மீன் வறுவல்
அசைவ பிரியர்களின் விருப்ப உணவில் ஒன்று மீனாகும். மீனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் சுவையில் வேறுபாடாக இருக்கும். சில மீன்களில் முள் அதிகமாக இருக்கும். முள் குறைவாக உள்ள மீன்களைவிட முள் அதிகமுள்ள மீன்கள் சுவை கூடுதலாக இருக்கும். குழந்தைகளுக்கு முள் குறைவாக உள்ள மீன்கள் உண்ண சுலபமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவது மீன் வறுவலைதான். ஆனால் பெரியவர்களுக்கு வறுவலைவிட குழம்பில் உள்ள மீன் உண்பதே நல்லது. பொரித்த மீன் பிரியர்கள் எண்ணெய் அதிகம் சேர்க்காமல் உண்ண வேண்டுமானால் அவனில் வைத்து அல்லது சுட்டு உண்பது சிறந்தது. மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் இம்முறையே ஆகும். குழந்தைகளுக்கு அடிக்கடி மீனை சேர்த்து கொள்வது கண்களுக்கும் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. கடைகளில் சுத்தம் செய்த மீனை வாங்கி சுலபமாக சமைத்து விடலாம். குழம்பு செய்வதைவிட வறுவல் செய்வது சுலபமே. எனவே செய்து பார்த்து உண்டு மகிழுங்கள்.
மீன் வறுவல் தயாரிப்புமுறை
மீன் வறுவல்
Ingredients
- மீன் துண்டுகள் – 1/2 கிலோ
- வர மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
- கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
- கருவேப்பிலை – 1 கொத்து
- எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
- உப்பு – 1 தேக்கரண்டி
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
Instructions
- மீனை சுத்தமாக கழுவி துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் வர மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், நறுக்கிய கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- எலிமிச்சை சாறு சேர்த்து மிருதுவான கலவையாக கலந்து கொள்ளவும்.
- கலந்த கலவையை மீன் துண்டுகள் மீது தடவி 10-15 நிமிடங்கள் ஊற விடவும்.
- குறைவாக எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கலாம். அல்லது அதிக எண்ணெய் ஊற்றியும் பொரிக்கலாம். (ஒரு பக்கம் வேக 2-3 நிமிடங்கள் ஆகும் .வெந்த பின்னர் அடுத்த பக்கம் திருப்பி பொட்டு வேகவிடவும்.)
பரிமாற பரிந்துரைப்பது
- வெள்ளை சாதம், குழம்புடன் பரிமாறலாம்.
வேறுபாடாக பரிந்துரைப்பது
- மைக்ரோவேவ் அவனில் மசாலா தடவி ஊறவைத்த மீனை கிரிலில் வைத்து எடுத்து சாலட், மற்றும் பிரட்டுடன் பரிமாறலாம்.
- மற்றொரு வித்தியாசமான முறை மீனை 7-8 நிமிடங்கள் நெருப்பில் சுட்டு எடுத்து பரிமாறலாம்.