங்கியும் ஊத்தப்பம் தயாரிக்கலாம். இதில் சிறப்பான விஷயம் என்னவெனில் மேலே தூவுவது அவரவர் விருப்பப்படி தயாரித்து கொடுக்கலாம்.
சிலர் மேலே தூவுவதையும் இட்லி மாவில் கலந்து ஊத்தப்பம் தயாரிப்பார்கள். இது மிகவும் சுலபம் ஆனால் உண்மையான சுவை அதில் கிடைக்காது. நீங்கள் தோசை ஊற்றிவிட்டு பின்னர் மேலே தூவுவதை சேர்த்தால் திருப்பி போடும்போது நன்றாக மொறுமொறுப்பாக இருக்கும். கலந்து செய்வதைவிட கூடுதல் சுவை கிடைக்கும்.
பொதுவாக உணவகங்களில் கிடைப்பது ஆனியன் ஊத்தப்பம் (வெங்காய ஊத்தப்பம்) . இதன் செய்முறையை நான் பகிர்ந்துள்ளேன். உங்கள் விருப்பப்படி நீங்கள் எதைக்கொண்டு தயாரிக்க விருப்புகிறோர்களோ அதை உபயோகித்து விதவிதமாக தயாரித்து கொள்ளவும்.
வெங்காய ஊத்தப்பம் தயாரிப்பு முறை
வெங்காய ஊத்தப்பம்
Ingredients
- இட்லி மாவு – 2 கிண்ணம்
- வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது அல்லது இட்லி பொடி – 2 மேசைக்கரண்டி)
- கொத்தமல்லி தழை – கொத்து (பொடியாக நறுக்கியது)
- எண்ணெய் / நெய் – தேவையான அளவு (ஊத்தப்பம் தயாரிக்க)
Instructions
- வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயம் எது வேண்டுமானாலும் உங்கள் விருப்பம். பச்சை மிளகாய், கொத்தமல்லி தழையுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வெங்காயத்துடன் கலந்து கொள்ளவும். குழந்தைகளுக்கு கொடுப்பதால் நான் இதை தவிர்த்து ஊத்தப்பம் தயாரிக்கும் போது இட்லி பொடி தூவி கொள்வேன்.
- தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் தடவவும். நீங்கள் நான்ஸ்டிக் கல்லை பயன்ப்டுத்தி எண்ணெய் குறைவாக உபயோகிக்கலாம். ஆனால் மொறுமொறுப்பான சுவையான ஊத்தப்பம் தயாரிக்க இரும்பு கல்லை பயன்படுத்துவது நல்லது.
- ஒரு கரண்டி மாவை கல்லின் நடுவில் ஊற்றி வட்டமாக தேய்த்துவிடவும். கல் முழுவதும் மெல்லியதாக தேய்க்காமல் சிறிய வட்டமாக தேய்த்தால் போதும்.
- ஊத்தப்பம் மேல் இட்லி பொடி தூவி நறுக்கிய வெங்காயம் தூவவும். நீங்கள் விரும்பினால் நறுக்கிய கொத்தமல்லி தழை, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துகொள்ளலாம்.
- ஊத்தப்பத்தை சுற்றி எண்ணெய் ஊற்றவும். நடுவிலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். அடுப்பை குறைத்து வைத்து நன்றாக வேகவிடவும். நான் 1/4 கிண்ணம் நல்லெண்ணெயுடன் 2 மேசைக்கரண்டி நெய் சேர்த்து கலந்து ஊத்தப்பம் தயாரிக்க பயன்படுத்துவேன்.
- அடிபாகம் பொன்னிறமாக 2 நிமிடங்கள் ஆகும். பின்னர் திருப்பி போட்டு வேகவிடவும். தோசை கரண்டியால் லேசாக அழுத்திவிட்டால் மேலே தூவியவை நன்றாக வேகும்.
- அடுத்து 1 நிமிடத்தில் அடுத்த பக்கமும் வெந்து வெங்காயம் மொறுமொறுப்பாகிவிடும். ஊத்தப்பம் மொறுமொறுப்பாகவும் நடுவில் மெத்தென்றும் இருக்கும்.
- கல்லில் இருந்து மெதுவாக எடுத்து சூடாக பரிமாறவும். கல்லில் இருந்து எடுத்து உடனே சூடாக பரிமாறினால் தான் அதன் முழு சுவையும் கிடைக்கும்.
குறிப்பு
- மொறுமொறுப்பான ஊத்தப்பம் தயாரிக்க நடுவில் ஒரு ஓட்டை போட்டு அதில் எண்ணெய் ஊற்றி செய்ய வேண்டும்.
- ஊத்தப்பம் மேலே தூவுவது வேறு வகைகளாக செய்யலாம். தக்காளி ஊத்தப்பம், கேரட் ஊத்தப்பம், இட்லி பொடி ஊத்தப்பம், தேங்காய் ஊத்தப்பம், ஓட்ஸ் ஊத்தப்பம், சீஸ் ஊத்தப்பம், கீரை ஊத்தப்பம், குட மிளகாய் ஊத்தப்பம், முட்டைகோஸ் ஊத்தப்பம், காய்கறிகள் கலந்த ஊத்தப்பம், முட்டை தோசை என்று பல விதங்களில் தயாரிக்கலாம்.
பரிமாற பரிந்துரைப்பது
- ஊத்தப்பம் சாம்பார் மற்றும் வேறு வகை சட்னிகளுடன் உண்ண சுவையாக இருக்கும்.