முட்டைகோஸ் பருப்பு உசிலி
உசிலி எனப்படும் இந்த வகை சமையல் பிராமணர்களின் முக்கிய உணவில் ஒன்றாகும். இந்த முறையில் பீன்ஸ், வாழைப்பூ உசிலி செய்வார்கள். இன்று நான் இதேமுறையில் செய்யப்படும் முட்டைகோஸ் உசிலியை பகிர்ந்துகொள்கிறேன். இதுபொதுவாக அதிகம் செய்யப்படுவதில்லை ஆனால் மிகுந்த சுவையானது. மற்ற உசிலியைவிட முட்டைகோஸ் உசிலி சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். எனது குடும்ப்த்தினர் உசிலியை அதிகம் விரும்புவார்கள். எனவே சமயம் கிடைக்கும்போது இதை செய்வேன். குழ்ந்தைகள் இதை ஒதுக்காமல் விரும்பி உண்பர்.
முட்டைகோஸ் வருடம் முழுவதும் கிடைக்கும் ஒரு காய்கறியாகும். இது அனைவராலும் அதிகம் பயன்படுத்தப்படும் காயாகும். நான் விதவிதமாக கோஸில் செய்வதால், கோஸ் சாப்பிடுவது சலிப்பதில்லை. நீங்களும் கோஸில் வித்தியாசமாக சமைக்கவேண்டுமானால் முட்டைகோஸ் உசிலியை செய்து பாருங்கள்.
முட்டைகோஸ் பருப்பு உசிலி
Ingredients
- முட்டைகோஸ் – ½ (நறுக்கியது 2 கிண்ணம்)
- கடலை பருப்பு – ¼ கிண்ணம்
- துவரம் பருப்பு – ¼ கிண்ணம்
- வர மிளகாய் - 3
- பெருஞ்சீரகம் (சோம்பு) – ½ தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – இரு சிட்டிகை
- பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையானவை
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- கடுகு – 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை – 1 கொத்து
Instructions
- துவரம் பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் கழுவி ½ மணி நேரம் ஊறவிடவும்.
- வர மிளகாய், பெருங்காயம், சோம்பு, உப்பு ஊறவைத்த பருப்புடன் கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.
- அரைத்த கலவையை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடங்கள் வேகவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் வேகும்வரை வதக்கவும் செய்யலாம்.
- ஆவியில் வேகவைத்தபின்னர் ஆறவிடவும். கையால் உதிர்த்துவிடவும். அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துகொள்ளலாம்.
- நடுத்தர அளவில் உள்ள முட்டைகோஸ் எடுத்து பொடியாக நறுக்கிகொள்ளவும்.
- ஒரு வாணலியில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவைக்கவும். அல்லது மைக்ரோவேவ் அவனில் 5 நிமிடம் வேகவிடவும்.
- மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்.
- அதனுடன் உதிர்த்துவைத்த பருப்பு கலவையை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். அடுத்து வேகவைத்த முட்டைகோஸை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- எல்லாவற்றையும் நன்றாக கலந்து வதக்கியபின்னர் அடுப்பை அனைத்துவிடவும் . சுவையான முட்டைகோஸ் உசிலி தயார்.
முட்டைகோஸ் உசிலி பரிமாற பரிந்துரைப்பது
- முட்டைகோஸ் உசிலி வெள்ளை சாதம், குழம்புடன் பரிமாற ஏற்றது. மோர் குழம்பு, ரசம், கார குழம்பு, வற்றல் குழம்பு அல்லது புளி குழம்புடன் பரிமாறலாம்.
- சப்பாத்தியுடனும், சாலட் போலவும் பரிமாறலாம்.