உருளைக்கிழங்கு பரோட்டா
உருளைக்கிழங்கு பரோட்டா என்பது இந்தியர்கள் தயாரிக்கும் தட்டையான, உள்ளே வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு மற்றும் மசாலா கலவை சேர்த்து செய்வதாகும். இது வட இந்தியாவில் மிகவும் பிரபலம், முக்கியமாக பஞ்சாப்பில். வட இந்தியர்கள் இதை காலை, மதியம், இரவு உணவிற்கு என்று எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்வர். தற்போது இது தென்னிந்தியாவில் பிரசித்தமாகிவிட்டதால் தெருவோரங்களிலும், உணவகங்களிலும் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. இது அதிகமான அளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து செய்யப்படுகிறது. இது மேலும் மேலே வெண்ணெய் போட்டு, காரம் சேர்த்த தயிர், மற்றும் ஊறுகாயுடன் பரிமாறப்படுகிறது.
உருளைக்கிழங்கு பரோட்டா எனக்கு மிகவும் விருப்பமானது. நான் எப்போது உணவகங்களுக்கு சென்றாலும் தவறாமல் ஆர்டர் செய்து உண்பேன். இதை வீட்டிலும் தயாரிக்கலாம் ஆனால் சிறிது பழக்கம் இருக்கவேண்டும். மாவு பிசையும் பதமும், உள்ளே வைக்கும் கலவையின் பதமும் சரியாக இருக்க வேண்டும், முக்கியமாக கலவை ஈரப்பதம் அதிகமாகிவிடக்கூடாது. மாவும் மிருதுவாக இருக்கவேண்டும். கலவை வைத்த மாவை தேய்க்கும் போது மெதுவாக தேய்க்கவேண்டும் இல்லாவிடில் கலவை வெளியில் வந்துவிடும். மாவை பிசைந்து சிறிது நேரம்விட்டு செய்யும்போது மாவு மிருதுவாகி தேய்க்க சுலபமாக இருக்கும். தென்னிந்தியினருக்கு இதை 3-4 முறை செய்தபின்னரே சரியாக செய்யவரும். நான் அடிக்கடி செய்து எனது குடும்பத்தினரை மகிழ்விக்கிறேன்.
உருளைக்கிழங்கு பரோட்டா செய்முறை
உருளைக்கிழங்கு பரோட்டா
Ingredients
- கோதுமை மாவு – 2 கிண்ணம்
- நெய் - சுடுவதற்கு (அல்லது எண்ணெய் அல்லது வெண்ணெய் )
உள்ளே வைக்க
- உருளைக்கிழங்கு (வேகவைத்து, துருவி மசித்தது) – 3-4
- வர மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
- கரம் மசாலா - 1 தேக்கரண்டி
- சீரகபொடி – 2 தேக்கரண்டி
- ஆம்சூர் பவுடர் - 1/2 தேக்கரண்டி
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2-3 மேசைக்கரண்டி
- பிரட் தூள் – தேவைப்பட்டால்
Instructions
- கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- உள்ளே வைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன்றாக பிசைந்துகொள்ளவும்.
- கோதுமை மாவை சப்பாத்தி போல தேய்த்து அதன் மேல் உருளைக்கிழங்கு கலவையை வைத்து ஓரங்களை மடித்துவிட்டு உருண்டையாக்கி மீண்டும் தேய்க்கவும்.
- தோசைக்கல்லில் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.
உருளைக்கிழங்கு பரோட்டா செய்ய விரிவான செய்முறை
கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.
உருளைக்கிழங்கை குக்கரில் 4 விசில் விட்டு வேகவைத்துகொள்ளவும்.
ஆறிய பின்னர் மத்தைகொண்டோ, அல்லது கைகளால் நன்றாக மசித்துக்கொள்ளவும்.
வர மிளகாய் தூள், சீரகத்தூள், ஆம்சூர் பொடி, கரம் மசாலா தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை அனைத்தையும் உருளைக்கிழங்குடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
நன்றாக கலந்தபின்னர் ஈர்ப்பதம் அதிகமாக இருந்தால் பிரட் தூள் சிறிதளவு சேர்த்து, பிசைந்துகொள்ளவும். ஈரப்பதம் மிக அதிகமாக இருந்தால் பரோட்டா தேய்ப்பது சிரமமாக இருக்கும்.
பிசைந்த கோதுமை மாவை எலுமிச்சை அளவில் உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கு கலவையையும் எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். மாவையும், கலவையும் ஒரே அளவு உருண்டைகளாக வைத்துக்கொண்டால் நல்லது.
ஒரு மாவு உருண்டையை எடுத்து தேய்த்து நடுவில் கலவையை வைக்கவும்.
ஓரங்களை எல்லாம் கலவையை சேர்த்து மூடும்படி மடித்து கலவை வெளியே வராதபடி தேவைப்பட்டால் மேலும் சிறிது மாவை சேர்த்து மூடி வைக்கவும்.
இதே போல மீதமுள்ள எல்லா மாவையும் கலவையை உள்ளே வைத்து கொள்ளவும். இவ்வாறு செய்வதால் மாவை மீண்டும் தேய்ப்பது சுலபமாக இருக்கும்.
கலவையுடன் உள்ள மாவு உருண்டை ஒன்றை எடுத்து உள்ளங்கையால் மெதுவாக தட்டையாக்கி கல்லில் வைத்து மெதுவாக தேய்த்துக்கொள்ளவும்.
தோசைக்கல்லை சூடாக்கி தேய்த்த பரோட்டாவை மெதுவாக போடவும்.
அடிபக்கம் வெந்தபின்னர் திருப்பிவிட்டு மேலே நெய் ஊற்றவும்.
இருபுறமும் நன்றாக வெந்து கருப்பு புள்ளிகளுடன் உப்பி வரும்.
பரிமாற பரிந்துரைப்பது
- தயிருடன் உப்பு, மிளகாய் தூள் கலந்து, ஊறுகாய் மற்றும் பப்படமுடன் சூடான உருளைக்கிழங்கு பரோட்டாவை பரிமாறவும்.
குறிப்பு
- உருளைக்கிழங்குக்கு பதிலாக காலிஃப்ளவர், முள்ளங்கி, பன்னீர், வெந்தயக்கீரை, புதினா போன்ற காய்கறிகளை பயன்படுத்தலாம்.