தேங்காய் தேர்வு செய்து, உடைத்து, துருவி பாதுகாக்கும் முறை
துருவிய தேங்காய் தென்னிந்திய சமையலில் மிகவும் முக்கிய ஒன்றாகும். பெரும்பாலும் ஏதாவது ஒரு விதத்தில் சமையலில் இது சேர்க்கப்படும். இதை பொரியலில் மேலே தூவ பயன்படுத்துவார்கள். பீன்ஸ் சாலட், சட்னி, குழம்பு வகைகளை சுவைசேர்க்க தேங்காய் பால் சேர்ப்பார்கள்.
எனது பாட்டி வீட்டில் தேங்காய் தோப்பு இருந்ததால் அவர் தினமும் ஒன்று அல்லது இரண்டு தேங்காய் உடைத்து பயன்படுத்துவார்கள். முழு தேங்காய், அதாவது மட்டை நீக்காமல் உள்ளதை உரித்து உடைக்க பலமும், பழக்கமும் தேவை. தேங்காயை உடைத்த பின்னர் உள்ளே உள்ள சதை பகுதியை துருவ வேண்டும். தற்போது கடைகளில் மட்டை நீக்கிய காய்கள் கிடைக்கிறது. நாம் உடைத்து துருவி கொண்டால் போதும். இன்றைய இளம் தலைமுறையினர் இவற்றை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் இல்லை. எனவே தான் இந்த முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.
தேங்காய் பருப்பை ஒட்டிலிருந்து எடுத்து துருவ மூன்று, நான்கு வகைகள் உள்ளன. நான் இங்கு பாரம்பரியமாக செய்யும் முறையை படிபடியாக சுலபமான முறையில் செய்வதை கொடுத்துள்ளேன். இதில் உங்களுக்கு தேவையானதை நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். அதற்கு முன்னர் நான் தேங்காய் வாங்கி எப்படி கெடாமல் பாதுகாப்பது என்பதற்கு சில குறிப்புகளை கூறப்போகிறேன்.
தேங்காய் எப்படி தேர்வு செய்து வாங்கி பாதுகாப்பது?
- முதலில் தேங்காயில் சுற்றிலும் எதாவது வெடிப்பு உள்ளதா என்று பார்க்க வேண்டும். மூன்று கண்கள் உலர்ந்து இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். வெடிப்பு இருந்தாலோ, கண்களில் ஈரப்பதம் இருந்தாலோ வாங்காமல் தவிர்க்க வேணடும்.
- நல்ல பிரவுன் நிறத்தில் உள்ளதாக இருக்க வேண்டும். நிறம் சற்று குறைவாக வெள்ளையாக இருந்தால் முற்றியதாக இருக்காது. இது குழம்புக்கு சுவை கொடுக்காது.
- தேங்காயை எடுத்து காதின் அருகில் வைத்து ஆட்டி பார்த்தால் தண்ணீர் சத்தம் கேட்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் இருந்தால் முற்றியதாக இருக்கும். இதுவும் குழம்புக்கு ஏற்றதல்ல. தண்ணீர் அதிகம் உள்ளது நல்லது.
- தேங்காயை வாங்கிய பின்னர் கண்கள் மேலே உள்ளது போன்று வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
- மற்றொரு முறை சதை பகுதியை வெளியே எடுத்து குளிர் சாதன பெட்டியில் பிரீசரில் வைக்கலாம். இவ்வாறு செய்வதால் மூன்று மாதங்கள் வரை கெடாமல் வைத்து கொள்ளலாம். கீழே உள்ளது சதை பகுதியை எடுத்து துருவும் முறையாகும்.
தேங்காய் தேர்வு செய்து, உடைத்து, துருவி, பாதுகாக்கும் வீடியோ வழிமுறைகள்
தேங்காய் உடைத்து, துருவும் முறை
தேங்காய் உடைத்து, துருவும் முறை
Equipment
- வெட்டு கத்தி / சுத்தியல் / பெரிய கத்தி – உடைக்க
- அரிவாள்மணை / மிக்ஸி / துருவும் – துருவுவதற்கு
Ingredients
- தேங்காய் – 2
- வெட்டு கத்தி / சுத்தியல் / பெரிய கத்தி – உடைக்க
- அரிவாள்மணை / மிக்ஸி/ துருவும் -துருவுவதற்கு
Instructions
தேங்காயை உடைத்து பிரிப்பது எப்படி?
- பொதுவாக தேங்காய் வெளிப்புறம் முழுவதும் நாருடன் இருக்கும். நாரை கத்தியின் உதவியுடன் சிறிது சிறிதாக பிரித்து எடுக்க வேண்டும்.
- தேங்காயின் மேல் பகுதியில் மூன்று கோடுகள் இருப்பதை காணலாம். அந்த கோட்டின் மேல் சுத்தியல் அல்லது பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வெட்டுகத்தியால் (பெரிய கனமான கத்தி) தட்ட வேண்டும். தேங்காயை திருப்பி அடுத்த கொட்டின் மேல் அடிக்க வேண்டும்.
