புதினா சட்னி
சமீபத்தில் என் குடும்ப நண்பர்கள் லட்சுமி அத்தை வீட்டிற்கு 20 வருடங்களுக்கு பின் சென்றிருந்தோம். அவர்கள் என் பெற்றொர் வீட்டிற்கு அருகில் வசித்தவர்கள். என் சிறு பருவத்து நினைவுகளை என் கணவருடனும் மற்றும் என் பிள்ளைகளுடன் பகிர்ந்து மகிழ்ந்தனர். லட்சுமி அத்தை சமையற்கலையில் கைதேர்ந்தவர். அவர் நிறைய சமையல் வகைகள் மட்டுமல்லாமல் சரியான அளவிலும் செய்ய வல்லவர். அவருடன் பேசி கொண்டிருந்த போது, ”என் கணவர் ஒரு பெரிய சட்னி பிரியர், ஒவ்வொரு பதார்த்தங்களுக்கும் வெவ்வேறு சட்னி வகை கேட்பார்” என்று கிண்டலாக நான் கூறிய போது அவர் சிரித்து கொண்டே புதினாவில் மட்டும் ஒன்றல்ல மூன்று சட்னி வகைகளை பகிர்ந்து கொண்டார்.
புதினா வீட்டு தோட்டத்தில் வளர கூடிய ஒரு நல்ல மூலிகை. கடையில் வாங்கிய புதினா இலைகளை ஆய்ந்த பின்னர் அதன் தண்டுகளை சின்ன தொட்டியில் நட்டு வைத்தால் போதும். வருடம் எல்லாம் நமக்கு தேவையான புதினா கிடைக்கும். புதினாவில் உடல் நலத்திற்கு நிறைய பலன்கள் உள்ளன. எந்த வகையிலாவது புதினாவை நம் உணவில் சேர்த்து கொள்வது உத்தமம். அதில் கொழுப்பு சத்து இல்லை. வைட்டமின்கள், அத்தியாவசிய எண்ணெய்கள், நார்ச்சத்து, ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைய உள்ளன. இவை யாவும் இரத்ததிலுள்ள கொழுப்பு, இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும். பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம் ஆகியவை புதினாவில் உள்ளன.
புதினா நறுமணம் நிறைந்தது. இந்த சட்னி வகைகளில் சிறிது கொத்தமல்லி சேர்த்தால் சுவை கூடும். இந்த அருமையான சட்னி வகைகளை பகிர்ந்து கொண்ட லட்சுமி அத்தைக்கு நன்றிகள். இப்பொதெல்லாம் என் கணவர், பிள்ளைகள் கபாப், தோசை, இட்லிகளை அதிகம் சாப்பிடுவதற்கு காரணம் புதினா சட்னி தான். உங்கள் வீட்டிலும் இதை செய்து பாருங்களேன். அது செய்யும் மாயங்கள் புரியும்.
புதினா சட்னி செய்முறை
புதினா சட்னி
Ingredients
தொகுதி 1:
- புதினா – 1 கட்டு
- கொத்தமல்லி இலை – 1 கையளவு
- சீரகம் – ½ தேக்கரண்டி
- பூண்டு – 2 பற்கள் விரும்பினால்
- பச்சை மிளகாய் – 3 ருசிக்கேற்ப
- எலுமிச்சை அல்லதுபுளி சாறு – 1 மேசைக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
தொகுதி 2:
- தயிர்/ தேங்காய்/ வறுத்த கடலை/ பொடியாக நறுக்கிய வெங்காயம் உங்கள் விருப்பதிற்கேற்ப
Instructions
வகை 1 (புதினா சட்னி தயிருடன்)
- மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் (தயிர் சேர்க்காமல்) மிக்சியில் நன்றாக அரைத்து எடுக்கவும். தயிரில் புளிப்பு சுவை இருப்பதால் இந்த வகையான சட்னியில் எலுமிச்சை சாறு/ புளி குறைவாக சேர்க்கவேண்டும்.
- வேண்டிய பதத்தில் தயிரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- சிக்கன் தந்தூரி மற்றும் சிக்கன் கபாப் உடன் பரிமாறவும்.
வகை 2 (புதினா சட்னி தேங்காயுடன்)
- மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தேங்காயுடன் மிக்சியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.
- இட்லி, தோசை மற்றும் தென்னிந்திய சிற்றுண்டிகளுடன் பரிமாறவும்.
வகை 3 (புதினா சட்னி வறுத்த கடலையுடன்)
- மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் வறுத்த கடலையுடன் மிக்சியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.
- இட்லி, தோசை மற்றும் தோக்லாவுடன் பரிமாறவும்.
வகை 4 (புதினா சட்னி வெங்காயத்துடன்)
- மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பாதி வெங்காயத்துடன் மிக்சியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.
- சாட் மற்றும் சாண்ட்விச் உடன் பரிமாறவும்.