கன்னியாகுமரி பொதி சோறு

கன்னியாகுமரி பொதி சோறு

(வாழை இலையில் கட்டப்பட்ட மதிய உணவு, வாழை இலையில் கட்டு சோறு, கேரள பொதி சோறு, பாட்டியின் பாரம்பரிய சிறப்பு மதிய உணவில் ஒன்று)

முந்தைய நாட்களில், மதிய உணவை நம் பாட்டிகள் ஒரு தனித்துவமான முறையில் கட்டுவார்கள். அந்த நாட்களில் அழகுநய உணவு பெட்டிகள் இன்று போல அதிகமாக இந்திய சந்தைகளில் கிடையாது. நீண்ட பயணம் அல்லது வேலைக்கு செல்லும் நம் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பாட்டிகள் மதிய உணவை வாழை இலையில் கட்டி அனுப்புவார்கள். அன்று குழந்தைகளும் இதே முறையில் கொண்டு செல்வர். என் அப்பா தனது குழந்தை நாட்களின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டது எனக்கு நினைவிருக்கிறது. அப்பாவும் அவரது தம்பியும் அருகில் உள்ள குளத்திற்கு குளிக்க செல்வார்கள். திரும்பி வரும்போது பக்கத்து வாழைத் தோட்டத்தில் வாழை அறுத்து வருவார்கள். வெறும் அருகில் உள்ள கல்லை பயன்படுத்தி அறுப்பார்கள். இது சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லவா? பிறகு பாட்டி வாழை இலையைப் பயன்படுத்தி உணவை பள்ளிக்கு அனுப்புவார்கள்.

சுத்தம் மற்றும் தனித்துவமான நறுமணம் மற்றும் சுவை ஆகியவைகள் கட்டு சோறு அல்லது பொதி சோற்றின் சிறப்பாகும். கன்னியாகுமரியிலிருந்து மும்பைக்கு திரும்பும் ரயில் பயணத்தின்போது என் பாட்டி மதிய உணவை இவ்வாறு கட்டி அனுப்பியபோது இதை சாப்பிட்டது எனது நினைவில் உள்ளது. மதிய உணவு கேரள சிவப்பு சம்பா அரிசி, அவியல், சம்மந்தி மற்றும் முட்டை ஆகியவற்றைக் கொண்ட ஒரு எளிமையான உணவு. எந்த கிரேவியும் தேவையில்லை. சில நேரங்களில் பாட்டி ஒரு மீன் வறுவல் அல்லது வீட்டில் இருக்கும் ஒரு ஸ்பூன் ஊறுகாயையும் வைப்பார். இது சூடான வாழை இலைகளில்(தீயில் வாட்டியது) கட்டப்படும். 4-5 மணி நேரம் கழித்து திறக்கப்பட்டபோது அது சுகமான உணவாக இருந்தது. இது எப்படி ருசிக்கப்படுகிறது என்பதை வார்தைகளால் விளக்க முடியவில்லை. அரிசி மற்றும் பிற பொருட்களுடன் கலந்த வாழை இலையின் கலவை சுவையை கூட்டியது. சுவையாக இருந்ததால் எப்போதும் சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிட்டேன். வாழை இலைகளை கிடைப்பது எளிது.இது சுற்றுச்சூழலுக்கு உகந்த மதிய உணவு பெட்டி.

இன்று என் பாட்டிக்கு 88 வயதாகிறது, இவை ஏக்கம் நிறைந்த நினைவுகளாக மாறிவிட்டன. நான் என் சொந்த பொதி சோறு எடுக்க முடிவு செய்தேன். கட்டு சோறு என்றும் அழைக்கப்படும் பொதி சோறு, கேரளா முழுவதும் வாழை இலைகளில் மதிய உணவை செய்யும் பாரம்பரிய வழியாகும். எங்கள் சொந்த இடம் கன்னியாகுமரி அப்போது கேரளாவின் ஒரு பகுதியாக இருந்தது. இங்கே எங்கள் கன்னியாகுமரி சிறப்பு கட்டு சோற்றைப் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

