கம்பை கழுவி 1/2 கிண்ணம் தண்ணீரில் 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
மிக்சியில் ஒன்றிரண்டாக உடைத்து கொள்ளவும். நீங்கள் கடையில் கிடைக்கும் கம்பு மாவிலும் கூழ் தயாரிக்கலாம். ஆனால் நான் முழு தானியத்தில் செய்வதையே விரும்புவேன். இறுதியில் இதன் சுவை நன்றாக இருக்கும்.
மீதமுள்ள 1 கிண்ணம் தண்ணீர் சேர்த்து கம்பை வேக வைக்கவும். நீங்கள் குக்கர் உபயோகித்தும் தயாரிக்கலாம். பாத்திரத்திலும் செய்யலாம். பாத்திரத்தில் வேக 1/2 மணி நேரம் வரை ஆகும். இதுவே கம்பு சோறு அல்லது கம்பு சாதம், இதை மதிய உணவாக ஏதேனும் குழம்பு அல்லது ஊறுகாயுடன் உண்ணலாம். நான் எப்போதும் இரவு உணவிற்கே தயாரிப்பேன். மீதமுள்ள கம்பு சாதத்தை அடுத்த நாள் காலையில் கரைத்து கூழாக உண்போம்.
மீதமுள்ள கம்பு சாதத்தை ஆற விடவும். ஆறிய பின்னர் எலுமிச்சை விட சற்று பெரிய அளவில் உருணடைகளாக செய்து குடிக்கும் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு வைக்கவும்.
இது தண்ணீரில் இரவு முழுவதும் அல்லது குறைந்தது 2 மணி நேரமாவது இருக்க வேண்டும். சற்று புளித்தால் தான் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
நீங்கள் சாப்பிட தயாராகும்போது அந்த உருண்டையை தண்ணீரில் கரைத்து கடைந்த மோர் மற்றும் உப்பு போடவும். கம்பங்ககூழ் பரிமாற தயார்.
நீங்கள் இந்த கஞ்சி அல்லது கூழை நறுக்கிய சாம்பார் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயுடன் பரிமாறலாம்.