தயிர் சாதம்
தென்னிந்திய சாப்பாடு தயிர்சாதம் இல்லாமல் முடிவு பெறுவது இல்லை. தயிர் சாதம் முக்கியமான உணவு வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆடம்பர விருந்தாக இருந்தாலும் சரி, சாதாரண விருந்தாக இருந்தாலும் இது மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ள ஒன்றாகும். நிறைய கோயில்களில் தயிர் சாதம் கடவுளுக்கு பிரசாதமாக வைக்கப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற திருமலை கோயிலில் லட்டு பிரபலமாகவும், பக்தர்களுக்கு வேறு பிரசாதங்கள் வழங்கப்பட்டாலும் கடவுளுக்கு பிரசாதமாக தயிர் சாதம் படைக்கப்படுகிறது. இதுவே தென்னிந்தியாவில் தயிர் சாதத்தின் சிறப்பம்சமாகும்.
நான் படிக்கும் போது விடுதியிலிருந்து இஞ்சினியரிங் கல்லூரி தொலைவில் இருந்ததால், கல்லூரிக்கு மதிய உணவு பெட்டி எடுதத்துச் செல்ல வேண்டியிருந்தது. மதிய உணவிற்கு எனது விருப்பம் தயிர் சாதம் தான். இதில் எனக்கு பிடித்த விதத்தில் ஒவ்வொரு விதமாக மாற்றிகொள்வேன். சில நாட்கள் நறுக்கிய வெள்ளரிக்காய், துருவிய கேரட், பச்சை மாங்காய் துண்டுகள், மாதுளம்பழம் இதில் ஏதேனும் ஒன்றை சேர்த்துகொள்வேன். தயிர் சாதத்தில் மேலே மாதுளம் பழம் போட்டு அதனுடன் வடு மாங்காய் ஊறுகாய் அல்லது பருப்பு பொடி அல்லது கருவேப்பிலை பொடி சேர்த்து உண்பதை மிகவும் விரும்புவேன். எனது குழந்தைகள் இரவு உணவிற்கு தயிர் சாதத்துடன் உருளை கிழங்கு பொரியல் அல்லது வத்தல்குழம்பு சேர்த்து உண்பதை விரும்புவார்கள். நீங்களும் சுவையான சத்தான தயிர் சாதம் செய்து பாருங்கள். உங்கள் குழந்தைகளும் என்னைப்போல தயிர் சாத பிரியர்கள் ஆகிவிடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
தயிர் சாதம் தயாரிப்புமுறை
தயிர் சாதம்
Ingredients
- அரிசி – 1 கிண்ணம்
- தண்ணீர் – 3 கிண்ணம்
- ஆற வைத்த பால் – 1.5 கிண்ணம்
- தயிர் – 1.5 கிண்ணம்
- கிரீம் – 2 மேசைக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி தழை – ஒரு கையளவு (பொடியாக நறுக்கியது)
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
- வர மிளகாய் – 2
- பச்சை மிளகாய் – 1
- இஞ்சி – 1/2 அங்குல துண்டு (பொடியாக நறுக்கியது)
- கருவேப்பிலை – 1 கொத்து
Instructions
- அரிசியுடன் 3 கிண்ணம் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக குழைவாக வேகவைக்கவும். (குறிப்பு: மீதமான சாதம் இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சூடுபடுத்தவும் )
- சாதம் வெந்தவுடன் நன்றாக மசித்துகொள்ளவும்.
- பாலை சேர்த்து பால் முழுவதும் சாதம் உறிஞ்சும் வரை கலக்கவும்.
- ஆறிய பாலை சேர்ப்பதால் சாதமும் நன்றாக குளிர்ந்துவிடும். சாதம் சூடாக இருந்தால் ஆறியபின்னர் தயிர் சேர்க்க வேண்டும். இப்படி சேர்ப்பதால் தயிர் புளிப்பாவதை தடுக்கலாம்.
- கிரீம் மற்றும் தயிர் சேர்த்து கலக்கவும்.
- தாளிக்க எண்ணெய் சூடாக்கி கடுகு வெடிக்கவிடவும்.
- கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரைவிடவும்.
- வர மிளகாய், கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் விடவும். (நீங்கள் விரும்பினால் முந்திரி, திராட்சை சேர்க்கலாம்)
- தாளித்தவற்றை சாதத்தில் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலந்துவிடவும்.
- தயிர் சாதம் பரிமாற தயார். துருவிய கேரட், நறுக்கிய வெள்ளரிக்காய், மாதுளை, திராட்சை, ஆப்பிள், அன்னாசி பழம் கொண்டு அலங்கரிக்கலாம்.
பரிமாற பரிந்துரைப்பது
- தயிர் சாதத்தை அதிகம் விரும்புபவர்களுக்கு எதுவும் தேவையில்லை.
- தென்னிந்தியாவில் தயிர் சாதம் காரமான ஊறுகாயுடன் பரிமாறப்படுகிறது.
- சிலர் தயிர் சாதத்தை காரமான குழம்பு வகைகளுடன் உண்பதை விரும்புவார்கள். அவை சிக்கன் குழம்பு, சாம்பார், புளிக்குழம்பு ஆகியவை ஆகும்.
வேறுவிதமாக பரிந்துரைப்பது
- மஹாராஷ்ராவில் தயிர் சாதம் தஹி புட்டி என்று அழைக்கப்படுகிறது. இதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து செய்வர்.
- அரிசிக்கு பதில் சேமியா சேர்த்து “தயிர் சேமியா” தயாரிக்கலாம்.
குறிப்பு
- இஞ்சி, பச்சை மிளகாய் சாப்பிடும்போது வாயில் படுவதை விரும்பாதவர்கள் அரைத்து சேர்த்துகொள்ளலாம்.