முழு கோதுமை புட்டு
முழு கோதுமை புட்டு மற்றொரு சத்தான புட்டு வகைகளில் ஒன்றாகும். இது தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் சிற்றுண்டி ஆகும். புட்டு ஆவியில் வேக வைக்கும் ஒரு உணவை வகை. நான் ஏற்கனவே கடைகளில் வாங்கும் கோதுமை மாவு அல்லது ஆட்டாவில் தயாரிக்கும் புட்டு செய்முறையை பகிர்ந்துள்ளேன். இது மாவு வீட்டில் தயாரித்து செய்யும் முறையாகும்.
முழு கோதுமையை கழுவி, காயவைத்து, வறுத்து அரைக்க வேண்டும். கோதுமை வறுப்பதால் புட்டு நல்ல வாசனையுடனும், சுவையுடனும் இருக்கும். இது மிகவும் சத்து நிறைந்த உணவாகும். இம்முறையில் அதிகமான அளவில் மாவு தயாரித்து ஒரு சில மாதங்களுக்கு வைத்து கொள்ளலாம். மாவு தயாராக இருந்தால் புட்டு சுலபமாக காலை உணவிற்கு, அல்லது மாலை சிற்றுண்டி அல்லது இரவு உணவிற்கு எப்போது வேண்டுமானாலும் தயாரித்து கொள்ளலாம்.
கோதுமை புட்டு தயாரிப்பு முறை
கோதுமை புட்டு
Ingredients
- கோதுமை / பஞ்சாபி கோதுமை அல்லது சம்பா கோதுமை – 1 கிலோ
புட்டு தயாரிக்க
- அரைத்த கோதுமை மாவு – 1.5 கிண்ணம்
- துருவிய தேங்காய் – 1/2 கிண்ணம்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
Instructions
- கோதுமையை தண்ணீரில் 2-3 முறை நன்றாக கழுவவும்.
- சுத்தமான ஒரு துணியில் பரத்தி வெயிலில் காயவிடவும். 2-3 நாட்கள் ஆகும் காய்வதற்கு. (வெயிலை பொருத்து)
- இதன் பின்னர் வெறும் வாணலியில் 5 நிமிடங்கள் வறுக்கவும். இதை விருப்பபட்டால் செய்யலாம். ஆனால் இதை செய்வதால் புட்டு வாசமாகவும், ருசியாகவும் இருக்கும்.
- காய வைத்த கோதுமையை அருகில் உள்ள அரவை மில்லில் கொடுத்து அரைத்து கொள்ளவும். ஒரு பேப்பரில் கொட்டி நன்றாக பரத்தி ஆற வைக்கவும். காற்று புகாத பாத்திரத்தில் வைத்து கொண்டால் 3 மாதங்கள் வரை உப்யோகிக்கலாம்.
- ஒரு பாத்திரத்தில் 1.5 கிண்ணம் கோதுமை மாவு போட்டு சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
- தண்ணீர் லேசாக தெளித்து பிசறவும்.
- மாவு முழுவதும் ஈரப்பதம் ஆகும் வரை சிறிது சிறிதாக தெளித்து பிசறவும். மாவு கட்டியாக இருப்பதாக தெரிந்தால் மிக்ஸியில் போட்டு 4-5 முறை சுற்றி எடுக்கவும்.
- புட்டு வேக வைக்க முதலில் புட்டு மேக்கரில் அடி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
- தற்போது புட்டு நிரப்பலாம். புட்டு குழாயில் துருவிய தேங்காய் போடவும். 5-6 ஸ்பூன் புட்டு மாவை நிரப்பவும். அழுத்திவிடாமல் லேசாக நிரப்பவும். இது புட்டு நன்றாக வேக உதவும். இதே போன்று தேங்காய், மாவு என்று புட்டு குழாய் முழுவதும் நிரப்பவும்.
- நிரப்பிய புட்டு குழாயை புட்டு குடம் அல்லது குக்கர் மேல் வைக்கவும். (நீங்கள் எந்த வகை வைத்து இருக்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போல செய்யவும்). சில நிமிடங்களில் ஆவி புட்டு குழாயின் மேல் உள்ள துளையின் வழியே வரும்.
- மேலும் சில நிமிடங்கள் கழித்து அடுப்பை நிறுத்தவும். கோதுமை மாவின் நல்ல மணம் வரும்.
- புட்டு குழாயினை எடுத்து ஒரு குச்சியால் தட்டி ஒரு தட்டில் போடவும். சிறிய புட்டு குழாயாக இருந்தால் திருப்பி வைத்து தட்டினால் போதுமானது. சுலபமாக எடுத்துவிடலாம்.
கோதுமை புட்டு பரிமாற பரிந்துரைப்பது
- ஆட்டா புட்டு வாழைப்பழம், தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து இனிப்பை அதிகம் விரும்புபவர்களுக்கு பரிமாறலாம்.
- காரம் அதிகம் விரும்புபவர்களுக்கு கடலை குழம்பு, பயறு (வேக வைத்த பச்சை பயறு) மற்றும் பப்படம் அல்லது முட்டை குருமாவுடன் பரிமாறலாம்.