ப்ரைடு ரைஸ் செய்ய மீதமான சாதம் அல்லது குளிர்சாதனப்பெட்டியில் வைத்த சாதம் ஏற்றது. மீதமான சாதம் இல்லையெனில் 2 டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடித்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். சாதம் சூடாக இருந்தால் குழைந்துவிடும். பாஸ்மதி அரிசி அல்லது மற்ற எந்த அரிசியிலும் செய்யலாம்.
முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொள்ளவும். ஒரு கடாயில் ஆயில் ஊற்றி முட்டையை சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கிளறவும். இதை தனியாக எடுத்து வைக்கவும்.
கடாயில் ஆயில் ஊற்றி நறுக்கிய கறி துண்டுகள் சேர்த்து கிளறவும். உப்பும், மிளகும் சிரிதளவு சேர்க்கவும். கறி வேகும் வரை அடுப்பை குறைத்து வைத்து கிளறவும். வெந்த பின்னர் கறியை ஓரத்தில் ஒதுக்கி நடுவில் சிறிது இடம் வரும் வரும்படி நகற்றிவிட்டு கொள்ளவும்.
நடுவில் சிறிது ஆயில் சேர்த்து நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்.
சோயா சாஸ், உப்பு, அஜினோமோட்டோ சேர்த்து காய்கறிகள், கறியுடன் 1 நிமிடம் வதக்கவும். (அடர் வண்ணம்) சோயா சாஸ் உபயோகித்தால் நிறம் சற்று அதிகமாகவும், வெளிர் வண்ண சோயா சாஸ் உபயோகித்தால் நிறம் சற்று வெளிர் நிறமாகவும் பிரைடு ரைஸ் இருக்கும். நான் இங்கு (அடர் வண்ணம்) சோயா சாஸ் உபயோகித்துள்ளேன்.
ஆற வைத்த சாதத்தை இதனுடன் சேர்த்து கலந்து வதக்கவும். சோயா சாஸ் அனைத்துடனும் கலக்கும் வரை கிளறவும்.
இறுதியாக நறுக்கிய வெங்காய தாள், முட்டை வறுத்தது கலக்கவும். சூடாக பரிமாறவும்.