கோழி ரசம்
ரசம் எனப்படுவது மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து செய்யப்படும் ஒரு குழம்பு வகையை சேர்ந்ததாகும். தினமும் செய்யப்படும் சமையலில் இடம்பெறுபவை பருப்பு குழம்பு, ரசம் போன்றவையாகும். செட்டிநாடு மக்கள் அசைவ உணவை சைவ உணவிற்கு சமமாக விரும்புவார்கள். அவர்கள் சிக்கனிலும், மட்டனிலும் ரசம் செய்வார்கள். எனது சிநேகிதி சில வருடங்களுக்கு முன்பு எனக்கு தயாரித்து கொடுத்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு சிக்கன் கிளியர் சூப் மற்றும் ரசமும் மிகவும் விருப்பமானவையாகும்.
தென்னகத்தில் தயாரிக்கப்படும் சிக்கன் சூப் குளிர் காலம் மற்றும் மழை காலத்தில் ஏற்படும் ஜலதோஷத்திற்கு மிகவும் நல்லது. அந்த சமயங்களில் நாட்டு கோழியில் செய்வார்கள். இப்போதும் நான் நாட்டு கோழியில் தயாரிப்பதையே பரிந்துரைப்பேன். ஏனெனில் அதில் தயாரிப்பதால் கிடைக்கும் சுவை அபாரமாக இருக்கும். அமெரிக்காவில் கேம் ஹென்னின் சுவை ஏறக்குறைய இதேபோல் இருக்கும். நீங்கள் மட்டன் அல்லது வான் கோழி கறியிலும் ரசம் தயாரிக்கலாம்.
சிக்கன் ரசம் விரைவாக தயாரித்துவிடலாம். வெள்ளை சாதத்துடன் உண்ண ஏற்றது. நான் தயாரிக்கும்போதெல்லாம் எனது குடும்பத்தினர் மிகவும் விரும்பி உண்பார்கள். எனவே நீங்களும் முயற்சித்து பாருங்கள்.
கோழி ரசம்
Ingredients
- சிக்கன் – 1/4 கிலோ (எலும்பு சேர்ந்த துண்டுகள்)
- சாம்பார் வெங்காயம் – 15 (நறுக்கியது)
- தக்காளி – 1 (நறுக்கியது அல்லது கைகளால் மசித்தது)
- பச்சை மிளகாய் – 1
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- சிக்கன் மசாலா அல்லது கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
- கொத்தமல்லி தழை – 3 கொத்து (பொடியாக நறுக்கியது)
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- மிளகு – 1 தேக்கரண்டி
- சீரகம் – 1 தேக்கரண்டி
- பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி
- வர மிளகாய் – 1
- பூண்டு பற்கள் – 5 அல்லது 6
- கருவேப்பிலை – 6 இலைகள்
Instructions
- குக்கரில் எலும்புடன் உள்ள சிக்கன் துண்டுகள், பச்சை மிளகாய், வெங்காயத்தில் பாதி அளவு சேர்த்து, 5-6 கிண்ணம் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- 7-8 விசில் வரும்வரை வைக்கவும். நமக்கு எலும்புகளில் உள்ள சாறு முழுவதும் இறங்க வேண்டும்.
- இந்த நேரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றிரண்டாக தட்டிகொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து தட்டிய மசாலா பொருட்களை சேர்த்து தக்காளி சேர்க்கவும். 1 அல்லது 2 நிமிடங்கள் வதக்கவும்.
- குக்கர் ஆறிய பின்னர் மூடியை திறந்து எலும்புகள் சேர்ந்த சிக்கன் சாறை தாளித்ததில் ஊற்றவும். சிலர் துண்டுகள் இல்லாமல் சாறை மட்டும் சேர்ப்பார்கள்.
- சிக்கன் மசாலா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். சூடாக பரிமாறவும்.
கோழி ரசம் தயாரிக்க விரிவான படிமுறைகள்
எலும்புகளுடன் உள்ள சிக்கன் துண்டுகளை குக்கரில் போட்டு 5-6 கிண்ணங்கள் தண்ணீர் சேர்த்து சிறிதளவு சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 7-8 விசில்கள் வரும்வரை விடவும். எலும்புகளில் உள்ள சாறு முழுவதும் இறங்கும்.
இந்த நேரத்தில் மசாலா தயாரித்து கொள்ளலாம். பூண்டு பற்கள், மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், வர மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அரைத்த மசாலாவை ஒரு நிமிடம் வதக்கவும். மீதமுள்ள வெங்காயம் சேர்த்து கொள்ளவும்
நறுக்கிய தக்காளி சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.
குக்கர் ஆறிய பின்னர் சிக்கன் மற்றும் அதனுடன் சேர்ந்த தண்ணீர் எல்லாவற்றையும் வாணலியில் வதக்கியதுடன் சேர்க்கவும். சிக்கன் மசாலா பவுடர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கவும். ருசி பார்த்து உப்பு தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும்.
ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். பரிமாறும் வரை மூடி வைத்தால் அதன் மணம் குறையாமல் இருக்கும்.
பரிமாற பரிந்துரைப்பது
- கோழி ரசம் பொதுவாக வெள்ளை சாதத்துடன் கோழி வறுவலுடன் பரிமாறப்படும். பாரம்பரியமாக வெந்த சிக்கன் துண்டுகளுடன் மசாலா சேர்த்து வறுத்து கொள்வார்கள். அதன் சுவை நன்றாக இருக்கும். மீதமுள்ள சாறை ரசம் செய்வார்கள்.
- பிரட் டோஸ்ட் செய்து அதனுடன் கோழி ரசத்தை பரிமாறலாம். குளிர் காலத்தில் அதுவும் ஜலதோஷம் இருக்கும் போது இது மிகவும் உண்ண ஏற்ற உணவாக இருக்கும்.
வேறுபாடாக பரிந்துரைப்பது
- நீங்கள் இதே முறையில் மட்டன் ரசம், வான் கோழி ரசம் தயாரிக்கலாம்.
- புளிப்பு சுவை வேண்டுமானால் பரிமாறும் முன்னர் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து கொள்ளலாம்.