- ஓடு உடையும் வரை தேங்காயை திருப்பி திருப்பி அடிக்கவும். தேங்காய் இரண்டு பாதியாக உடைந்து விடும்.
- சிலர் தேங்காயை பெரிய கல்லின் மேல் அடித்து உடைப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
- மறக்காமல் தேங்காய் உடைக்கும் போது கீழே ஒரு கிண்ணம் வைத்து கொள்ளவும். தேங்காய் தண்ணீர் பிடிக்க தேவைப்படும். அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
சுலபமான முறையில் தேங்காய் துருவும் முறை. கத்தி அல்லது உணவு செயலி (ஃபுட் பிராசஸர்) பயன்படுத்தி
- தேங்காயை உடைத்த பின்னர் நீங்கள் உள்ளே உள்ள பருப்பை சுலபமாக துருவி கொள்ளலாம். நான் அம்முறையை மேலே வீடியோ வழிமுறையில் காண்பித்துள்ளேன். செய்முறையை கீழே காண்போம்.
- இந்த முறையில் தேங்காய் பருப்பை கூரான கத்தியால் எடுத்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும். மேலும் சுலபமாக செய்ய வேண்டுமானால் உடைத்த தேங்காயை 1-6 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் பிரீசரில் வைக்கவும்.இவ்வாறு வைப்பதால் ஓட்டிலிருந்து பருப்பை எடுப்பது மிகவும் சுலபமாக இருக்கும்.
- பிரீசரில் இருந்து எடுத்த பின்னர் ஒரு கத்தியால் பருப்பிற்கும் ,ஓட்டிற்கும் இடையில் கொடுத்து கீறி எடுக்கலாம். வி வடிவில் கீறினால் எடுக்க சுலபமாக இருக்கும்.
- தேங்காயிலிருந்து பருப்பை எடுத்த பின்னர் மேலே உள்ள பிரவுன் நிற தோலை நீக்க வேண்டும்.இதை கத்தி அல்லது தோல் சீவும் பீலர் மூலம் எடுக்கலாம்.இது முக்கியமானது இல்லை. ஆனால் துருவல் வெண்மையாக இருக்க வேண்டுமானால் இவ்வாறு செய்வது நல்லது.
- நறுக்கிய தேங்காயை மிக்ஸி அல்லது உணவு செயலி (ஃபுட் பிராசஸர் ) அல்லது பாக்ஸ் கிரேட்டர் உபயோகிக்கலாம்.
- மிக்ஸியில் போட்டு நான்கைந்து முறை பல்ஸரில் திருப்பி எடுத்தால் துருவல் சரியான அளவில் கிடைக்கும். இது பொரியல் குழம்பிற்கு பயன்படுத்தலாம்.
பாரம்பரிய முறையில் தேங்காய் துருவும் முறை
பாரம்பரியமாக தேங்காயை நமது பாட்டி, தாய் போன்றோர் அரிவாள்மணை கொண்டு துருவுவார்கள். அந்த முறையை எனது உதவியாளரின் உதவியுடன் படத்தில் விளக்கியுள்ளேன். இம்முறையில் செய்ய சற்று பழக்கம் தேவை. ஆனால் மிகவும் சுலபமான முறையாகும். எனது பள்ளி நாட்களில் அரிவாள்மணையில் தேங்காய் துருவி உல்ளேன். இதில் எந்த முறையை தேர்வு செய்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பம்.
பாரம்பரிய முறையில் தேங்காய் துருவ -வீடியோ வழிமுறைகள்
துருவிய தேங்காயை சேமித்து வைக்கும் முறை
- துருவிய தேங்காய் விரைவில் கெட்டுவிடும். எனவே ஜிப்லாக் கவர் அல்லது காற்று புகாத பாக்ஸில் போட்டு பிரீஸரில் வைக்க வேண்டும். பிரீஸரில் வைப்பதால் துருவிய தேங்காய் மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். தேவைப்படும்போது பாக்ஸை 15 நிமிடங்கள் முன்னதாக பிரீஸரில் இருந்து வெளியில் எடுத்து வைக்க வேண்டும். ஒரு ஃபோர்க் அல்லது கத்தியால் தேவையான அளவு எடுத்து கொண்டு உடனே பாக்ஸை பிரீஸரில் வைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்தால்தான் கெடாமல் இருக்கும்.
- இரண்டாவது முறை துருவிய தேங்காயை வெய்யிலில் அல்லது அவனில் 100 டிகிரி ஃபாரஹீட்டில் 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் வைத்து எடுத்தால் அந்த உலர்ந்த தேங்காய் துருவல் சாதரண வெப்பநிலையில் வெளியில் வைத்திருந்தாலும் மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும்.