மீன் குழம்பு (வறுத்த தேங்காயுடன் செய்யப்பட்டது)
கேரளாவின் மிக முக்கியமான உணவு வகைகளில் முதல் இடத்தில் உள்ளது மீன் ஆகும். பல முறைகளில் குழம்பு தயாரிப்பார்கள். தமிழகத்தில் மீன் அதிக அளவில் கிடைத்தாலும் அதிகமானோர் உண்பதில்லை. ஆனால் தற்போது மருத்துவர்கள் இதயத்திற்கு நல்லது, இறைச்சி உண்பதை தவிர்க்க சொல்வது போன்ற காரணங்களால் அதிகமானோர் உண்ண துவங்கியுள்ளனர்.
மீனில் பல வகைகள் கிடைக்கின்றன. இதில் பொரித்து உண்பதைவிட குழம்பில் போட்ட மீன் உண்பது மிகவும் நல்லது. ஆனால் குழந்தைகள் வறுத்த மீனையே விரும்புவார்கள். கேரளாவில் மரவள்ளி கிழங்கு வேகவைத்தது, புட்டு ஆகியவற்றை மீன் குழம்புடன் உண்பதை பெரிதும் விரும்புவர். தென்னகத்தில் இட்லி, தோசை, வெள்ளை சாதத்துடன் பரிமாறப்படுகிறது. செய்முறைகள் பல வகைகள் இருந்தாலும் ஒவ்வொரு குழம்பிற்கும் தனி சுவை இருக்கும். இம்முறையில் நீங்கள் தயாரித்து பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் வகையில் இருக்கும்.
மீன் குழம்பு தயாரிக்கும் முறை
மீன் குழம்பு (வறுத்த தேங்காயுடன் செய்யப்பட்டது)
Ingredients
தேவையான பொருட்கள் – பகுதி – 1
- தேங்காய் துருவியது – 1/4 கிண்ணம்
- சாம்பார் வெங்காயம் – 4-5
- பூண்டு பற்கள் – 3
- கருவேப்பிலை – 1 கொத்து
- வர மிளகாய்
- சீரகம் – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் – பகுதி - 2
- மீன் – 2 (துண்டுகளாக வெட்டியது)
- தக்காளி – 1 (அரைத்தது)
- புளிக்கரைசல் – 1/4 கிண்ணம்
- மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
- வர மிளகாய் – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி தூள் – 1 மேசைக்கரண்டி
- கருவேப்பிலை – 1 கொத்து
- பச்சை மிளகாய் - 1
- கடுகு – 1/4 தேக்கரண்டி
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
- பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
- உப்பு - சுவைக்கேற்ப
- கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
- விருப்பபட்டால் சேர்க்க (நறுக்கிய முருங்கைகாய் துண்டுகள் அல்லது பச்சை மாங்காய் துண்டுகள் மீன் துண்டுகளுடன் சேர்க்க)
Instructions
- ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பகுதி -1 ல் குறிப்பிட்டுள்ள பொருட்களை வறுக்கவும்.
- நல்ல வாசம் வரும்போது அடுப்பிலிருந்து எடுத்து ஆறவிடவும். நன்றாக ஆறிய பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துகொள்ளவும்.
- ஒரு அகலமான மண் பாத்திரத்தை (சட்டியை ) அடுப்பில் வைத்து எண்ணெய் சூடாக்கி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை தாளிக்கவும்.
- புளி கரைத்த தண்ணீர், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், தக்காளி,பெருங்காயம், அரைத்த மசாலா கலவை சேர்த்து கொதிக்கவிடவும்.
- மீன் துண்டுகளை சேர்த்து குறைந்த தீயில் மூடி வைத்து வேகவிடவும். மீன் வெந்தபின்னர் நிறம் மாறி மிருதுவாகிவிடும்.
- கொத்தமல்லி தழை சேர்த்து,கீறிய பச்சை மிளகாய் மேலே வைத்து சூடாக பரிமாறவும்.
குறிப்பு
- முருங்கைகாய் நறுக்கியது அல்லது பச்சை மாங்காய் துண்டுகளை மீன் சேர்க்கும் போது சேர்க்கலாம்.
- சுவை கூடுதலாக்க குழம்பை அடுப்பில் 15-20 நிமிடங்கள் வைத்து இறக்கி 2 மணி நேரம் கழித்து பரிமாறினால் கூடுதல் சுவை கிடைக்கும். இவ்வாறு செய்வதால் குழம்பின் சாறு மீன் துண்டுகளில் இறங்க ஏதுவாக இருக்கும்.
பரிமாற பரிந்துரைப்பது
- காரமான மீன் குழம்பை வெள்ளை சாதம், வறுத்த மீனுடன் அல்லது பொரியலுடன் பரிமாறலாம்.