பீட்ரூட் மாதுளம்பழம் பழச்சாறு (ஜூஸ்)

பீட்ரூட் மாதுளம்பழம் பழச்சாறு (ஜூஸ்)

இயற்கையான பழங்கள், காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட பழச்சாறுகள் பருகுவது உடலுக்கு எவ்வளவு நன்மைகள் தரும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நீங்கள் எந்த வகை காய்கறிகளுடனும் ஏதேனும் ஒரு பழம் சேர்த்து பழச்சாறு தயாரிக்கலாம். நான் வழக்கமாக ஓரே நிறத்தில் உள்ள காய், மற்றும் பழம் சேர்த்து தயாரிப்பேன். உதாரணமாக பீட்ரூட்-மாதுளம்பழம், தக்காளி-தர்பூசணி, கேரட்–ஆரஞ்சு, வெள்ளரிக்காய்–கிவி மற்றும் பல. இது பார்க்க அழகாகவும், குழந்தைகள் காய்கறிகளை சுலபமாக உண்ண வைக்கவும் நமக்கு உதவும். புதிய பழச்சாறை உணவு இடைவெளியில் பருகுவது சத்தானது மட்டுமல்லாமல் பாக்கெட் உணவை தவிர்ப்பதற்கு மிகவும் ஏற்ற வழியாகும்.

எனக்கு தெரிந்த ஓருவர் தனது மகளுக்கு பள்ளியில் இருந்து வந்தவுடன் பழச்சாறு கொடுப்பார்கள். இதை அவர் வழக்கமாக கொண்டிருந்தாலும் அவருடைய மகள் அதை மறுக்காமல் பருகிவிடுவாள். நாளடைவில் அவளுக்கு தோலின் நிறம் நல்ல மாற்றம் உண்டாவது பழச்சாறு அருந்துவதால் என்பதை நான் அறிந்து வியந்தேன். சில வருடங்களுக்கு முன்னர் எனது வீட்டின் அருகில் உள்ள மற்றொருவர் காலையில் பழச்சாறு தயாரித்து குடும்பத்தினர் அனைவருக்கும் பருக கொடுப்பார். ஒரு நாளை உடலுக்கு சத்துதரும் பானத்துடன் தொடங்குவார். காஃபி, தேநீர் எதுவும் கிடையாது. நீங்களும் வெய்யில் காலங்களில் பல வகை பழச்சாறுகளை தயாரித்தால் பாட்டிலில் அடைத்து விற்கும் ஜூஸ் வகைகள் பருகுவதை தடுக்கலாம். வெளிப்படையாக கூறினால் நானே தினமும் பழச்சாறு தயாரிக்க மாட்டேன். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தயாரிப்பேன்.

இன்றைய பழச்சாறில் நாம் சேர்ப்பது பீட்ரூட் மற்றும் மாதுளம்பழம். இவை இரண்டிலும் ஆன்டி ஆக்ஸிடண்ட் அதிகம் நிறைந்துள்ளது. பீட்ரூட், மாதுளை இரண்டிலும் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் தன்மை உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவை தனிதனியாக பழச்சாறு தயாரித்து உண்டாலும் சத்து நிறைந்ததாகும். இதில் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது மட்டுமல்லாமல் பார்த்தவுடன் பருக தூண்டும் வகையில் இருக்கும். பீட்ருட்டில் உள்ள இனிப்பு சுவை, மாதுளையில் உள்ள புளிப்பு சுவை இவை இரண்டும் சேர்ந்து புதிய சுவையில் இருக்கும். நான் இந்த பழச்சாறை தண்ணீர் சேர்த்து தயாரிப்பேன். ஏனெனில் எனது குழந்தைகள் இந்த சுவையை விரும்புவார்கள். ஆனால் சிலர் பால் சேர்த்து தயாரிப்பாரகள். மில்க்ஷேக் விரும்புபவர்களுக்கு பீட்ரூட், மாதுளை மில்க்ஷேக் மிகச்சிறந்த மாறுபாடான சுவை நிறைந்த ஒன்றாகும். இப்போது தயாரிப்பு முறையை காணலாம்.

