மசாலா மோர்
மோர் என்பது கொழுப்பு சத்து நிறைந்த பாலை கடைந்து வெண்ணெய் எடுத்த பின்னர் கிடைக்கும் ஒரு பானமாகும். எனது தந்தை சிறு வயதில் என்னிடம் பகிர்ந்து கொண்டது நினைவிற்கு வருகிறது. எனது பாட்டி வீட்டில் 3 பசு மாடுகள் வைத்திருந்தார். தினமும் பால் அதிகப்படியாகவே வீட்டில் இருக்கும். தினமும் உபயோகத்திற்கு எடுத்துகொண்டதற்கு போக மீதி இருக்கும் பாலை பானையில் உறை ஊற்றி வைப்பார்கள். அடுத்த நாள் அதை எனது பாட்டி மத்தை கொண்டு கடைவார்கள். சிறிது நேரம் கடைந்த பின்னர் வெண்ணெய் மேலே மிதந்து வரும். இதை பொதுவாக குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். மீதமுள்ளதை நெய் காய்ச்சி வைத்துகொள்வார்கள். இது நீண்ட நாட்கள் வைத்து உபயோகிக்கலாம். இதில் மீதமுள்ளதே மோராகும். சற்று கொழுப்பு சத்து நிறைந்து புளிப்புடன் இருக்கும். இதை காலை சிற்றுண்டிக்கு பிறகு வெயில் ஆரம்பமாகும் நேரம் பயன்படுத்துவார்கள் அல்லது மதிய உணவிற்கு பயன்படுத்துவார்கள்.
தற்போது தயிருடன் தண்ணீர் கலந்து தயாரிப்பதையே மோர் எங்கின்றனர். அதிகமாக இப்போது யாரும் பாரம்பரியமாக தயாரிக்கும் மோரின் சுவையை சுவைத்திருக்க மாட்டார்கள். தயிரில் தண்ணீர் சேர்த்து தயாரிக்கப்படும் மோர் தற்போதுள்ள மற்ற பானங்களைவிட சுவையுடன் வெய்யிலின் தாக்கத்தை குறைக்கிறது. இதில் மிகவும் முக்கியமானது மசாலா மோர் ஆகும்.
மசாலா மோர் இந்தியாவில் எல்லா இடங்களிலும் சற்று சுவையில் மாற்றங்களூடன் பரிமாறப்படுகிறது. வட இந்தியாவில் இது சாஸ் அல்லது மத்தா என்ற அழைக்கப்படுகிறது. இதில் வறுத்து பொடித்த சீரகதூளுடன் கருப்பு உப்பு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறப்படுகிறது. கேரளாவில் தட்டிய இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து பரிமாறுவார்கள். இதை இங்கு சம்பரம் அல்லது மோர். இது பொதுவாக நீர் மோர் அல்லது தாளிச்ச மோர் எனப்படுகிறது.
இங்கு நான் குறிப்பிட்டுள்ள தாளிப்பு பொருட்களைகொண்டு வாசம்மிகுந்த மோர் தயாரிக்கலாம். நிச்சயம் இது பானமாகவோ அல்லது வெள்ளை சாதத்துடன் உண்ண ஏற்றது.
மசாலா மோர்
Ingredients
- கெட்டி தயிர் – 1 கிண்ணம்
- குளிர்ந்த தண்ணீர் – 1.5 கிண்ணம்
- பச்சை மிளகாய் – 1
- இஞ்சி – 1 அங்குல துண்டு
- சீரகம் – 1/4 தேக்கரண்டி
- கொத்தமல்லி தழை – 2 கொத்து (பொடியாக நறுக்கியது)
- உப்பு – சுவைக்கேற்ப
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 1/2 தேக்கரண்டி
- கடுகு – 4 தேக்கரண்டி
- பெருங்காயம் – 1/8 தேக்கரண்டி
- கருவேப்பிலை – 1 கொத்து
Instructions
- ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்றாக கடையவும்.
- குளிர்ந்த தண்ணீரை சேர்த்து பிளண்டர் அல்லது மத்து கொண்டு கடையவும். உங்களிடம் இரண்டும் இல்லாவிடில் மிக்ஸியில் அடித்து கொள்ளவும்.
- இஞ்சியை, பச்சை மிளகாய், சீரகம், சிறிதளவு கருவேப்பிலை அனைத்தையும் ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்.
- தட்டியவற்றை மோரில் கலந்து உப்பு சேர்க்கவும். கலந்து விட்டு உப்பு சரி பார்க்கவும். புளிப்பு குறைவாக இருந்தால் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை மோரில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- ஓரு சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடிக்கவிடவும். பெருங்காயம், கருவேப்பிலை சேர்க்கவும்.
- தாளித்ததை மோரில் சேர்த்து குளிர்ச்சியாக பரிமாறவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- கொழுப்பு சத்து அதிகமுள்ள மோராக வேண்டுமானால் தண்ணீர் குறைவாக சேர்க்கவும். நீர்க்க வேண்டுமானால் தண்ணீர் அதிகமாக சேர்த்து கொள்ளலாம்.
- குளிர் சாதன பெட்டியில் வைத்து குளிர்ந்த மோராக பரிமாறலாம். ஐஸ் கட்டிகள் சேர்த்தால் உடனே பரிமாறலாம்.
- வெயில் காலத்தில் சாதத்துடன் மோர் சேர்த்து ஊறுகாயுடன் உண்பது மிகவும் சுவையாக இருக்கும்.