பொதிசோறு செய்ய விரிவான வீடியோ வழிமுறைகள்

பொதிசோறு செய்முறை

கன்னியாகுமரி பொதிசோறு

Prep Time30 minutes
Cook Time45 minutes
Course: Main Course
Cuisine: Indian
Servings: 2 people
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • கேரளா புழுங்கல் அரிசி – 3 கப்
  • வேக வைத்த முட்டை அல்லது ஆம்லேட் – 2
  • அவியல் – 2 கப்
  • சம்மந்தி – ஒரு பெரிய உருண்டை

Instructions

  • முதலில் அரிசியை நன்றாக வேக விடவும், ஏனெனில் கேரளா அரிசி வேக அதிக நேரம் ஆகும்.இந்த அரிசியை குக்கரிலோ அல்லது பாரம்பரிய முறையில் வடிகட்டி சமைக்கலாம்.
  • அடுத்து அடுப்பில்,முழு முட்டையை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.இதற்கு பதில் ஆம்லேட் கூட செய்யலாம்.
  • அரிசியும்,முட்டையும் வேகும் சமயத்தில் அவியலுக்கு காய்களை நறுக்கவும்.அவியலை மண் பானையில் செய்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.
  • இறுதியாக தேங்காயில் சம்மந்தியை செய்யவும்.
  • வீட்டில் மீன் இருந்தால் மீனை கூட வறுத்து வைக்கலாம். இப்பொழுது என்னிடம் மீன் இல்லை.
  • சாதம் வெந்த உடனே வாழை இலையில் அதை பொட்டலம் ஆக்க வேண்டும். சூடான சாத்ததில் செய்தால் தான் ருசி கிடைக்கும்.
    பொதிசோறு செய்முறை
  • வாழை இலையை தூசு இல்லாதவாறு நன்றாக கழுவவும்.
    பொதிசோறு செய்முறை
  • வாழை இலையை அடுப்பில் வைத்து மிதமான திறந்த சுட்டில் படத்தில் காண்பித்தது போல் சூடாக்கவும். அப்படி செய்தால் தான் இலையை மடிக்க சுலபமாக இருக்கும். இது இலைகளிருந்து கிருமிகளை சுத்தம் செய்ய உதவும்.
    பொதிசோறு செய்முறை
  • ஒரு மேஜையின் மீது அல்லது தட்டையான மேற்பரப்பின் மேல் செய்திதாளை வைத்து அதன் மேல் வாழை இலையை வைக்கவும்.
    பொதிசோறு செய்முறை
  • தேவையான அளவு அரிசியை அதில் நடுவே வைக்கவும். அதன் மேல் அவியல், சம்மந்தியை தாராளமாக வைக்கவும். பின் முட்டையை வைக்கவும். ஊறுகாய் பிரியர்கள் கொஞ்சம் ஊறுகாயை வைக்கலாம்.
    பொதிசோறு செய்முறை
  • இலையை படத்தில் காண்பித்தது போல் மடக்கவும்.வீடியோ பதிவிலும் பாருங்கள்.
    பொதிசோறு செய்முறை
  • இலை மடித்த உடன் அதை செய்தி தாள் வைத்து பொட்டலம் செய்யவும். பிரியாமல் இருக்க ரப்பர் பேண்ட், சணல் உபயோகப்படுத்தலாம். முன்பெல்லாம் வாழை நார் பொட்டலம் கட்ட உபயோகப்படுத்துவார்கள். உங்கள் மதிய சாப்பாடு தயார்.
    பொதிசோறு செய்முறை

பொதிசோறு பரிமாற பரிந்துரைப்பது

  • இந்த பொதி சோறு 2 மணி நேரமாவது வாழை இலையில் இருந்தால் தான் வாழை இலையின் சுவை, அவியல், சம்மந்தி உடன் சேர்ந்து சுவை கூடும்.
  • அந்த பாரம்பரிய பொதி சோறு போன்று சுவை வரும்.


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.