பீட்ரூட் மாதுளம்பழம் ஜூஸ் தயாரிக்க வீடியோ வழிமுறைகள்

பீட்ரூட் மாதுளம்பழம் ஜூஸ் தயாரிப்புமுறை

பீட்ரூட் மாதுளம்பழம் ஜூஸ்

Course: Drinks
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • பீட்ரூட் – 1 நடுத்தர அளவில் உள்ளது (1 கிண்ணம் நறுக்கியது)
  • மாதுளம்பழம் – 1 (1 கிண்ணம்)
  • எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
  • சர்க்கரை / தேன் – 2-3 மேசைக்கரண்டி

Instructions

  • பீட்ரூட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
    பீட்ரூட் மாதுளம்பழம் ஜூஸ் தயாரிப்புமுறை
  • மாதுளம் பழத்தை தோல் உரித்து முத்துக்களை தனியாக எடுத்து கொள்ளவும். உள்ளே உள்ள வெண்மையான மெல்லிய தோல்கள் இல்லாமல்.
    பீட்ரூட் மாதுளம்பழம் ஜூஸ் தயாரிப்புமுறை
  • பீட்ரூட் மற்றும் மாதுளையை பிளண்டர் அல்லது ஜூஸரில் அடித்து கொள்ளவும்.
    பீட்ரூட் மாதுளம்பழம் ஜூஸ் தயாரிப்புமுறை
  • 1/2 கிண்ணம் குளிர்ந்த தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.
    பீட்ரூட் மாதுளம்பழம் ஜூஸ் தயாரிப்புமுறை
  • பெரிய வடிகட்டியில் வடித்து கொள்ளவும். ஒரு ஸ்பூனால் அழுத்தி ஜூஸ் முழுவதும் வடிக்கவும். மீண்டும் அரை கிண்ணம் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டலாம்.
    பீட்ரூட் மாதுளம்பழம் ஜூஸ் தயாரிப்புமுறை
  • எலுமிச்சை சாறு, சர்க்கரை, ஒரு கிண்ணம் தண்ணீர் சேர்த்து ஜூஸுடன் கலக்கவும். சுவை சரி பார்த்து இனிப்பு தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும்.
    பீட்ரூட் மாதுளம்பழம் ஜூஸ் தயாரிப்புமுறை
  • ஐஸ் கட்டிகள் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ உடனே பரிமாறவும்.
    பீட்ரூட் மாதுளம்பழம் ஜூஸ் தயாரிப்புமுறை

பரிமாற பரிந்துரைப்பது

  • குளிர்ச்சியான புத்துணர்வு தரும் சத்தான பீட்ரூட்- மாதுளை ஜூஸை மதிய உணவிற்கு முன்னர் அல்லது பள்ளி சிற்றுண்டிக்கு பிறகு அருந்தலாம்.
  • நீங்கள் அழகாக பரிமாற விரும்பினால் டம்ளரின் விளிம்பில் எலுமிச்சை சாறு தடவி அதில் சர்க்கரை தூவி கொள்ளவும். ஜூஸ் நிரப்பும் முன்னர் செய்து கொள்ளவும். புதினா கொண்டு அலங்கரிக்கவும்.

மாறுபாடாக பரிந்துரைப்பது

  • பீட்ரூட் மாதுளை மில்க்ஷேக் தயாரிக்க தண்ணீருடன் பால் சேர்த்து கொள்ளவும். இம்முறையில் தயாரித்தால் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டாம். குழந்தைகளுக்கு பாலுக்கு பதிலாக இதை கொடுக்கலாம்.
  • நீங்கள் வேறு பழம் அல்லது காய்கறி ஏதேனும் சேர்த்து கொள்ளலாம். எனது தேர்வு ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, சிகப்பு திராட்சை, தர்பூசணி மற்றும் கேரட் சேர்க்கலாம்.
  • ஜூஸ் தயாரிக்கும் போது ஒரு சிட்டிகை கருப்பு உப்பு அல்லது சாட் மசாலாவை ஜூஸுடன் சேர்த்தால் சுவை அதிகமாக கிடைக்கும்.


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.