சென்னா மசாலா
சென்னா மசாலா, வட இந்தியாவில் பிரபலமான உணவு வகையாகும். தென்னிந்தியாவில் சப்பாத்தி, பூரி வகைகளுடன் விரும்பி உண்ணப்படுகிறது. சென்னா மசாலாவை பிரட் மீது போட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை சேர்த்து மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு டிபனாக கொடுக்கலாம்.
விரைவாக செய்யவேண்டுமானால் கடைகளில் கிடைக்கும் சென்னா மசாலா பாக்கெட்டில் கிடைக்கும் பொடியை உபயோகித்தும் செய்யலாம். முக்கியமாக சோலா பட்டூரா எனப்படும் பூரிக்கு சென்னா மசாலா பரிமாறப்படும். பின்னர் அனைவரும் விரும்பி உண்ண ஆரம்பித்தவுடன் சப்பாத்தி, பூரி, பரோட்டா வகைகளுடன் பரிமாறப்படுகிறது. சென்னாவில் தோல் மிகவும் மெல்லியதாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்ண எளிதாக இருக்கும். பிரவுன் கடலையில் தோல் சற்று கடினமாக இருக்கும். ஆகவே சென்னாவை அதிகம் விரும்பி உண்கின்றனர்.
சென்னா மசாலா செய்முறை
சென்னா மசாலா
Ingredients
- சென்னா (வெள்ளை கடலை) – 2 கிண்ணம்
- வெங்காயம் – 1 பெரியது (பெரியதாக நறுக்கியது)
- தக்காளி – 2 (நடுத்தர அளவில் அரைத்தது)
- பூண்டு – 6 பற்கள்
- இஞ்சி – 1 அங்குலம்
- சீரகம் – 1 தேக்கரண்டி
- கரம் மசாலா (பிரியாணி இலை - 1, பட்டை – 2 துண்டு, ஏலக்காய் -1, கிராம்பு -2)
- வர மிள்காய் தூள் – 2 தேக்கரண்டி (ருசிக்கேற்ப)
- கொத்தமல்லி தூள் -1 தேக்கரண்டி
- சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
- கசூரி மேத்தி - 1 தேக்கரண்டி (வெந்தயக்கீரை பொடி விருப்பபட்டால்)
- ஆம்சூர் பவுடர் - 1 தேக்கரண்டி (காய்ந்த மாங்காய் பொடி)
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கீறிய பச்சை மிளகாய், இஞ்சி துண்டுகள் - அலங்கரிக்க
Instructions
- சென்னாவை கழுவி 5-6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும். .
- ஊற வைத்த தண்ணீரை வடித்துவிட்டு குக்கரில் வேகவிடவும் (4 விசில்கள்). அதிகமாக வெந்துவிட்டால் குழைந்துவிடும். சிறிது உப்பு சேர்த்துக்கொண்டால் இதை தவிர்க்கலாம்.
- வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி அனைத்தையும் மிக்ஸியில் இட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி மிதமான தீயில் வைத்து சீரகம் வெடிக்கவிட்டு பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்க்கவும்.
- அரைத்தவிழுதை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். எண்ணெய் தனியாகபிரியும் வரை வதக்கவும்.
- வர மிளகாய் தூள், கொத்தம்ல்லி தூள், கசூரி மேத்தி, ஆம்சூர் பவுடர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
- வேகவைத்த சென்னாவை தண்ணீருடன் சேர்த்து அடுப்பை குறைத்து மேலும் 7 நிமிடங்கள் வேகவிடவும்.
- நறுக்கிய கொத்தமல்லி தழை, கீறிய பச்சை மிளகாய், இஞ்சி துண்டுகள் கொண்டு அலங்கரிக்கவும். சப்பாத்தி அல்லது பூரியுடன் பரிமாறவும்.
சென்னா மசாலா செய்ய விரிவான படிமுறைகள்
சென்னாவை கழுவி குறைந்தது 6 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின்னர் சென்னா இரண்டு மடங்கு பெரிதாகிவிடும்.
ஊற வைத்த தண்ணீரை வடித்துவிட்டு குக்கரில் வேகவிடவும். விருப்பட்டால் ஒரு டீ பாக்கெட் சேர்த்தால் கூடுதலான நிறம் கிடைக்கும். 4 விசில் விட்டு இறக்கவும்.
வெங்காயம், தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு தோல் சீவி வைக்கவும்.
இவற்றை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி சீரகம் வெடிக்கவிடவும். பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை சேர்த்து வதக்கவும்.
சிறிது நேரம் வதங்கிய பின்னர் அரைத்த விழுது சேர்க்கவும்.
மூடிவைத்து 5 நிமிடம் மசாலாவில் இருந்து எண்ணெய் பிரியும் வரை வைக்கவும்.
வர மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரகத்தூள், கசூரி மேத்தி, ஆம்சூர் பவுடர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிரேவி கெட்டியாகும் வரை வதக்கவும்.
வேகவைத்த தண்ணீருடன் சென்னாவை சேர்த்து அடுப்பை குறைத்து 7 நிமிடங்கள் வேகவிடவும்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, ப்ச்சை மிளகாய், இஞ்சி துண்டுகள் கொண்டு அலங்கரிக்கவும்.
குறிப்பு
- ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு, 1/2மேசைக்கரண்டி சாட் மசாலா சேர்த்தால் இன்னும் கூடுதல் சுவை கிடைக்கும்.
- கடைகளில் கிடைக்கும் சென்னா மசாலாவை, மசாலா பொருட்களுக்கு பதிலாக சேர்த்துக்கொள்ளலாம். இதே சுவை கிடைக்கும்.
- டீ பாக்கெட் நல்ல அடர் வண்ணத்தை சென்னா மசாலாவிற்கு கொடுக்கும். இதை தவிர்க்கவும் செய்யலாம்.