உடனடி மட்டன் பிரியாணி (குக்கரில் செய்வது)
பிரியாணி இந்தியா முழுவதும் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் ஒன்றாகும். பலவித சுவைகளில் செய்யப்படுகிறது. இது முஸ்லிம்களின் பூர்வீகமாக நம்பப்படுகிறது. பாரம்பரிய முறையில் தயாரிக்கும் பிரியாணி மசாலா சேர்த்து ஊறவைத்த மட்டனுடன் பாதியளவு வேகவைத்த அரிசியை அடுக்கடுக்காய் பரத்தி தம் போட்டு செய்வதாகும். இந்த செய்முறையை பின்னர் நான் பதிவிடுகிறேன். இப்பொழுது பதிவிட்டுள்ளது பொதுவாக தமிழ் நாட்டில் செய்யப்படும் முறையாகும். இந்த உடனடி மட்டன் பிரியாணி சுலபமாக ஒரே பாத்திரத்தில் செய்வதாகும். மட்டன், அரிசி, மசாலா பொருட்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து குக்கரில் செய்யும் முறையாகும். இந்த முறையில் அரிசியில் மசாலா முற்றிலுமாக இறங்கி நல்ல சுவையுடன் இருக்கும்.
மட்டன் பிரியாணி சுவையிலும், அனைவரும் விரும்புவதிலும் முதலிடத்தில் உள்ளதை மறுக்கமுடியாது. பிரியாணி முக்கிய நிகழ்ச்சியின்போதும், பண்டிகை நாட்களிலும் செய்யப்படுகிறது. கிறிஸ்துமஸ் சமயத்தில் பெரும்பாலும் எங்கள் ஊரில் எல்லா வீடுகளிலும் பிரியாணியின் மணம் நிறைந்து இருக்கும். தற்போது திருமணங்களில் உள்ள விருந்தில் பிரியாணி பரிமாறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வார இறுதி நாட்களில் அனைவராலும் பிரியாணி செய்யப்படுகிறது. இப்போது உடனடி மட்டன் பிரியாணி செய்முறையை பார்ப்போம்.
உடனடி மட்டன் (ஆட்டிறைச்சி) பிரியாணி செய்முறை
உடனடி மட்டன் பிரியாணி (குக்கரில் செய்வது)
Ingredients
- பாஸ்மதி அரிசி – ½ கிலோ (2.5 கப்) அல்லது சீரகசம்பா அரிசி
- வெங்காயம் – 3 நீளவாக்கில் நறுக்கியது
- தக்காளி – 3 நறுக்கியது
- பச்சை மிளகாய் – 6-8 கீரியது
- புதினா – 1 கிண்ணம்
- கொத்தமல்லி - ½ கட்டு
- பிரியாணி இலை - 1
- வர மிளகாய் தூள் -2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அள்வு
- எண்ணெய் – 1/4 கின்ணம்
- நெய் – 1/4 கிண்ணம்
- தண்ணீர் – 4 கிண்ணம்
மசாலா தயாரிக்க
- சிறிய வெங்காயம் -10 அல்லது 1 பெரிய வெங்காயம்
- பூண்டு – 10 பற்கள்
- இஞ்சி - 2 அங்குல துண்டு
- சோம்பு – 1 மேசைக்கரண்டி
- பட்டை – 2 துண்டு
- கிராம்பு - 5
- ஏலக்காய் - 3
- அன்னாசி பூ - 1
மட்டனை ஊற வைக்க
- மட்டன் (ஆட்டிறைச்சி) - ½ கிலோ
- இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- தயிர் – 1 கிண்ணம்
- எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
- உப்பு – 1 தேக்கரண்டி
- மிளகு தூள் – ½ தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
Instructions
தயாரிப்பு முறை
- மட்டன் துண்டுகளை கழுவி தயிர், எலுமிச்சை சாறு, உப்பு, மிள்கு தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். 2-4 மணி நேரம் ஊறவிடவும். இரவு முழுவதும் ஊற வைத்தால் மிகவும் நல்லது.
- அரிசியை 2 முறை கழுவி 15 நிமிடங்கள் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
- ஒரு வாணலியில் 1 மேசைக்கரண்டி நெய் ஊற்றி ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்துவிட்டு 2-3 நிமிடங்கள் வறுக்கவும். அரிசியிலிருந்து நல்ல வாசம் வரும். இது விருப்பபட்டால் செய்யலாம். ஆனால் அரிசியை வறுப்பதால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிரியாக பிரியாணி இருக்கும்
- மசாலா தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும். எல்லா மசாலா பொருட்களையும் அரைத்துக்கொண்டால் பிரியாணி உண்ணும் போது வாயில் கடிபடாது.
- வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா இலைகள், கொத்தமல்லி தழை அனைத்தையும் நறுக்கி தனியாக வைக்கவும்.
செய்முறை
- நடுத்தர அளவில் உள்ள குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் நெய் சேர்க்கவும்.
- பிரியாணி இலை மற்றும் அரைத்த மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.
- மஞ்சள் தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும்.
- எல்லாவற்றையும் 10 நிமிடங்கள் நிறம் மாறும் வரை வதக்கவும்.
- நறுக்கிய தக்காளி, ஊற வைத்த மட்டன் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் வதக்கவும்.
- வர மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து 4 கிண்ணம் அளவு தண்ணீர் சேர்க்கவும். 2.5 கப் அரிசிக்கு இந்த அளவு தண்ணீர் சரியாக இருக்கும்.
- ருசி பார்த்து உப்பு தேவைப்பட்டால் சேர்க்கவும்.
- குக்கரை மூடி 10 நிமிடங்கள் வேகவிடவும். (அல்லது 3 விசில் விடவும்)
- குக்கர் நன்றாக ஆறியபின்னர் மூடியை திறந்து மீண்டும் அடுப்பில் சிறிது நேரம் வைக்கவும்.
- மட்டன் நன்றாக வெந்து எண்ணெய் தனியாக பிரிந்து மேலே மிதக்கும். சூடாக இருப்பதால் மேலே உள்ள கிரேவி கொதிக்கும்.
- வறுத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து உப்பு சரி பார்க்கவும்.
- குக்கரை மூடி அடுப்பை குறைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும். இந்த முறை 1 விசில் போதுமானதாகும். அதிக நேரம் வைத்துவிட்டால் குழைந்துவிடும்.
- குக்கர் சூடு ஆறிய பின்னர் மூடியை திறந்து நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கவும். சிலருக்கு வறுத்த முந்திரி சேர்ப்பது பிடிக்கும். விருப்பட்டால் முந்திரி சேர்த்து 2 மேசைக்கரண்டி நெய் சேர்த்தால் கூடுதல் மணம் கிடைக்கும்.
- குக்கரின் ஓரத்தில் ஒரு ஸ்பூனால் லேசாக அரிசி உடையாமல் கிளறி 5-10 நிமிடங்கள் ஆற வைத்து பின்னர் பரிமாறவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- உடனடி மட்டன் பிரியாணியை தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
- வேக வைத்த முட்டை, சிக்கன் வறுவல், எண்ணெய் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சிப்ஸ், மற்றும் ஊறுகாயுடனும் பரிமாறலாம்.