குட மிளகாய் மசாலா

குட மிளகாய் மசாலா

ஒரு நாளில் மூன்று வேளையும் என்ன சமைப்பது என்பது மிகவும் கடினமான காரியம். அதுவும் வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லாதபோது இன்னும் கூடுதல் கவலை உண்டாகும், சுவையான சமையல் என்ன செய்து கொடுப்பது என்று. நான் 80 சதவீதம் சமையலை மாலை 6 மணிக்குள் முடித்துவிடுவேன். ஏனென்றால் என் குழந்தைகளுடன் படிக்கும்போது அருகில் இருக்க வசதியாக இருக்கும். நேற்று மாலை சப்பாத்தியும், காய்கறிகள் சேர்த்த குழம்பும் இரவு டின்னருக்கு செய்யலாம் என்று முடிவு செய்தேன். அப்போதுதான் வழக்கமான வெங்காயம் தக்காளியுடன் குளிர்சாதன பெட்டியில் குடமிளகாய் மட்டுமே இருப்பதை பார்த்தேன். ஆனால் சிறிது அதிர்ஷ்டத்துடன் பச்சை, மஞ்சள், சிவப்பு மூன்று விதமான குடமிளகாயும் இருந்தது. உடனே நான் குடமிளகாயை வெங்காயம், தக்காளி வதக்கி ஒரு கிரேவி செய்துவிடலாம் என்று முடிவுசெய்தேன். எனது தாயார் எப்போதும் சொல்வார்கள் எந்தவகை உணவிலும் இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும் என்பார்கள்.

குட மிளகாய், சிம்லா மிர்ச்சி என்று இந்தியில் அழைக்கப்படுகிறது. இதில் பொதுவாக 27 வகையான குடமிளகாய் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதில் முக்கியமாக பச்சை, சிவப்பு, மஞ்சள் அதிகம் காணப்படுகிறது. நல்ல மிளகாயை தேர்ந்தெடுத்தால் தான் சுவையாக சமைக்கமுடியும். குட மிளகாயை தேர்ந்தெடுக்கும்போது புள்ளிகள் இல்லாமல், கறுப்பாகாமல் இருப்பதை தேர்வுசெய்து வாங்கவேண்டும். நல்ல தரமான எடை கூடுதலானதாகவும் இருக்கவேண்டும்.

குடமிளகாயில் நம்பமுடியாத அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளது. தினசரி உடலுக்கு தேவையான 100 சதவீதம் விட்டமின் சி ஆரஞ்சு பழத்தைவிட அதிகமாக உள்ளது. குடமிளகாய் வளர்சிதைமாற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது. அதிகமாக உள்ள கலோரிகளை எரித்து உடல் எடை குறைக்க உதவுகிறது. இரத்த கொதிப்பை குறைக்கவும், உமிழ்நீர் சுரக்கவும், வயிற்றில் சுரக்கும் அமிலங்கள், ஜீரணத்திற்கும் உதவுகிறது. குடமிளகாய் சர்க்கரை நோயை கட்டுபடுத்தவும், மூட்டுவலியையும் குறைக்கிறது.

இது சத்துக்கள் நிறைந்துள்ளதால், குடமிளகாய் மசாலா எனது குடும்பத்தினரின் விருப்பத்தை பெற்றுள்ளது. எனவே இது என் சமையலில் அடிக்கடி இடம்பெறும் ஒன்றாகிவிட்டது. குடமிளகாயையும் ஏதேனும் ஒரு வகையில் சேர்த்து செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

குடமிளகாய் மசாலா செய்முறை

குடமிளகாய் மசாலா

Prep Time10 minutes
Cook Time20 minutes
Total Time30 minutes
Servings: 4 people
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • குட மிளகாய் – 2 (நறுக்கியது)
  • வெங்காயம் – 1 பெரியது அல்லது 2 சிறியது (நறுக்கியது)
  • தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது அல்லது மசித்தது)
  • எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
  • உப்பு - சுவைக்கேற்ப
  • வர மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/ 4 தேக்கரண்டி

Instructions

  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.
  • அதனுடன் குடமிளகாய், தக்காளி சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். இதற்கு நீங்கள் பச்சை நிற குடமிளகாய் அல்லது மஞ்சள், சிகப்பு, பச்சை நிறம் அனைத்தும் கலந்தவற்றையும் பயன்படுத்தலாம்.
  • இதில் மசாலா பொடிகளை கலந்து கிளறவும். உங்களுக்கு காரம் அதிகமாக வேண்டுமானால் மிளகாய் தூள் சற்று அதிகமாக சேர்த்துகொள்ளலாம்.
  • மூடிவைத்து 10-12 நிமிடங்கள் வேகவிடவும். அடிக்கடி கிளறிவிடவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துகொள்ளலாம்.
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும். குட மிளகாய் மசாலா தயார்.

குடமிளகாய் மசாலா பரிமாற பரிந்துரைப்பது

  • சூடான குடமிளகாய் மசாலாவை சப்பாத்தியுடன் பரிமாறலாம்.
  • இதை பாவ்பன் மற்றும் பிரட்டுடன் பரிமாறலாம்.

மாறுபாடாக பரிந்துரைப்பது

  • இதே முறையில் கத்திரிக்காய் மசாலா, சீமை சுரைக்காய் மசாலா, காலிஃபளவர் மசாலா, பீன்ஸ் மசாலா, வெங்காயத்தாள் மசாலா ஆகியவற்றையும் தயாரிக்கலாம்.


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.