கேரட் சட்னி
மும்பை மாநகரில் நான் வசித்த பொழுது தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்தது. திருமணத்திற்கு பின்னர் மும்பையில் குடிபுகுந்த அவளுக்கு மும்பையின் கலாசாரம், பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் யாவும் மிக புதிது. அவளுடன் பழகிய போது, தன் மனம் திறந்து பல அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டாள்.
அவளின் எண்ணங்களின் பதிவுகள் இதோ.. ”மும்பையின் அவசர வாழ்க்கையில் யாரும் காலாற நடப்பதில்லை, புத்தகம் படிப்பதில்லை, இனிமையான இசை கேட்பதில்லை. அனைவருக்கும் நிற்க நேரமில்லை. ஓடிக்கொண்டே தான் உள்ளனர். எப்படி இருக்கிறீர்கள் என்று யாரை கேட்டாலும், பிஸியாக உள்ளோம் என்ற பதில் தான் வருகிறது”.
மும்பையில் உணவு பழக்கமும் துரிதம் தான். மும்பையில் எங்கு பார்த்தாலும் துரித உணவகங்கள் தான். தமிழ் நாட்டில் அப்படி இல்லை என்பது ஆறுதலான ஒன்று. இட்லி/ தோசை தான் எங்களின் உயிர் காக்கும் நண்பன். காலை அவசரத்திலும், சோர்வான மாலை நேரங்களிலும் இட்லி/தோசை தான் கை கொடுக்கும். வாரக்கடைசியிலும், விடுமுறையிலும் தான் வேறு வகை சிற்றுண்டிகள் செய்ய முற்படுவோம்.”
அப்படிப்பட்ட இட்லி, தோசைக்கு சட்னி வகைகள் வெவ்வேறாக பரிமாறிதான் ஆக வேண்டும். நான் ஏற்கனவே சில சட்னி வகைகளை பகிர்ந்து உள்ளேன். இன்று கேரட் சட்னி செய்முறையை பகிர்ந்து கொள்ள போகிறேன்.
கேரட் சட்னி செய்முறை
கேரட் சட்னி
Ingredients
- கேரட்- 2 பெரியது அல்லது 3 சிறியது 1.5 கிண்ணம் அளவில்
- வெங்காயம் - 1 பெரியது அல்லது 7-8 சின்ன வெங்காயம்
- தக்காளி - 2 பொடியாக நறுக்கியது
- இஞ்சி - 1/2‘’ துண்டு
- பூண்டு - 3-4 பற்கள்
- வரமிளகாய் - 3-5 தேவைகேற்ப
- கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- உப்பு – தேவைகேற்ப
தாளிக்க தேவையானவை
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - ¼ தேக்கரண்டி
- கருவேப்பிலை – ஒரு கையளவு
- பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி
Instructions
- கேரட்டை கழுவி தோல் சீவி வெட்டிக்கொள்ளவும். மூன்று கேரட், 200 கிராம் அல்லது 250 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்.
- வெட்டிய பின்னர் 1.5 கப் அளந்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, சீரகம், வர மிளகாய் தாளித்து சிறிது நேரம் வதக்கவும்.
- வெட்டிய கேரட், வெங்காயம், பூண்டு, தக்காளி, இஞ்சி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
- அடுப்பை குறைத்து 7 நிமிடம் மூடி வேக விடவும். வேகும் போது சிறிது தண்ணீர் தெளிக்கவும். அடுப்பை நிறுத்தி விடவும்.
- ஆறிய பின்னர் மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- தேவைப்பட்டால் உப்பு, புளி சேர்க்கவும்.
- ருசி விரும்பியது போல இருந்தால், வேறு கிண்ணத்தில் மாற்றவும்.
- எண்ணெய் சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.
- தாளித்ததை அரைத்த விழுதில் சேர்க்கவும்
பரிமாற பரிந்துரைப்பது
- இந்த ஆரஞ்சு கலர் கேரட் சட்னி இட்லி, தோசைக்கு மிகவும் ஏற்றது.
- இதை சூடான சாதம், நீர் தோசை, ஆப்பம், இடியாப்பம் மற்றும் சப்பாத்தியுடன் பரிமாறலாம்.
- சாண்விட்ச் செய்யும் போது கேரட் சட்னியை சாஸுக்கு பதில் தடவலாம்.