ரிப்பன் பக்கோடா
இன்று எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு சிற்றுண்டி தயாரிக்கும் முறையை பகிர்ந்துகொள்ள போகிறேன். இதை ரிப்பன் பக்கோடா அல்லது நாடா தேங்குழல் என்று சொல்வார்கள். இதை முக்கியமான பண்டிகைகளான கிருஷ்ண ஜென்மாஷ்டமி, தீபாவளி போன்ற சமயங்களில் செய்வர். ஆனால் இந்த சுவையான ரிப்பன் பக்கோடாவை ருசிக்க பண்டிகை நாள் வரை ஏன் காத்திருக்க வேண்டும், இப்போதே செய்ய துவங்கலாம். சுலபமான, மொறுமொறுப்பான விரைவாக தயாரிக்ககூடிய ரிப்பன் பக்கோடாவை இந்த வார விடுமுறையில் செய்து உங்கள் கணவர் குழந்தைகளை மகிழ்வியுங்கள்.
பாரம்பரியமாக ரிப்பன் பக்கோடா அரிசி மாவு, கடலை மாவு இரண்டு முக்கியமான பொருட்களை கொண்டு செய்யப்படுவதாகும். ஆனால் கடலை மாவு குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் ஜீரணம், வாயு தொல்லை பிரச்னை உண்டாக்குவதால் அதற்கு பதிலாக சத்து நிறைந்த அரிசி மாவு, பொட்டுகடலை மாவு சேர்த்து தயாரிக்கலாம். இது எனது தோழி ஜெயஸ்ரீ என்னுடன் பகிர்ந்து கொண்டது. வறுத்தகடலை (பொட்டுகடலை) புரொட்டீன், நார்சத்து, ஃபோலேட், கனிமங்கள், கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது. சத்துள்ளதால் பசியை கட்டுபடுத்தி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. எனது அம்மாவும், மாமியாரும் வீட்டில் தயாரித்த அரிசி மாவையே பயன்படுத்துவார்கள். அதனால் அதன் சுவை, வண்ணம் எல்லாம் சரியான அளவில் கிடைக்கும். ஆனால் இளைய தலைமுறையினருக்கு அரிசி மாவு தயாரிக்க சிரமமாக இருந்தால் நல்ல தரமான கடைகளில் கிடைக்கும் மாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
ரிப்பன் பக்கோடா தயாரிப்புமுறை
ரிப்பன் பக்கோடா
Ingredients
- அரிசி மாவு – 2 கிண்ணம்
- பொட்டுகடலை மாவு (உடைத்த கடலை மாவு) – 1/2 கிண்ணம்
- வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- வர மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி (உங்கள் தேவைக்கேற்ப)
- வெள்ளை எள் – 1 தேக்கரண்டி (பாதியளவு வறுத்தது)
- பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
- உப்பு - சுவைக்கேற்ப
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
Instructions
- அரிசி மாவு, பொட்டுகடலை எடுத்துகொள்ளவும். நீங்கள் வீட்டில் அரிசி மாவு வைத்திருந்தால் எடுத்துகொள்ளவும். இல்லாவிட்டால் கடைகளில் கிடைக்கும் மாவை பயன்படுத்தலாம். பொட்டுகடலை மாவு தயாரிக்க மிக்ஸியில் நைஸாக அரைத்து சலித்துகொள்ளவும். இப்போது பக்கோடா செய்ய மாவு தயார்.
- அரிசி மாவு, பொட்டுகடலை மாவை நன்றாக சலித்துகொள்ளவும். பொரிக்கும்போது வெடிக்காமல் இருக்கும். எள்ளை பாதியளவு வறுப்பதும் வெடிக்காமல் இருப்பதற்குதான். அந்த மோசமான அனுபவம் எனக்கு இருப்பதால் இவ்வாறு செய்வது நல்லது என்பதை குறிப்பிடுகிறேன்.
- ஓரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் போட்டு நன்றாக கலந்துகொள்ளவும்.
- தண்ணீர் சேர்த்து மாவு கையில் ஒட்டாமல் வரும் அளவு பிசைந்துகொள்ளவும்.
- அதேசமயம் அடி அகலமான வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சூடாக்கவும்.
- ஒரு கையளவு மாவை எடுத்து முறுக்கு அச்சில் அடைக்கவும். இரண்டு கோடுகள் உள்ள தட்டை அச்சில் போடவும். (படத்தில் உள்ளது).
- இந்த அச்சை கொண்டு தான் ரிப்பன் பக்கோடா பிழிய வேண்டும்.
- எண்ணெயில் பெரிய வட்டமாக பிழியவும். ஓரு முறையில் ஓன்றை மட்டும் பிழியவும். அதிகமாக இருந்தால் வேகாது.
- பொன்னிறமாகும் வரை திருப்பிவிட்டு, இரண்டு பக்கமும் வேகும்வரை பொரிக்கவும்.
- வெந்தபின்னர் வெளியில் எடுத்து அதிகப்படியான எண்ணெயை வடியவிடவும்.
- ஆறிய பின்னர் காற்றுபுகாத பாத்திரத்தில் வைக்கவும். 2- 3 வாரங்கள் வைத்து உபயோகிக்கலாம்.
ரிப்பன் பக்கோடா பரிமாறும் முறை
- சூடான காஃபி அல்லது டீயுடன் பரிமாறலாம். எப்பொழுது வேண்டுமானாலும் உண்ண ஏற்ற மொறுமொறுப்பான சிற்றுண்டி.
- சாம்பார் சாதத்துடன் பொரியலுக்கு பதிலாகவும் பரிமாறலாம்.