சாம்பார்
சாம்பார் தென்னிந்தியாவின் ஒரு பிரபலமான உணவாகும். பயறு வகைகள் உடன் அதாவது துவரம் பருப்பு, காய்கள் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இது இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாறபடுகிறது. விரும்பினால் நெய் சேர்த்து கொள்ளலாம். வெவ்வேறு காய்கள் கொண்டு நாம் வெவ்வேறு சாம்பார் வகைகளை சமைக்கலாம். சாம்பாரின் வகைகளாவது வெங்காய சாம்பார், முருங்கைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், மாங்காய் சாம்பார், வெண்டைக்காய் சாம்பார், உருளைக்கிழங்கு சாம்பார், பாசிப்பருப்பு (பச்சை பயிர்) சாம்பார், மசூர் தால் சாம்பார்.
சாம்பார் செய்முறை
சாம்பார்
Servings: 4 people
Ingredients
- துவரம் பருப்பு - 3/4 கிண்ணம் (அல்லது பச்சை பயிர் அல்லது மசூர் தால் அல்லது எல்லா பருப்புகளும் சமமான அளவு.)
- காய்கள் (ஏதேனும் ஒன்று அல்லது பல காய்கள் சேர்த்து) - 1 கிண்ணம் (விருப்பத்திற்கு ஏற்ப கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, முருங்கைக்காய், கீரை, மாங்காய், கேரட், சீமை சுரைக்காய், மஞ்சள் ஸ்குவாஷ், லிமா பீன்ஸ், பூசணி, கருணைக் கிழங்கு, வெண்டைக்காய், நூல்கோல்)
- சின்ன வெங்காயம் - 8- 10 (அல்லது 1 பெரிய வெங்காயம் நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 1 அல்லது 2
- தக்காளி - 1
- புளி கரைசல் - 1 1/2 மேசைக்கரண்டி
- சாம்பார் தூள் (கடையில் வாங்கியது அல்லது வீட்டில் செய்தது) - 1 மேசைக்கரண்டி அல்லது தேவைக்கேற்ப
- கடுகு - 1/4 தேக்கரண்டி
- சீரகம் - 1/4 தேக்கரண்டி
- வெந்தயம் - 5-7
- வர மிளகாய் - 2
- கருவேப்பிலை - 2 கொத்து
- கொத்தமல்லி இலை - அழகுப்படுத்த
- பெருங்காயம் - 4 சிட்டிகை
Instructions
- துவரம் பருப்பு, தக்காளி, 2.5 கிண்ணம் தண்ணீர், 2 பூண்டு பற்கள் (விரும்பினால்) சேர்த்து வேகவிடவும். குக்கரில் வேகவிட்டால் 3 விசில் விடலாம் (அல்லது அடிபாகம் கனமான பாத்திரத்தில் வேகவிடலாம்).
- வெந்த பருப்பை குழம்பு கரண்டியிலோ மத்திலோ நன்றாக மசித்து கொள்ளவும்.
- வாணலில் எண்ணெய் காய்ந்த பின் கடுகு, சீரகம், வெந்தயம், வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் காய்கள் சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும். மைக்ரோ வேவ் அவனில் காய்களை வேகவிடலாம். உங்கள் குக்கர் பெரியது என்றால் பருப்பு வேகும் போது மேல் அடுக்கில் காயை தண்ணீர் தெளித்தும் வேகவிடலாம்.
- காய்கள் வெந்த பின், புளி கரைசல், உப்பு, சாம்பார் தூள், மசித்த பருப்பு சேர்க்கவும்.
- போதுமான அளவு தண்ணீர் விட்டு, அடுப்பை குறைத்து 20 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்தால் சாம்பாரின் மணம் வீடு முழுவதும் பரவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- சூடான சாம்பார் இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாறலாம்.
- விரும்பினால் உருக்கிய நெய்யுடன் சேர்த்து சாப்பிடலாம்.
வேறுபாடுகளாக பரிந்துரைப்பது
- சாம்பாரில் தேங்காய் பால்/ தேங்காய் துருவல் சேர்த்தால் சுவை கூடுதலாகும்.
- பச்சை பயிர்/,மசூர் தால் போன்ற பருப்புகளிலும் சாம்பார் செய்யலாம்.
- புளி கரைசலுக்கு பதில் 2-3 தக்காளிகள் சேர்த்தால், இட்லி சாம்பார் தயார்.
- சிலர் ஒரு தேக்கரண்டி சக்கரை/வெல்லம் சாம்பாரில் சேர்ப்பார்கள்.
- வீட்டில் செய்த சாம்பார் பொடியில் சாம்பார் செய்தால்,அதை அரைத்து விட்ட சாம்பார் என்பார்கள்.