பன்னீர் பட்டர் மசாலா
பன்னீர் பட்டர் மசாலாவை பஞ்சாபி பன்னீர் மக்கானி அல்லது மக்கன்வாலா என்ற பெயரும் உண்டு. இது பஞ்சாபி உணவு உலகில் மிகவும் அதிகமாக இருப்பதாகும். இந்திய சீஸ் பன்னீர் என்று அழைக்கப்படுகிறது. பன்னீர் பட்டர் மசாலா என்பது பன்னீரும், மக்கானி சாஸும் சேர்த்து செய்யப்படுவதாகும். இந்த சாஸ் அரைத்த தக்காளி, முந்திரி மற்றும் கிரீம் சேர்த்து செய்ய வேண்டும். கிரீம் சேர்ப்பதால் இதற்கு கூடுதல் சுவை கிடைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவர். நான் மாதத்தில் இரண்டு முறை சமைப்பேன்.
இதனுடன் பட்டர் நாண் சேர்த்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதை புலாவ் மற்றும் ரொட்டியுடனும் உண்ணலாம். சைவ பிரியர்கள் சாப்பிட வரும் போது எனது உணவு பட்டியலில் முதலிடத்திலிருப்பது இதுவாகும். மிகவும் விரும்பி உண்பர். நீங்கள் உணவு விடுதியில் பன்னீர் மக்கானி வாங்கினால் நல்ல சிகப்பு நிறத்தில் இருக்கும். நிறைய உணவு விடுதிகளில் சிகப்பு கலர் பொடி போடுவதால் நல்ல நிறத்துடன் இருக்கும். நான் வீட்டில் கலர் எதுவும் போடுவது இல்லை. தக்காளி, மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் உபயோகிப்பதால் இயற்கையான சிகப்பு நிறம் கிடைக்கும். நீங்கள் ஒரு முறை ருசித்தால் நமக்கு கலர் முக்கியமில்லை என்பது தெரியும். இதை செய்து பார்த்து உங்கள் அபிப்பிராயத்தை தரவும். நான் மிகவும் எளிய முறையில், வேலை நாளிலும் கூட சுலபமாக செய்யும் முறையில் எழுதி உள்ளேன்.
பன்னீர் பட்டர் மசாலா செய்ய வீடியோ வழிமுறைகள்
பன்னீர் பட்டர் மசாலா செய்முறை
பன்னீர் பட்டர் மசாலா
Ingredients
- பன்னீர்-200 கிராம்
- வெங்காயம் – 1 (பெரியது)
- இஞ்சி -1 மேசைக்கரண்டி (துருவியது)
- பூண்டு -1 மேசைக்கரன்டி (துருவியது)
- தக்காளி- 3
- முந்திரிப் பருப்பு - ¼ கிண்ணம்
- காஷ்மீரி மிளகாய் தூள் -2 தேக்கரண்டி
- மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் - ¼ தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
- கசூரி மேத்தி (காய வைத்த வெந்தயக் கீரை) -1 தேக்கரண்டி
- வெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
- ஆரஞ்சு கலர் பவுடர் - ¼ தேக்கரண்டி (விரும்பினால்)
- உப்பு - தேவையான அளவு
- பிரஷ் கிரீம் - ¼ கிண்ணம்
- வெங்காய தாள் - அலங்கரிக்க (பொடியாக நறுக்கியது)
Instructions
- ஒரு கடாயில் வெண்ணெயை சூடாக்கி நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்க்கவும்
- அதனுடன் தக்காளி சேர்க்கவும்.
- முந்திரிப் பருப்பு சேர்த்து ½ கிண்ணம் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
- மூடி வைத்து சிறிது நேரம் வேக விடவும்.
- அடுப்பை அணைத்து ஆற வைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். இதுவே மக்கானி சாஸ் ஆகும். வடிகட்டியில் வடித்து வைத்துக் கொள்ளவும்.
- மற்றொரு கடாயில் சிறிது வெண்ணெயை உருக்கி வர மிளகாய் தூள் சேர்த்து 10 நொடிகள் வதக்கவும். வெண்ணெயுடன் வர மிளகாய் தூளை நேரடியாக சேர்ப்பதால் நல்ல கலர் கிடைக்கும். வேறு கலர் தேவையில்லை.
- மக்கானி சாஸ் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- பன்னீர் துண்டுகள், மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு சேர்க்கவும்.
- அடுப்பை குறைத்து 5 நிமிடம் வேக விடவும்.
- பிரஷ் கிரீம் ம்ற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.
- கையில் வெந்தயக்கீரையை வைத்து கசக்கி இதனுடன் சேர்க்கவும் மேலும் 5 நிமிடம் வேக விடவும்.
- வெங்காயத் தாள் அல்லது பிரஷ் கிரீம் கொண்டு அலங்கரிக்கவும்.
குறிப்பு
• பன்னீர் துண்டுகளை எண்ணெயில் பொரித்தும் சேர்க்கலாம்.
• வயதானவர்களுக்கு செய்யும் போது பிரஷ் கிரீமிற்கு பதில் கொழுப்பு நீக்கிய பால் சேர்க்கலாம். பால் சேர்க்கும் போது தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
பரிமாற பரிந்துரைப்பது
• பன்னீர் பட்டர் மசாலாவை நாண், ரொட்டி, புலாவ் உடன் பரிமாறலாம்.