உருளைக்கிழங்கு வறுவல்

உருளைக்கிழங்கு வறுவல்

உருளைக்கிழங்கு வறுவல் மிகவும் பிரசித்தமான ஒன்றாகும். இது பல முறையில் தயாரிக்கப்படுகிறது. நீங்கள் உப்பு மட்டும் சேர்த்து உருளைகிழங்கை வறுக்கலாம். சிலர் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வறுப்பதை விரும்புவார்கள். சிலர் இதில் சிக்கன் மசாலா, மட்டன் மசாலா, சன்னா மசாலா சேர்த்து சுவையை கூடுதலாக்குவார்கள். நீங்கள் இதில் வெங்காயம், இஞ்சி-பூண்டு, சீரகம், ஓமம் சேர்த்து தயாரிக்கலாம். ஒவ்வொவரின் சுவைக்கேற்ப விருப்பப்படி தயாரித்து கொள்ளலாம். இங்கே கொடுத்துள்ளது பொதுவான தயாரிப்பு முறை இதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் மாற்றம் செய்து தயாரிக்கலாம்.

உருளைக்கிழங்கு வறுவல் தயாரிப்பு முறை

உருளைக்கிழங்கு வறுவல்

Course: Side Dish
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

எளிதாக விரைவாக வறுவல் தயாரிக்க தேவையானவை

  • உருளைக்கிழங்கு – 2-3 (நீங்கள் எந்த உருளைகிழங்கை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். சிகப்பு, பேபி பொட்டேட்டோ, நீல வண்ண பொட்டேட்டோ)
  • மிளகாய் தூள் – 1-3 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப
  • எண்ணெய் – 2-3 மேசைக்கரண்டி

காரமாக வறுவல் தயாரிக்க தேவையானவை

  • வெங்காயம் – 1/4 (நீளவாக்கில் நறுக்கியது சாம்பார் வெங்காயம் 3-4 பயன்படுத்தலாம்)
  • பூண்டு பொடி – 1/4 தேக்கரண்டி (அல்லது 1 பூண்டு பல் நசுக்கியது)
  • பொடித்த சீரகத்தூள் – 1/4 தேக்கரண்டி
  • பெருஞ்சீரகத்தூள் – 1/4 தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
  • பொடித்த மிளகு தூள் – ¼ தேக்கரண்டி
  • கருவேப்பிலை – 1 கொத்து
  • முந்திரி பருப்பு 1-2 மேசைக்கரண்டி
  • கடுகு – 1/2 தேக்கரண்டி

Instructions

எளிதாக, விரைவாக தயாரிக்கும் முறை

  • உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவிகொள்ளவும். தோலை நீக்காமலும் உபயோகிக்கலாம்.
  • உருளைக்கிழங்கை ஒரே அளவு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். சிறு துண்டுகளாக அல்லது நீள வாக்கில் அல்லது பெரிய துண்டுகளாக எப்படி வேண்டுமானாலும் வெட்டி கொள்ளலாம்.
  • நறுக்கிய உருளைகிழங்குடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்றாக வேகும் வரை வறுத்து எடுக்கவும்.

விரிவான முறையில் காரமாக தயாரிக்கும் முறை

  • உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவி கொள்ளவும். தோலை நீக்காமலும் பயன்படுத்தலாம்.
  • ஓரே அளவு துண்டுகளாக உங்களுக்கு விருப்பமான வடிவில் வெட்டிகொள்ளவும்.
  • மைக்ரோவேவ் அல்லது அடுப்பில் வைத்து உருளைக்கிழங்கை பாதியளவு வேக வைத்து கொள்ளவும். இம்முறையை நீங்கள் செய்யாமலும் தவிர்க்கலாம். ஆனால் இதை செய்வதால் விரைவாக வறுவல் தயாரிக்கலாம்.
  • ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கை போட்டு மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொடிகள் சேர்த்து கலந்து கொள்ளவும். மேலேகுறிப்பிட்டுள்ள மசாலா பொருட்களில் ஏதேனும் ஒன்றிரண்டு பொடிகள் இல்லாவிடில் கவலைப்பட தேவையில்லை. ஏதேனும் சிக்கன் மசாலா, அல்லது மட்டன் மசாலா பொடிகள் இருந்தால் 2-3 தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும்.)
  • ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு வெடிக்கவிட்டு கருவேப்பிலை சேர்க்கவும்.
  • வெங்காயம், முந்திரி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
  • மசாலா கலந்த உருளை கிழங்கை சேர்த்து குறைந்த தீயில் வைத்து வறுக்கவும்.
  • உருளைக்கிழங்கு நன்றாக வெந்து மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.

வேறுபாடாக பரிந்துரைப்பது

நீங்கள் நறுக்கிய காய்கறிகளை பாதியாக வேகவைத்து உருளைக்கிழங்குடன் சேர்த்து வறுக்கலாம். இது சப்பாத்தியுடன் உண்ண ஏற்றது, மட்டுமல்லாமல் பிடிக்காத காய்களை சாப்பிடவைக்க எளிய வழி இதுவாகும். உருளைகக்ிழங்குடன் மற்ற காய்கள் சேர்ப்பதால் அதன் சுவை மேலும் பல மடங்கு அதிகரிக்கிறது. நான் தயாரிக்கும் சில வகைகளை குறிப்பிடுகிறேன். உருளைக்கிழங்கு குடமிளகாய் வறுவல், உருளைக்கிழங்கு பிரக்கோலி வறுவல், உருளைக்கிழங்கு பீன்ஸ் வறுவல், உருளைக்கிழங்கு சோளம் வறுவல், உருளைக்கிழங்கு வெந்தயக்கீரை, உருளைக்கிழங்கு கேரட் வறுவல், உருளைக்கிழங்கு முள்ளங்கி வறுவல், உருளைக்கிழங்கு பீட்ரூட் வறுவல், உருளைக்கிழங்கு சோயா வறுவல், உருளைக்கிழங்கு மஷ்ரூம் வறுவல், உருளைக்கிழங்கு டர்னிப் வறுவல் மற்றும் உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் வறுவல் மேலும் இதன் பட்டியல் நீண்டுகொண்டே போகும் அத்தனை வகைகளாக தயாரிக்கலாம்.

பரிமாற பரிந்துரைப்பது

  • உருளைக்கிழங்கு வறுவல் வெள்ளை சாதம் ரசம், சாம்பார், மோர் குழம்புடன் உண்ண ஏற்றது.
  • உருளைக்கிழங்கு வறுவல் கலந்த வகை சாதங்களான எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், புதினா சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் உண்டால் மிகவும் சுவையுடன் இருக்கும்.
  • சப்பாத்தி, புல்கா, பூரியுடனும் உண்ணலாம்.
  • இதை சமோசா, பஃப்ஸ், மசாலா தோசை போன்றவற்றில் உள்ளே வைத்து தயாரிக்கவும் நன்றாக இருக்கும்.

சாதம் பருப்பு குழம்பு, வெள்ளரிக்காய் புளிசேரி, உருளைகிழங்கு வறூவல் மற்றும் வெங்காய பப்படம்

சாதம் பருப்பு குழம்பு, வெள்ளரிக்காய் புளிசேரி, உருளைகிழங்கு வறூவல் மற்றும் வெங்காய பப்படம்


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.