குடமிளகாய் கொஜ்ஜூ
பூர்வீகமாக கர்நாடக சமயலறைகளில் சமைக்கப்படும் ஒரு சமையலை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன். அண்மையில் உடுப்பியில் உள்ள எனது தோழியின் புது மனை புகு விழாவிற்கு சென்ற போது கர்நாடகாவின் சமையலை ருசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு ஜோவர் ரொட்டி, கொஜ்ஜூ, பாலயா, பஜ்ஜி, கேசரி மற்றும் சாம்பார், ரசம், வத்தல் குழம்பு ஆகியவற்றை சுவைத்தேன். கொஜ்ஜூ என்பது புளி, தக்காளி, பொதுவாக கிடைக்கும் காய்கறிகளை கொண்டு மசாலா பொருட்கள் அரைத்து சேர்த்து செய்யப்படுவதாகும். இது ஏறக்குறைய தமிழ்நாட்டின் புளிகுழம்பு அல்லது ஆந்திராவின் புலுசுவை ஒத்திருக்கும். அந்த சுவையான சாப்பாட்டில் குடமிளகாய் கொஜ்ஜூவும் இடம்பெற்றிருந்தது. மெல்லிய துண்டுகளாக நறுக்கிய சிகப்பு வண்ணமான காரமான கொஜ்ஜூவை கேட்டு, கேட்டு உண்ணும்படி இருந்தது.
சமைக்கும் விதம், குறைவான நேரம், மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தயாரிப்பது எல்லாமே சுலபம். இதை இட்லி, தோசை, பொங்கல், சப்பாத்தி, டோஸ்ட் பிரட் மற்றும் சாதத்துடன் உண்ணலாம். மறக்கமுடியாத அபார சுவையில் உள்ள குடமிளகாய் கொஜ்ஜூவை சமைத்து உண்டு மகிழுங்கள்.
குடமிளகாய் கொஜ்ஜூ தயாரிப்பு முறை
குடமிளகாய் கொஜ்ஜூ
Ingredients
- குடமிளகாய் – 2 (நான் ஒரு பச்சை குடமிளகாய், ஒரு சிகப்பு குடமிளகாய் எடுத்துள்ளேன்)
- தக்காளி – 1 (நறுக்கியது)
- பூண்டு – 2 பற்கள் (நறுக்கியது)
- சாம்பார் தூள் – 1 தேக்கரண்டி
- வர மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- புளிக்கரைசல் – 1 தேக்கரண்டி (புளி – செர்ரி பழ அளவு அரை கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்தது)
- வெல்லம் – ஒரு சிறிய துண்டு (விரும்பினால்)
- உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் -2-3 தேக்கரண்டி
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
- கருவேப்பிலை – 1 கொத்து
- பெருங்காயம் – ஒரு சிட்டிகை
Instructions
- ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கருவேப்பிலை ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
- நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- நறுக்கிய தக்காளி ,குடமிளகாய் சேர்க்கவும். உப்பு சேர்த்து 5 நிமிடம் காய்களை வேகவிடவும்.
- மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சாம்பார் தூள் சேர்த்து 30 நொடிகள் வதக்கவும்.
- அடுத்து புளிக்கரைசல், வெல்லம் ( விருப்பபட்டால்) சேர்க்கவும். உப்பு சரி பார்த்து மூடி வைக்கவும்.
- 10 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- சுவையான கொஜ்ஜூ பரிமாற தயார்.
பரிமாற பரிந்துரைப்பது
- சுவையான சூடான கொஜ்ஜூ வடித்த சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.
வேறுபாடாக பரிந்துரைப்பது
- 4 தேக்கரண்டி தேங்காய் துருவலுடன், 1 தேக்கரண்டி வறுத்த எள் சேர்த்து அரைத்து கொஜ்ஜூவுடன் கலந்தால் குருமாபோல இருக்கும்.
- ஒரு கையளவு நிலக்கடலை, 2 தேக்கரண்டி வறுத்த எள் பொடித்து இறக்கும் முன்பு கலந்தால் நல்ல சுவையுடன் இருக்கும்.
- கொஜ்ஜூ சற்று தண்ணீராக இருந்தால் 2 தேக்கரண்டி அரிசி மாவை தண்ணீரில் கரைத்து கொதிக்கவிட்டால் கெட்டியாகிவிடும்.
- இதே முறையில் கத்திரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், பைனாப்பிள், தக்காளி மற்றும் சாம்பார் வெங்காயம் போன்றவற்றை செய்யலாம். காய்கள் எதுவும் சேர்க்காமல் செய்தால் அது புளிக்கொஜ்ஜூ ஆகும்.