சிக்கன் பிரியாணி

சிக்கன் பிரியாணி

பிரியாணி என்பது அரிசியுடன் மசாலா சேர்த்து மட்டன் / சிக்கன் / காய்கறிகள் ஏதேனும் ஒன்றுடன் செய்யும் ஒரு கலவை சாதமாகும். இந்தியர்களின் மிகவும் விருப்பமான பிரசித்தமான உணவு வகைகளில் இதுவும் ஒன்றாகும். உலகின் மற்ற பகுதிகளிலும் கூட பிரியாணி விருப்பமான உணவாகும். பிரியாணி இந்திய முஸ்லிம் மன்னர்களின் காலத்தில் சமையல் கலைஞர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உணவு வகையாகும். தற்போது மூலை முடுக்கலில் எல்லாம் அறிந்த விருப்பமான உணவாகியுள்ளது. அரண்மனை சமையல் கலைஞர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனி சுவையுடன் சமைத்து தங்கள் மன்னரை மகிழ்விப்பர். ஆதலால் தற்பொழுது நமக்கு பல வகையான பிரியாணி வகைகள் கிடைத்துள்ளன. ஹைதராபாத் பிரியாணி, முகலாய் பிரியாணி, மலபார் பிரியாணி மற்றும் பல வகைகள் உள்ளன.

அரிசி ஒரு அடுக்கு சமைத்த கறி மசாலா கலவை ஒரு அடுக்கு என்று அடுத்தடுத்து பெரிய பாத்திரத்தில் பரத்தி மூடி தம் போட்டு செய்வது ஒரு வகையாகும். மற்றொரு வகை தென்னிந்தியர்கள் அரிசி, மட்டன், மசாலா கலவை சேர்த்து குக்கரில் செய்யும் முறையாகும். இந்த பிரியாணி செய்முறையை கீழே குறிப்பிட்டுள்ளேன்.

கீழே கொடுக்கப்பட்டுள்ளது சிக்கன் பிரியாணி செய்முறையாகும். இதே முறையில் சிக்கனுக்கு பதிலாக வான் கோழி பிரியாணி, மட்டன் பிரியாணி, காடை பிரியாணி, வாத்து பிரியாணி, மாட்டிறைச்சி பிரியாணி, பன்றி இரைச்சி பிரியாணி, காளான் பிரியாணி, சோயா பிரியாணி, மீன் பிரியாணி, இறால் பிரியாணி , சோளம் (கார்ன்) பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி (பல வகை காய்கறிகள் சேர்த்தது) செய்யலாம்.

நான் இங்கு ஐங்து விதங்களில் பிரியாணி செய்யும் முறைகளை உங்களுடன் ப்கிர்ந்து கொள்கிறேன். இதில் உங்களுக்கு விருப்பமான முறையில், உள்ளதை தேர்வு செய்து சமைத்து மகிழுங்கள்.

சிக்கன் பிரியாணி செய்முறை

சிக்கன் பிரியாணி

Prep Time20 minutes
Cook Time40 minutes
Total Time1 hour
Course: Main Course
Cuisine: Indian
Servings: 6 people
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • பாஸ்மதி அரிசி - 3 டம்ளர்
  • சிக்கன் – 1/2 கிலோ (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
  • வெங்காயம் – 2 பெரியது அல்லது 3 சிரியது (நீளவாக்கில் நறுக்கியது)
  • தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி இலைகள் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
  • புதினா இலைகள் - 1/4கப் (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது)
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  • வெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  • தயிர் – 1/4 கப்
  • தேங்காய் பால் தண்ணீர் கலந்தது - 4.5 கப் (1 கப் தேங்காய் பாலுடன் 3.5 கப் தண்ணீர் கலக்கவும்)
  • உப்பு – ருசிக்கேற்ப
  • வர மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி (அல்லது தேவைக்கேற்ப)
  • சோம்புத்தூள் - 2 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

ஊற வைக்க தேவையான பொருட்கள்

  • உப்பு - 1/4 தேக்கரண்டி
  • எலுமிச்சை/ தயிர் – 2 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  • சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
  • மிளகு தூள் – ½ தேக்கரண்டி
  • வர மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

கரம் மசாலா

  • பிரியாணி இலை - 2
  • இலவங்கம் - 4
  • அன்னாசி பூ - 2
  • பட்டை - 5
  • ஏலக்காய் - 3

Instructions

தயாரிப்பு முறை

  • சிக்கனை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கலந்து வைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் சிக்கனை சேர்த்து கலந்து குளிர்சாதனப்பெட்டியில் 1/2 மணி நேரம் வைக்கவும்.
  • அரிசியை கழுவி 15 நிமிடங்கள் ஊற வைத்து தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும்.
  • விருப்பப்பட்டால் அரிசியை நெய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். இது பிரியாணிக்கு நல்ல ருசியை கொடுக்கும். மற்றும் அரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிரியாக இருக்கும். நேரமில்லையெனில் இதை தவிர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை

