பருப்பு ரசம்
பருப்பு ரசம் அல்லது தால் ரசம் என்பது தமிழ் நாட்டில் செய்யப்படும் ஒரு வகையான ரசமாகும். தமிழர்கள் இதற்கு துவரம் பருப்பை உபயோகிப்பார்கள். துவரம் பருப்பை வேகவைத்து அந்த தண்ணீரையும் சேர்த்து மற்ற சில பொருட்களுடன் சேர்த்து செய்த ரசத்தை சாதத்துடன் பரிமாறுவர்.
பருப்பு ரசம் மற்ற ரச வகைகளில் இருந்து சற்று ருசியில் மாறுபடும். இது தக்காளி அல்லது புளி சேர்ப்பதால் சற்று புளிப்பு சுவையுடன் இருக்கும். நான் எப்பொழுதும் புளிக்குபதிலாக தக்காளியையே உபயோகிப்பேன். அப்படி நீங்கள் உபயோகிப்பதாக இருந்தால் சிறிதளவு புளி சேர்த்தால் போதுமானதாகும். புளிப்பு சுவை அதிகமாக இருக்காது. மேலும் ரசப்பொடி அல்லது சாம்பார் பொடி கூடுதல் சுவை கொடுக்கும். நான் வழக்கமாக வீட்டில் தயாரிக்கும் ரசப்பொடியை இதற்கு பயன்படுத்தியுள்ளேன். எனது நெருங்கிய தோழி சாம்பார் பொடியை உபயோகித்து இந்த ரசத்தை செய்வார்.
இன்னொரு ரகசியம், ரசம் ருசியாக இருக்க வேண்டுமென்றால் அதிகம் கொதிக்கவிடக்கூடாது. எல்லா வகை ரசமும் கொதிக்க ஆரம்பிக்கும் போதே அடுப்பை அணைத்துவிட வேண்டும். பருப்பு ரசத்தை வெள்ளை சாதத்துடன் ஏதேனும் ஒரு வகை பொரியலுடன் பரிமாறலாம். பப்படம் மிகவும் ஏற்றது இந்த ரசத்திற்கு உண்டு மகிழுங்கள்.
பருப்பு ரசம் செய்முறை
பருப்பு ரசம்
Ingredients
- துவரம் பருப்பு – ¼ கிண்ணம்
- தக்காளி - 2
- மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
- கொத்தமல்லி தழை – ஒரு கையளவு
- கருவேப்பிலை - சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
ரசப்பொடி தயாரிக்க
- கருப்பு மிளகு – ½ தேக்கரண்டி
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- வர மிளகாய் - 1
- கொத்தமல்லி விதைகள் (தனியா) – ½ தேக்கரண்டி
- கருவேப்பிலை – சிறிதளவு
தாளிக்க தேவையானவை
- எண்ணெய் / நெய் – 2 தேக்கரண்டி
- கடுகு – 1 தேக்கரண்டி
- வெந்தயம் – ½ தேக்கரண்டி
- கருவேப்பிலை – 1 கொத்து
- பெருங்காயம் – ½ தேக்கரண்டி
Instructions
- குக்கரில் பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து மசித்து வைத்து தனியாக வைக்கவும். நீங்கள் சாம்பார் செய்யும்போது சிறிதளவு பருப்பைசேர்த்து வேகவைத்துக்கொண்டால் அடுத்த நாள் பருப்பு ரசம் வைக்க உபயோகித்துக்கொள்ளலாம்.
- தக்காளியை அரைத்துக்கொள்ளவும்.
- மிளகு, சீரகம், வர மிளகாய், கொத்தமல்லி விதை, கருவேப்பிலை அனைத்தையும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- எண்ணெய்/ நெய்யை சூடாக்கி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை தாளிக்கவும்.
- மஞ்சள் தூள், பெருங்காயம், அரைத்த ரசப்பொடியை கலந்து சிறிது வதக்கவும்.
- அரைத்த தக்காளி விழுதுடன் ஒரு டம்ளர் தண்ணீர், உப்பு சேர்க்கவும். புளிப்பு தேவையானால் புளிக்கரைசல் சிறிது சேர்க்கவும்.
- தக்காளியின் பச்சைவாசம் போகும் வரை 5 – 10 நிமிட்ங்கள் கொதிக்கவிடவும்.
- வேகவைத்த பருப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை ,2 கப் அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- ரசம் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். அதிக நேரம் கொதித்தால் ரசத்தின் சுவை மாறிவிடும்.
பருப்பு ரசம் செய்ய விரிவான படிமுறைகள்
பருப்பை கழுவி சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து மசித்துவைக்கவும், தக்காளியை அரைத்து கொள்ளவும்.
மிளகு, சீரகம், வர மிள்காய், கொத்தமல்லி விதை, கருவேப்பிலையை கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் அல்லது நெய்யை சூடாக்கி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை தாளிக்கவும்.
மஞ்சள் தூள், பெருங்காயம், அரைத்த ரசப்பொடி சேர்த்து வதக்கவும்.
தக்காளி விழுது சேர்க்கவும். விருப்பபட்டால் புளிக்கரைசல் சிறிது சேர்க்கவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்து தக்காளியின் பச்சை வாசம்போகும் வரை 5 – 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
வேகவைத்த பருப்பு ,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை 2 கப் தன்ணீர் சேர்க்கவும்.
லேசாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். அதிக நேரம் கொதிக்கவிட்டால் ரசத்தின் சுவை மாறிவிடும்.
சூடான ரசத்தை சாதத்துடன் சுவைத்து மகிழுங்கள்.
பரிமாற பரிந்துரைப்பது
- பாரம்பரிய முறையில் தயாரித்த ரசத்தை வெள்ளை சாதத்துடன் ஏதேனும் ஒரு வகை பொரியல் அல்லது அசைவ வகை வறுவல் அல்லது பப்படமுடன் பரிமாறவும்.
- சூப் போல வறுத்த பப்படத்துடன் பரிமாறலாம்.