கோதுமை ரவை கட்லட்
மாலை நேர சிற்றுண்டியாக கட்லட் அல்லது பஜ்ஜியை யார்தான் விரும்பமாட்டார்கள். நிறைய உணவு வகைகள் உடலுக்கு நல்லவையாக இருப்பதில்லை. ஆனால் கோதுமை ரவை கட்லட் மிகவும் சத்தான உடலுக்கு எந்தகேடும் விளைவிக்காத ஒரு உணவாகும். பயமில்லாமல் அனைவரும் உண்ணலாம். இந்த சம்பா கோதுமை ரவை கட்லட் நார்சத்து அதிகமுள்ளது. உடைத்த கோதுமையில் தயாரிப்பதால், காய்கறிகளில் உள்ளவிட்டமினும், பன்னீரில் உள்ள கால்சியமும் கிடைக்கிறது. எண்ணெயில் பொரிக்காததால் மிகவும் சத்தானதாகும்.
குழந்தைகள் எப்பொழுதும் உப்புமாவை விரும்புவதில்லை. இந்த கட்லட் அவர்களுக்கு முழு சாப்பாடுகொடுத்த திருப்தியை நமக்கு தரும். உண்மையில் நான் எப்பொழுது காலை சிற்றுண்டிக்கு கோதுமை ரவை உப்புமா செய்தாலும் மாலையில் இந்த கட்லட்டை மீதமான உப்புமாவை வைத்து செய்துவிடுவேன். நீங்கள் இம்முறை அல்லது ரவையை வேகவைத்தும் செய்யலாம். பெரியவர்களும் கோதுமை ரவையில் வேறுவிதமான ஒரு உணவை எதிர்பார்க்கிறார்கள். நிச்சயமாக இது ஒரு புதிய முயற்சி எனவே அவசியம் முயற்சித்து பாருங்கள்.
உண்வு கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு நிச்சயம் இது ஒரு முழுமையான சத்து நிறைந்த உணவாகும். கோதுமை பிரட்டில் உள்ளே வைத்தும் (ஸ்டஃப்) டோஸ்ட் செய்தும் கொடுக்கலாம். இது நிச்சயமாக விரும்பி உண்ணும் வகையான வெஜிடேரியன் பர்கர் போல இருக்கும். அதிகமாக இருந்தால் குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும்போது செய்துகொள்ளலாம்.
நான் இதில் சோயா சாஸ், சில்லி சாஸ் உபயோகித்துள்ளேன், சைனீஸ் ருசியில் வருவதற்காக. நீங்கள் இந்திய ருசியில் வேண்டுமானால் 1 தேக்கரண்டி வர மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
கோதுமை ரவை கட்லட் தயாரிக்க வீடியோ வழிமுறைகள்
கோதுமை ரவை கட்லட்
கோதுமை ரவை கட்லட்
Ingredients
- உடைத்த கோதுமை (சம்பா கோதுமை ரவை) -1/2 கிண்ணம்
- பன்னீர் – ½ கிண்ணம் (துருவியது)
- காய்கறிகலவை (கேரட், உருளைகிழங்கு, குடமிளகாய், சோளம்) – ¾ கிண்ணம்
- வெங்காயம் – 1 சிறியது (¼ கிண்ணம் அளவு நறுக்கியது)
- பூண்டு – 3 பற்கள் (பொடியாக நறுக்கியது)
- சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
- சில்லி சாஸ் – 1 தேக்கரண்டி
- உப்பு – சுவைகேற்ப
- கோதுமை மாவு/ பிரட் தூள் – 2-3 மேசைக்கரண்டி
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
Instructions
- ½ கிண்ணம் கோதுமை ரவைக்கு 1 கிண்ணம் தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும்.
- தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிது உப்பு சேர்க்கவும். அடுப்பை குறைத்து கோதுமை ரவை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
- சில நிமிடங்கள் வைத்து அடுப்பை அணைத்து 5 நிமிடங்கள் மூடிவைக்கவும். கோதுமை ரவை இதில் வெந்துவிடும். இதற்கு பதிலாக மீதமான கோதுமை ரவை உப்புமாவையும் பயன்படுத்தலாம்.
- இந்த நேரத்தில் காய்கறிகளை துருவி அல்லது பொடியாக நறுக்கிகொள்ளவும். நறுக்கிய காய்கறிகளை ஒரு கிண்ணத்தில் எடுத்துகொள்ளவும். மைக்ரோவேவ் அவனில் பாதியாக வேகவைத்துகொள்ளலாம். ஆனால் நான் அப்படியே எடுத்துள்ளேன்.
- இதனுடன் வேகவைத்த கோதுமை ரவை, துருவிய பன்னீர், சோயா சாஸ், சில்லி சாஸ் அனைத்தையும் கலந்துகொள்ளவும்.
- தண்ணீர் சற்று அதிகமாக இருந்தால் பிரட் தூள் அல்லது கோதுமை மாவு சேர்த்துகொள்ளவும்.
- ருசி சரி பார்த்து கொள்ளவும். சிறிதளவு மாவை எடுத்து கட்லட் வடிவத்திற்கு செய்துகொள்ளவும்.
- அடுப்பில் ஒரு தாவாவைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கட்லட்டை வைத்து இருபுறமும் நன்றாக சிவக்கவிட்டு எடுக்கவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- சுவையான கட்லட்டை தக்காளி சாஸ் அல்லது தயிர் சாஸுடன் மாலை நேர டிபனுக்கு பரிமாறவும்.
- இந்த கட்லட்டை பிரட் சாண்ட்விச் அல்லது பர்கர் செய்ய பயன்படுத்தலாம்.