வாழைப்பூ வடை
வாழைப்பூ வடை என்பது வாழைப்பூவை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையான சிற்றுண்டியாகும். இதை மாலை நேரம் டீயுடனும், கலந்த வகை சாதத்துடனும் பரிமாற ஏற்றது. வாழைப்பூ பொரியல் அல்லது வாழைப்பூ உசிலி, செய்யும்போது சிறிதளவு வாழைப்பூவை எடுத்துவைத்து மாலை நேரத்தில் செய்துகொள்ளலாம். இதற்கு அதிகமான அளவு வாழைப்பூ தேவையில்லை. இரண்டு கையளவு இருந்தால் கூட போதுமானதாகும்.சுத்தம் செய்ததை குளிர் சாதனபெட்டியில் வைக்கவேண்டும். அல்லது பூவை கடைசியில் சிறிதளவு சுத்தம் செய்யாமல் வைத்துவிட்டு வடை செய்யுபோது சுத்தம் செய்து கொள்ளலாம். சிறிதளவு என்பதால் அதிக நேரம் சுத்தம் செய்ய செலவாகாது. ஆனால் வாழைப்பூ வடை மற்ற வடைகளில் இருந்து சுவையில் முற்றிலும் மாறுபாடாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். ஒரு முறை முயற்சித்தால் நீங்கள் அடிக்கடி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள்.
வாழைப்பூ வடை தயாரிப்பு முறை
வாழைப்பூ வடை
Ingredients
- வாழைப்பூ – 1
- கடலை பருப்பு – 1 கிண்ணம்
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- வர மிளகாய் – 2 (அல்லது 1 தேக்கரண்டி வர மிளகாய் தூள்)
- பூண்டு – 4 பற்கள்
- இஞ்சி – சிறிய துண்டு
- கருவேப்பிலை – 2 கொத்து (பொடியாக நறுக்கியது)
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
- பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
Instructions
- வாழைப்பூவை சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்த்து சுத்தம் செய்து சிறிதளவு தயிர் சேர்த்த தண்ணீரில் பொடியாக நறுக்கி போட்டு வைக்கவும்.
- கடலைப்பருப்பை தண்ணீரில் 1 மணிநேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவும்.
- கடலைபருப்புடன் இஞ்சி, பூண்டு, வர மிளகாய், சீரகம், பெருஞ்சீரகம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- அரைத்த மாவுடன் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கைகளாலும் கலந்துகொள்ளலாம்.
- அரைத்த மாவில் தண்ணீர் இருக்க கூடாது. எனவே கடலை பருப்பை நன்றாக வடித்துவிட்டு அரைக்கவும். வாழைப்பூவையும் நன்றாக கையால் பிழிந்து தண்ணீர் இல்லாமல் சேர்க்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி மாவை சிறிதளவு எடுத்து வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
- பொன்னிறமாகி இரண்டு புறமும் வெந்தபின்னர் எடுத்து அதிகப்படியான எண்ணெய் வடிய பேப்பர் டவளில் போட்டு வைக்கவும். மொறுமொறுப்பான சூடான வாழைப்பூ வடையை சுவைத்து மகிழவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- வாழைப்பூ வடையை மாலை நேரத்தில் டீயுடன் பரிமாறலாம்.
- சாதம், கலந்த சாத வகைகளுடனும் பரிமாறலாம்.