புளியோதரை
புளியோதரை அல்லது புளிகோரா தென்னிந்தியர்கள் பொதுவாக செய்யும் ஒரு கலவை சாதமாகும். புளியோதரை முதலில் தோன்றியது பிராமணர்களின் சமையலறையில் ஆகும். முக்கியமாக ஐயங்கார் (பிராமணர்களில் ஒரு பிரிவு) வீடுகளில்தயாரிப்பதாகும். புளியோதரை பெரும்பாலும் கோவில்களில் பிரசாதமாகவும், வீடுகளில் நவராத்திரி மற்றும் ஆடிபெருக்கு சமயங்களிலும் செய்வர். முக்கியமாக விஷ்ணு ஆலயங்களில் பிரசாதமாக வழங்குவார்கள்.
தற்போது உடனடி புளியோதரை மிக்ஸ் மற்றும் பேஸ்ட் எல்லா பல்பொருள் அங்காடிகளிலும் கிடைக்கிறது. ஆனால் வீட்டில் செய்வது போன்ற உண்மையான சுவை இவற்றில் கிடைப்பதில்லை. புளியோதரை என்பது புளிக்காய்ச்சல் செய்து அதை வடித்த சாதத்துடன் கலந்து செய்வதாகும். புளிக்காச்சல் என்பது புளிக்கரைசலை தாளித்த பொருட்கள், அரைத்த மசாலாவுடன் சேர்த்து கொதிக்க வைப்பதாகும். புளிக்காச்சலில் ஏராளமான வகைகள் உள்ளன. அவை பாரம்பரிய முறையிலும், ருசியிலும் வேறுபடும். உதாரணத்திற்கு கர்நாடகாவில் புளிக்காச்சலில் வெல்லம் சேர்ப்பர். ஆந்திராவில் வறுத்த நிலக்கடலை பொடி சேர்ப்பார்கள். ஒவ்வொரு முறைக்கும் வேறுவிதமான சுவை கிடைக்கும். புளிக்காச்சலை அதிக அளவில் செய்து 1-2 மாதங்களுக்கு வைத்துக்கொண்டு தேவைப்படும்போது புளியோதரை செய்துகொள்ளலாம். அவசரமான காலை நேரத்தில் லஞ்ச் பாக்ஸ் கட்ட மிகவும் உபயோகமாகும். புளியோதரை பயணங்களின்போது எடுத்து செல்லவும் ஏற்றது. இந்த நாவிற்கு சுவைஊட்டும் ருசியான புளியோதரையை செய்து உண்டு மகிழுங்கள். இது எனது மாமியார் செய்யும் புளியோதரை முறையாகும்.
புளிக்காய்ச்சல் தயாரிக்கும் முறை
புளிக்காச்சல்
Ingredients
- புளி – எலுமிச்சை அளவு
- தனியா (கொத்தமல்லி விதைகள்) – 1 தேக்கரண்டி
- வர மிளகாய் – 5-6
- கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
- சுண்டல் கடலை -1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
- நல்லெண்ணெய் (அல்லது கடலை எண்ணெய்) – 2 மேசைக்கரண்டி
- கடுகு – 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை - சிறிதளவு
Instructions
- கொதிக்கவைத்த தண்ணீரில் புளியை ½ மணி நேரம் ஊற வைக்கவும். கரைத்து வடிகட்டி வைக்கவும்.
- கொத்தமல்லி (தனியா), வர மிளகாய் , கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு அனைத்தையும் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து, கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- சுண்டல் கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஒரு வாணலியில் புளிக்கரைசல், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
- கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்த பவுடரை சேர்க்கவும். கெட்டியாகும் வரைகொதிக்கவிடவும்.
- புளிக்கரைசல் பாதியளவு ஆனபின்னர் ஊற வைத்த சுண்டல் கடலையை சேர்க்கவும். ஆறவைத்து கண்ணாடி பாட்டிலில் மாற்றி வைக்கவும். சுண்டல் கடலை மசாலாவில் ஊறி நல்ல சுவையைக்கொடுக்கும்.
- கடுகு, கருவேப்பிலை தாளித்து புளிக்காச்சலில் சேர்க்கவும்.
குறிப்பு
- புளிக்காச்சல் செய்யும் போது புளிக்கரைசல், அரைத்த பவுடரும் சேர்ந்து கொதிக்க 30-45 நிமிடங்கள் ஆகும். நேரத்தை குறைக்க புளியை கெட்டியாக கரைத்து ஊற்றினால் விரைவில் செய்யலாம்.
- வறுத்த கடலையை சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும். சிறிதளவு வெல்லம் சேர்த்தால் நன்றாக இருக்கும்.
புளியோதரை தயாரிக்கும் முறை
புளியோதரை
Ingredients
- வடித்த சாதம் – 1 கப் (உதிரியாக இருக்கவேண்டும்)
- கடலை எண்ணெய் – 1 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- நிலக்கடலை – 1 மேசைக்கரண்டி
- புளிக்காச்சல் – தேவையான அளவு
Instructions
- ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்.
- கடுகு பொரிந்தவுடன் நிலக்கடலை சேர்த்து வதக்கவும்.
- 1 - 2 தேக்கரண்டி புளிக்காச்சல் சேர்த்துக்கொள்ளவும்.
- வடித்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும்.
- ருசி பார்த்து புளிக்காச்சல் குறைவாக இருந்தால் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும்.
- .புளிக்காச்சல் முழுவதுமாக சாதத்துடன் கலந்த பின்னர் அடுப்பை அணைத்துவிடவும். சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- புளியோதரையை சிப்ஸ், பப்படம் மற்றும் வீட்டில் தயாரிக்கும் வடாமுடன் பரிமாறலாம்.
- அவியல், காய்கறிகள் சேர்த்து செய்யும் கூட்டுடனும் பரிமாறலாம்.
- புளியோதரையை தயிர் பச்சடியுடனும் பரிமாறலாம்.
வேறுவிதமாக பரிந்துரைப்பது
- புளிக்காச்சலை பயன்படுத்தி உடனடி புளி அவல் அல்லது அவல் புளியோதரை தயாரிக்கலாம். அவலை கழுவி தண்ணீரை வடித்துவிட்டு வாணலியில் மேலே குறிப்பிட்டுள்ளவற்றை தாளித்து புளிக்காச்சல் சேர்த்து கிளறவும். இதில் அவலை சேர்க்கவும். அவல் புளியோதரை தயார். இதை மாலை வேலையில் டிபனுக்கும், காலை நேரத்தில் காலை உணவாகவும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- இதே முறையில் வீட்டில் தயாரித்த சேவையை கொண்டு புளி சேவை செய்யலாம்.
- மேலும் புளிக்காச்சல் எந்த ஒரு சிறுதானியம் கொண்டு தயாரித்த உணவுடன் சேர்த்து சத்துள்ள உணவாக எப்போது வேண்டுமானாலும் பரிமாறலாம்.