வாழைப்பூ உசிலி
வாழைப்பூ சிறிய கிராமங்களில் அதிகமான வகைகளில் பயன்படுத்தபடுகிறது. நகர்புறங்களில் இதை சுத்தம் செய்வதற்கு அதிக நேரம் ஆவதால் யாரும் வாங்க விரும்புவதில்லை. ஆனால் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை கட்டுபடுத்தவும், ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், மன அழுத்தம் குறையவும் பயன்படுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்கவும். அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுபடுத்தவும் உதவுகிறது. நான் வாழைப்பூவை எப்படி சுத்தம் செய்து சமைப்பது என்பதையும் விளக்கியுள்ளேன். வாழைப்பூவை சுத்தம் செய்ய எப்படியும் அரைமணி நேரம் தேவைப்படும். எனவே எனது யோசனை தொலைக்காட்சி பார்க்கும் போது அல்லது குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு நேரம் செலவழிக்கும் சமயம் இதை சுத்தம் செய்து வைத்துகொள்ளலாம்.
எனக்கு வாழைப்பூவின் சுவை பிடிக்கும். ஆனால் அதிகமானோருக்கு இதன் சிறிய கசப்பு தன்மை பிடிப்பதில்லை. வாழைப்பூ உசிலி பருப்புகளை வேகவைத்து வறுத்து சேர்த்து செய்வதால் இதன் கசப்பு தன்மை தெரியாது. எனவே நீங்கள் வாரவிடுமுறையில் நேரம் இருக்கும்போது இந்த சுவையான பருப்பு உசிலியை செய்து சுவைத்து மகிழவும்.
வாழைப்பூ உசிலி
Ingredients
- வாழைப்பூ – 1 நடுத்தர அளவில் உள்ளது
- கடலை பருப்பு – 1/ 4 கிண்ணம்
- துவரம் பருப்பு – 1/ 4 கிண்ணம்
- வர மிளகாய் – 2-3
- பச்சை மிளகாய் – 1
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
- பெருங்காயம் – 1/ 4 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையானவை
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- கடுகு – 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை – 1 கொத்து
Instructions
- பருப்புகளை கழுவி அரைமணி நேரம் ஊறவிடவும். பருப்பு ஊறும் நேரத்தில் வாழைப்பூவை சுத்தம் செய்துகொள்ளவும். முதல் நாளே சுத்தம் செய்து வைத்துகொள்ளலாம்.
- சுத்தம் செய்த வாழைப்பூவை பொடியாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய வாழைப்பூவை தயிர் சிறிதளவு தண்ணீரில் சேர்த்து அதில் போட்டுவைக்கவும். பூவின் நிறம் கறுக்காமல் இருக்கும்.
- ஊற வைத்த பருப்புகளை பச்சை மிளகாய், வர மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும். விருப்பப்ட்டால் 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து அரைத்துகொள்ளலாம்.
- நறுக்கிய வாழைப்பூவை சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைக்கவும். மைக்ரோவேவ் அவனில் அல்லது ஆவியிலும் கூட வேகவைக்கலாம். விரைவாக வெந்துவிடும்.
- அதே நேரத்தில் அரைத்த பருப்பு கலவையை ஆவியில் சிறிய உருண்டைகளாக்கி வேகவைக்கவும். இட்லி தட்டில் 15 நிமிடங்கள் வேகவிடவும்.
- நன்றாக ஆறிய பின்னர் கைகளால் நன்றாக கட்டியில்லாமல் உதிர்த்துவிடவும். மிக்ஸியில் போட்டு ஒரு திருப்பியும் எடுக்கலாம்.
- ஓரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு வெடிக்கவிட்டு கருவேப்பிலை சேர்க்கவும்.
- உதிர்த்து வைத்த பருப்பு கலவையை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- வேகவைத்த வாழைப்பூவை சேர்த்து கிளறவும். உப்பு சரி பார்த்து அடுப்பை அனைக்கவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- வாழைப்பூ உசிலி பருப்பு சேர்ந்திருப்பதால் வெள்ளை சாதம், காய்கறிகள் சேர்க்காத குழம்புகளான மோர் குழம்பு, ரசம், அல்லது புளி குழம்புடன் பரிமாறலாம்.
- சப்பாத்தியுடனும் பரிமாறலாம்.