  • அடி கனமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணெயும், நெய்யும் சேர்த்து சூடாக்கவும். சூடானவுடன் கரம் மசாலா அனைத்தையும் சேர்க்கவும். கரம் மசாலா அனைத்தையும் அரைத்தும் சேர்க்கலாம்.
  • வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி-பூண்டு விழுது, மல்லி இலை, புதினா இலைகள் சேர்க்கவும்.
  • அடுத்து தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
  • அடுத்து கலந்துவைத்த சிக்கனை சேர்த்து மஞ்சள் தூள், வர மிளகாய் தூள், சோம்பு தூள், தயிர் மற்றும் உப்பு சேர்க்கவும். 5-10 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். தண்ணீர் குறைந்து சற்று கெட்டியாகும் வரை கிளறவும். (குறிப்பு; ஆட்டு இறைச்சியில் பிரியாணி செய்வதாக இருந்தால் கறி நன்றாக வெந்த பின்னரே அரிசியை சேர்க்க வேண்டும். கீழே குறிப்பிட்டுள்ள முறையில் உங்களுக்கு விருப்பமான முறையை தேர்வு செய்து கொள்ளவும்.)

குக்கரில் செய்யும் முறை

  • தண்ணீர் கலந்த தேங்காய் பாலை சேர்த்து அனைத்தையும் நன்றாக கொதிக்கவிடவும். ஊற வைத்த அரிசியை சேர்த்து உப்பின் அளவு சரி பார்த்து கொதிக்கவிடவும்.
  • குக்கரை மூடி வெயிட் போட்டு, அடுப்பை குறைத்து 20-30 நிமிடங்கள் வைக்கவும். விசில் சத்தம் வராத அளவில் அடுப்பை குறைத்து வைக்கவும். 20-30 நிமிடங்களில் பிரியாணி தயாராகிவிடும். அடுப்பை குறைத்து வைக்காவிடில் அடிபிடித்துவிடும்.

ரைஸ் குக்கரில் செய்யும் முறை

  • சிக்கன் சேர்த்த மசாலா கலவையுடன் அரிசி ம்றறும் தண்ணீர் கலந்த தேங்காய் பாலை சேர்த்து நன்றாக கலந்து ரைஸ் குக்கரில் வைக்கவும்.
  • உப்பு அளவு சரி பார்த்து ரைஸ் குக்கரில் சமைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் செய்யும் முறை

  • தண்ணீர் கலந்த தேங்காய் பாலுடன் சிக்கன் மசாலா கலவையை கொதிக்கவிடவும். ஊற வைத்த அரிசி சேர்த்து உப்பு அளவு பார்த்து கொதிக்கவிடவும்.
  • பாத்திரத்தை நன்றாக மூடிவிடவும். அடுப்பை குறைத்து 30 நிமிடங்கள் வேகவிடவும்.(அலுமினியம் ஃபாயிலைக் கொண்டு பாத்திரத்தை மூடி பின்னர் தட்டால் மூடினால் ஆவி வெளியேறாமல் தடுக்கலாம்.

கன்வென்ஷனல் ஓவனில் செய்யும்முறை

  • ஓவனில் வைக்கும் பாத்திரத்தில் சிக்கன் மசாலா கலவையுடன் ஊற வைத்த அரிசி தண்ணீர் கலந்த தேங்காய் பாலை சேர்த்து வைக்கவும்.
  • உப்பு அளவு சரி பார்த்து அலுமினியம் ஃபாயில் கொண்டு பாத்திரத்தை மூடி 45 நிமிடங்கள் 350 டிகிரியில் ஓவனில் வைக்கவும்.

மைக்ரோவேவ் ஓவனில் செய்யும்முறை

  • ஓவனில் வைக்கும் பாத்திரத்தில் சிக்கன் மசாலா கலவையுடன் ஊற வைத்த அரிசி தண்ணீர் கலந்த தேங்காய் பாலை சேர்த்து ஓவனில் வைக்கவும்.
  • உப்பு அளவு சரி பார்த்து மூடி வைத்து மைக்ரோ ஹையில் 20 நிமிட்ங்கள் வைக்கவும்.
  • இறுதியில் எந்த முறையில் செய்தாலும் மிகவும் ருசியான பிரியாணி தயார். கொத்தமல்லி இலைகள், வறுத்த முந்திரி மற்றும் திராட்சை கொண்டு அலங்கரிக்கவும்.

பரிமாற பரிந்துரைப்பது

  • பிரியாணியை தயிர் பச்சடியுடன் பரிமாறலாம்.
  • வேகவைத்த முட்டை, சிக்கன் வறுவல் , காடை வறுவல் , எண்ணெய் கத்திரிக்காய் , சிக்கன் கறி, சிக்கன் 65, புதினா சட்னி பிரியாணியுடன் பரிமாற ஏற்றவை ஆகும்.


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.