மசாலா பாவ்
மசாலா பாவ் என்பது மும்பையின் தெருவோரங்களில் விற்பனை செய்யப்படும் ஒரு சிற்றுண்டியாகும். தெருவோர வியாபாரிகள் எப்படி இவ்வளவு சுவையான உணவு வகைகளை கண்டுபிடித்தார்கள் என்பது வியப்பான விஷயமாகும். உங்களுக்கு மும்பையின் தெருவோர சிற்றுண்டிகள் பழக்கமில்லை என்றால் நீங்கள் நிச்சயம் அதன் சுவையை இழப்பீர்கள். நான் ஏற்கனவே சில சாட் வகைகளை பகிர்ந்துள்ளேன். இன்னும் நிறைய வகைகளை நிச்சயம் உங்களுடன் பகிர்வேன்.
இப்பொழுது இன்றைய சமையல் செய்முறைக்கு வருவோம். மசாலா பாவ் எனப்படுவது மிருதுவான பாவ் பன்னுடன் மசாலா சேர்த்து செய்வதாகும். இது வெண்ணெய் சேர்த்து டோஸ்ட் செய்வதால் கூடுதல் சுவையுடன் இருக்கும். இது நிச்சயம் ஒரு மாலை நேர சிற்றுண்டியாக அல்லது இரவு நேர உணவிற்கு அதுவும் விடுமுறை நாட்களில் உண்ண ஏற்றது.
தெருவோரங்களில் கிடைக்காவிடில் நீங்கள் தேடி அலைய வேண்டாம். சுலபமாக வீட்டில் அதுவும் சுகாதாரமான முறையில் தயாரித்து குடும்பத்தினரை மகிழ்விக்கலாம்.
மசாலா பாவ் தயாரிப்பு முறை
மசாலா பாவ்
Ingredients
- பாவ் பன் – 4
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
- பூண்டு பற்கள் – 2 (பொடியாக நறுக்கியது)
- குடமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
- பாவ் பாஜி மசாலா – 2-3 தேக்கரண்டி
- காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி தழை – 4-5 கொத்து (பொடியாக நறுக்கியது)
- எலுமிச்சை சாறு – சில துளிகள்
- உப்பு – தேவையான அளவு
- வெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
Instructions
- அகலமான ஒரு வாணலியில் 1 மேசைக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்க்கவும். நன்றாக குழையும் வரை வதக்கவும்.
- குடமிளகாய் துண்டுகள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், பாவ் பாஜி மசாலா தூள் சேர்க்கவும்.
- 2-3 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து சுவையான மசாலா தயார் ஆகும் வரை வைக்கவும்.
- சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து சுவை சரி பார்க்கவும். கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
- பாவ் பன் இரண்டாக வெட்டி மசாலாவை வைக்கவும்.
- ஒரு தோசை கல்லை வைத்து அதில் பாவ் பன்னை வைத்து சுற்றிலும் 1 மேசைக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும். மாசாலா வைத்த பக்கம் மேலே இருக்குமாறு வைக்கவும்.
- ஒரு பக்கம் டோஸ்ட் ஆனபின்னர், சிறிதளவு வெண்ணெயை மசாலா மேல் ஒவ்வொரு பன்னிலும் வைக்கவும். மசாலாவின் சுவை மிருதுவான பன்னில் இறங்கும்.
- பன்னை மெதுவாக திருப்பிவிட்டு மறுபக்கமும் டோஸ்ட் செய்யவும். இது மேலும் சுவை கூடுதலாக கிடைக்கும்.
- அடுப்பை அணைத்து சூடாக பரிமாறவும்
பரிமாற பரிந்துரைப்பது
- ஒரு தட்டில் இரண்டு பன்களை வைத்து மேலே சிறிதளவு மசாலா போட்டு எலுமிச்சை துண்டுகள் வைத்து பரிமாறவும்.