தட்டை
தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற முக்கியமான பண்டிகை நாட்களில் முறுக்கு, தட்டை, மிக்ஸர், அதிரசம், சீடை போன்ற பலகாரங்கள் கட்டாயமாக இடம்பெறும். அதுவும் வீட்டிலேயே தயாரித்துகொள்வார்கள். ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே எல்லாவற்றையும் தயாரிக்க முன்னேற்பாடுகள் நடக்கும். அரிசியை வாங்கி சுத்தம் செய்வது கடலை மாவு தயாரிக்க என்று மும்முரமாக இருப்பார்கள். அதிரசம் செய்ய 4 அல்லது 5 நாட்கள் முன்பே மாவு கிளறி நன்றாக மூடி வைப்பார்கள். பின்னர் செய்தால் தான் பிரிந்து போகாமல் நன்றாக செய்யமுடியும். தற்போது போல எல்லா பலகாரங்களும் எப்போதும் கடைகளில் கிடைக்காது. எனவே அனைவருமே பலகாரங்கள் செய்வதை ஓரளவு அறிந்திருப்பார்கள். அந்த வகையில் தட்டையும் முக்கியமான இடத்தில் உள்ள ஒன்றாகும். இதை செய்ய சற்று பொறுமை தேவை ஆனால் செய்து வைத்துகொண்டால் 2-3 வாரங்கள் வைத்து கொள்ளலாம். மொருமொருப்பாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. இதே மாவில் மிளகு தட்டி போட்டு செய்தால் சுவையாக இருக்கும். முன்பை போல் பண்டிகைக்காக காத்திருக்க தேவையில்லை. நமக்கு செய்ய தெரிந்து கொண்டால் எப்போது வேண்டுமானாலும் செய்து நம் குடும்பத்தினரை மகிழ்விக்கலாம். தற்போது மாவு கடைகளில் கிடைத்தாலும் வீட்டில் தயாரித்த அரிசி மாவில் செய்தால் சுவை கூடுதலாக கிடைக்கும்
தட்டை செய்யும் முறை
தட்டை
Ingredients
- அரிசி மாவு - 2 கிண்ணம் (சலித்தது)
- உளுந்து மாவு - 2 மேசைக்கரண்டி
- வர மிளகாய் தூள் - தேவையான அளவு
- கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி
- சிறிதளவு கருவேப்பிலை - பொடியாக நறுக்கியது
- உப்பு - சுவைக்கேற்ப
- பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
- வெண்ணெய் - 2 தேக்கரண்டி
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
Instructions
- கடலை பருப்பை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துவிட்டு உலர வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, மிளகாய் தூள், கடலை பருப்பு, கருவேப்பிலை, உப்பு, பெருங்காயம், வெண்ணெய் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
- சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து தளர பிசையவும்.
- சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து ஒரு துணியில் தட்டவும். (அல்லது ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி தட்டலாம். உடையாமல் தட்ட வரும் ).
- ஃபோர்க்கால் குத்திவிடவும். மெதுவாக எடுத்து எண்ணெய் காயவைத்து அதில் போட்டு குறைந்த தீயில் நன்றாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.
- வெளியில் எடுத்து எண்ணெய் வடியவிடவும். காற்று புகாத பாத்திரத்தில் ஆற வைத்து எடுத்து வைக்கவும்.
குறிப்புகள்
- காற்று புகாமல் வைத்திருந்தால் 2-3 வாரங்கள் வைத்து உபயோகிக்கலாம்.