வெண்டைக்காய் புளிக்குழம்பு
வெண்டைக்காய் புளிக்குழம்பு, குழம்பு வகையை சேர்ந்ததாகும். மிக எளிதாக செய்ய கூடியதாகும். வெண்டைக்காய் மிக சத்தான காயாக இருந்தாலும் இது வழவழப்பாக இருப்பதால் ஒரு சிலர் இதன் சுவையை விரும்புவதில்லை. வெண்டைக்காயை நன்றாக வதக்கி புளி சேர்க்கும் போது அதன் வழவழப்பு குறைந்துவிடும். அத்தோடு புளி சாறு வெண்டைக்காயில் இறங்கினால் சுவையாக இருக்கும். வெண்டைக்காய் புளிக்குழம்பு சூடான சாதம், அப்பளத்துடன் பரிமாறினால் நன்றாக இருக்கும்.
அதிகம் குழம்பு வேண்டுமென்றால் தேங்காய் அரைத்தும் செய்யலாம். குழம்பு மிளகாய் தூள் சேர்த்து செய்யும் போது சுவையாக இருக்கும். வீட்டில் செய்த குழம்பு மிளகாய் தூளாக இருந்தால் நன்றாக இருக்கும்.
வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்முறை
வெண்டைக்காய் புளிக்குழம்பு
Ingredients
- வெண்டைக்காய் - 250 கிராம் (துண்டுகளாக வெட்டியது)
- சின்ன வெங்காயம் - 15 (நீளவாக்கில் வெட்டியது)
- தக்காளி - 1 பெரியது
- பூண்டு - 4 பற்கள் (நீளவாக்கில் வெட்டியது)
- புளி கரைசல் - ½ கிண்ணம்
- வரமிளகாய் - 2 தேக்கரண்டி (அல்லது சாம்பார் தூள்)
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- துருவிய தேங்காய் - 1/4 கிண்ணம்
- உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க தேவையானவை
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
- கருவேப்பிலை - 1 கொத்து
- நல்லெண்ணெய் (அல்லது கடலை எண்ணெய்) - 2 மேசைக்கரண்டி
Instructions
- வாணலில் நல்லெண்ணெய் ஊற்றி, தாளிக்க தேவையானவற்றை சேர்த்து தாளிக்கவும்.
- வெங்காயம், வெண்டைக்காய், பூண்டு சேர்த்து வதக்கவும். வெண்டைக்காயின் வழுவழுப்பு போகும் வரை வதக்கவும்.
- தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் தூள், சேர்த்து வதக்கவும்
- புளி கரைசல் சேர்க்கவும்.
- வெண்டைக்காய் வேகும் வரை 10-15 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- குழம்பு அதிகம் வேண்டுமானால் தேங்காய் அரைத்து சேர்க்கவும்
- எண்ணெய் பிரியும் வரை கொதிக்கவிடவும்.
வேறுபாடாக பரிந்துரைப்பது
- பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயம் சேர்த்தால் சுவை அதிகமாகும்.
- அரைத்த தேங்காய் சேர்ப்பதை தவிர்த்தால் வேறு சுவை கிடைக்கும்.
- வெண்டைக்காயிற்கு பதில் கத்திரிக்காய், முருங்கைக்காய் சேர்க்கலாம்.
- வெண்டைக்காயை கழுவி, துடைத்து வதக்கினால் வழுவழுப்பு இருக்காது.
பரிமாற பரிந்துரைப்பது
- சூடான சாதத்துடன் பரிமாறவும்.
- எண்ணெயில் பொரித்த அப்பளத்துடனோ, பொறியலுடனோ பரிமாறலாம்.
- கிச்சடி, தோசை, இட்லி, சப்பாத்தி உடன் பரிமாறலாம்.