பச்சரிசியை கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குறைந்தது 5 மணி நேரம் ஊற வைக்கவும். நீங்கள் காலையில் தயாரிக்க விரும்பினால், இரவில் கூட ஊற வைத்து கொள்ளலாம். பச்சரிசிக்கு பதிலாக பச்சரிசி பாதி, புழுங்கலரிசி பாதி என இரண்டும் சம அளவு எடுத்து கொள்ளலாம்.
ஊற வைத்த அரிசியை மிருதுவாக அரைத்து கொள்ளவும். கொரகொரப்பாக இருக்க கூடாது. கொழுக்கட்டை தயாரிக்கும் போது மிருதுவாக இருக்கும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தைவிட நீர்க்க இருக்கும், படி நீர் தோசை மாவு போல கரைத்து கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து கரைத்து வைத்த மாவை ஊற்றி குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
5 நிமிடங்களில் மாவு கெட்டியாக தொடங்கும். மேலும் சில நிமிடங்கள் கிளறினால் மாவு கெட்டியாகி விடும். அடுப்பை அனைக்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
பூரணம் தயாரிக்க
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுத்தம் பருப்பை நைஸாக அரைத்து கொள்ளவும்.
ரவை, ஊற வைத்த கடலை பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, தேவையான அளவு உப்பை அரைத்த மாவுடன் கலக்கவும். உள்ளே வைக்க பூரணம் தயார்.
கொழுக்கட்டை தயாரிக்க
ஒரு சிறு அளவு மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து தேய்த்து உருண்டையாக்கி கொள்ளவும்.
ஒரு உருண்டையை பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலையில் வைத்து விரல்களால் அல்லது ஒரு தட்டால் அழுத்தி தட்டையாக்கவும்.
மெதுவாக தட்டியதை எடுத்து இட்லி தட்டு அல்லது ஸ்டீமர் பிளேட்டில் வைக்கவும். மீதமுள்ள எல்லா மாவையும் இதே போன்று தயாரித்து வைக்கவும்.
ஒரு ஸ்பூன் பூரணத்தை எடுத்து தட்டில் வைத்த மாவின் ஒரு பக்கத்தில் வைக்கவும். மாவை மூடி அழுத்தி விடவும்.
10 நிமிடங்கள் வேக விடவும். ஆற வைத்து கொழுக்கட்டையை இட்லி தட்டில் இருந்து எடுக்கவும்.