கொத்து பரோட்டா
கொத்து பரோட்டா “சில்லி பரோட்டா” என்றும் தமிழ் நாட்டில் அழைக்கப்படுகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இது மிகவும் பிரபலம். கொத்து பரோட்டா பொதுவாக மீதமான பரோட்டாவில் செய்யப்படுவதாகும். ஆனால் கொத்து பரோட்டா அதிகமாக அனைவராலும் விரும்பபடுவதால் மீதமான பரோட்டா அல்லது புதிய பரோட்டாவை உதிர்த்து நிறைய வெங்காயம், பொடியாக்கிய சிக்கன், முட்டை, சிறிதளவு சால்னா சேர்த்து செய்யப்படுகிறது. அடி கனமான தோசைக்கல்லில் இரும்பு கரண்டி பயன்படுத்தி உணவகங்களில் தயாரிக்கப்படுகிறது.
நான் இங்கு முட்டை கொத்து பரோட்டா செய்முறையை பகிர்ந்துள்ளேன். உங்களிடம் சிக்கன் இருந்தால் அதையும் சேர்த்துகொள்ளலாம். சால்னா எப்போதும் இருக்காது. அதனால் சால்னா இல்லாமல் தயாரிக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். இரும்பு கரண்டி கடைகளில் உபயோகிக்கும் அளவு கெட்டியாக நம்மிடம் இருக்காது. எனவே அதிக நேரம் வதக்கி அந்தளவு சுவையை கொண்டுவரலாம்.
கொத்து பரோட்டா தயாரிப்பு முறை
கொத்து பரோட்டா
Ingredients
- பரோட்டா – 4
- வெங்காயம் – 2 பெரியது (நீளவாக்கில் நறுக்கியது)
- தக்காளி – 1 பெரியது / அல்லது 2 சிறியது (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி, பூண்டு – 1 மேசைக்கரண்டி (தட்டியது)
- பச்சை மிளகாய் – 4
- கரம் மசாலா/ சிக்கன் மசாலா – 2 தேக்கரண்டி
- முட்டை – 2-3
- கடுகு – 1/4 தேக்கரண்டி
- கருவேப்பிலை – 5
- கொத்தமல்லி – 1 கையளவு
- புதினா இலைகள் – 5-6 இலைகள்
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
Instructions
- பரோட்டாவை சிறிய துண்டுகளாக உதிர்த்து கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு வெடிக்கவிட்டு கருவேப்பிலை சேர்க்கவும்.
- வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- தக்காளி சேர்த்து வதக்கி கரம் மசாலா, நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை, சிறிதளவு புதினா இலைகள் சேர்க்கவும்.
- உதிர்த்து வைத்த பரோட்டவை சேர்த்து நன்றாக எல்லாவற்றையும் கிளறி 5 நிமிடங்கள் வதக்கவும்.
- முட்டை சேர்த்து வேகும்வரை நன்றாக கிளறிவிடவும்.
- கொத்தமல்லி தழை, நறுக்கிய பச்சை மிளகாய் கொண்டு அலங்கரிக்கவும். கொத்து பரோட்டா பரிமாற தயார்.
கொத்து பரோட்டா தயாரிக்க விரிவான படிமுறைகள்
அடிகனமான வாணலியில் எண்ணெய் சூடாக்கி (இரும்பு வாணல்) கடுகு வெடிக்கவிடவும். கருவேப்பிலை சேர்க்கவும்.
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தட்டிய இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும்.
நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, கரம் மசாலா, நறுக்கிய கொத்தமல்லி தழை, கருவேப்பிலை, சிறிதளவு புதினா இலைகள் சேர்த்து எல்லாவற்றையும் கிளறிவிடவும்.
உதிர்த்து வைத்த பரோட்டாவை சேர்த்து மசாலாவுடன் நன்றாக கலந்துவிடவும். மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வதக்கவும். எண்ணெய் தேவைப்பட்டால் சேர்க்கவும். பரோட்டாவின் மேல் மசாலா சேரும்வரை நன்றாக வதக்கவும்.
முட்டை சேர்த்து நன்றாக வேகும்வரை வதக்கவும். கைவிடாமல் நன்றாக கிளறி விடவும்.
கொத்தமல்லி தழை, நறுக்கிய பச்சை மிளகாய் கொண்டு அலங்கரிக்கவும். கொத்து பரோட்டா பரிமாற தயார்.
குறிப்பு
- காரம் அதிகமாக வேண்டுமானால் வர மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- தயிர் பச்சடியுடன் சுவையான பரோட்டாவை பரிமாறவும்.
வேறுவிதமாக தயாரிப்பது
- பரோட்டா இல்லாவிடில் சப்பாத்தி அல்லது பிரட் உபயோகித்து இதே முறையில் தயாரிக்கலாம்.